Thursday, May 28, 2009

விடுதலைப்புலிகளின் தலைவரின் உருவத்தை கொண்ட இன்னொருவர்:காவற்துறைப் பேச்சாளர் அதிர்ச்சி தகவல்

கொட்டாஞ்சேனையில் சுடப்பட்ட இளைஞரின் தந்தை விடுதலைப்புலிகளின் தலைவரின் உருவத்தை ஒத்தவர்: காவற்துறைப் பேச்சாளர்
 
கொழும்பு கொட்டாஞசேனை புதுச்செட்டித்தெருவில் இனந்தெரியாத ஆயுத தாரிகளின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞரின் தந்தைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் இடையில் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளதாக பாதுகாப்பு தரப்பினருககு தவல்கள் கிடைத்துள்ளது என்று காவற்துறை ஊடகப்பேச்சாளரும் சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இளைஞனின் தந்தைக்கும் இடையில் வியாபார நடவடிக்கைகள் பல முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவை தொடர்பாக தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடைய உருவத்திற்குச் சமனானதொரு உருவத்தையுடைய சந்தேக நபர் ஒருவரை பாதுகாப்பு தரப்பினர் இனங்கண்டுள்ளனர்.

கொழும்பு கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான சற்குணராஜா என்பவரே இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளார்.

கொட்டாஞ்சேனை புதுச்செட்டித்தெருவில் நேற்று முன்தினம் பிற்பகல் இனந்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி படுகாயமடைந்த விமலன் என்பவரின் தந்தையான சற்குணராஜாவே இவ்வாறு இனங்காணப்பட்ட சந்தேக நபர் எனத் தெரிவந்துள்ளது. அவர் தற்போது இந்தியாவில் உள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சியில் படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது பிரபாகரன் தங்கியிருந்ததாக கூறப்படும் பதுங்கு குழியில் இருந்து பெருமளவிலான புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றுள் பிரபாகரனும் அவரது உருவத்தை ஒத்த நபரொருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமொன்று இருந்துள்ளது. இந்தப் புகைப்படம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அது ஊடகங்களிலும் வெளியிடப்பட்டது.

இதனையடுத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனைப் போன்ற போலி நபர் ஒருவர் இருப்பதாக வெளிவந்த செய்தி அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் பரபரப்பை எற்படுத்தியது. இந்நிலையில் குறித்த புகைப்படத்தில் இருந்த போலிப் பிரபாகரன் குறித்த தீவிர விசாரணைகளை நடத்தி வந்த பாதுகாப்பு தரப்பினர் அவர் கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் என அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.

இருப்பினும் அந்தச்சந்தேக நபருடைய புகைப்படம் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட சந்தர்ப்பத்தின்போது அவர் இந்தியாவுக்கு தப்பிச்சென்றுள்ளார் என்று பாதுகாப்பு தரப்பினர் நடத்திய விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இருந்தாலும் இது தொடர்பில் கொட்டாஞ்சேனை காற்துறையினர் உட்பட விசேட காவற்துறை குழுவொன்று தீவிர விசாரணைகளை நடத்திவருகின்றனர்
.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails