முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள 'மக்கள் பாதுகாப்பு வலயம்' உள்ளிட்ட பகுதிகளை நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு 7:00 மணி தொடக்கம் சிறிலங்கா படையினர் சகலவிதமான நாசகார ஆயுதங்களையும் பயன்படுத்தி தொடர்ச்சியாக தாக்குதலை நடத்தி வருவதாக வன்னியில் இருந்து 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார். இத்தாக்குதலினால் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் தூங்கிக்கொண்டிருந்த பெருமளவிலான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் காயமடைந்தும் உள்ளனர்.
பெருமளவிலான மக்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் பதுங்குகுழிகளுக்குள்ளும் கூடாரங்களிலும் காணப்படுகின்றன. காயமடைந்தவர்களில் பலர் காயங்களுடன் தரையில் கிடந்தவாறு தங்களைக் காப்பாற்றுமாறு அவலக்குரல் எழுப்புவதாகவும் 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார். அத்துடன் வீதி, வீதியாக மக்களின் உடலங்கள் காணப்படுவதாகவும் மீட்க முடியாத அளவுக்கு சிறிலங்கா படையினரின் தாக்குதல்கள் தொடர்ச்சியாகவும் தீவிரவமாகவும் இருக்கின்றது எனவும் காயமடைந்தவர்களை எடுத்துச் செல்வதற்கு பணியாளர்கள் எவரும் இல்லை என்றும் 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார். இதுவரையில் 1,112 பேரின் உடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கணக்கானோர் காயமடைந்த நிலையில் பலத்த சிரமங்களுக்கு மத்தியில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் மீட்கப்பட முடியாத நிலையில் இருப்பதால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,000-க்கும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. முள்ளிவாய்க்காலில் இயங்கும் தற்காலிக மருத்துவமனைக்கு காயமடைந்த நிலையில் 814 பேர் இதுவரையில் கொண்டு வரப்பட்டுள்ளனர். இதில் 112 சிறுவர்களும் அடங்குவதாக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவ அத்தியகட்சகர் வீரகத்தி சண்முகராஜா தெரிக்கின்றார். மருத்தவமனைக்கு கொண்டுவரப்பட்ட 257 உடலங்களில் 67 பேர் சிறுவர்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளையில் சிறிலங்கா படையினரின் தாக்குதல்களில் நட்டாங்கண்டல் மருத்துவமனையும் கடுமையாக சேதமடைந்துள்ளதாக 'புதினம்' செய்தியாளர் தெரிவிக்கின்றார். |
No comments:
Post a Comment