தினத்தந்தி:விடுதலைப்புலி தளபதி வவுனியா முகாமில் கைது?
பெண் விடுதலைப்புலி தளபதி தமிழினி வவுனியா முகாமில் கைது
குடும்பத்தினருடன் தங்கி இருந்தபோது ராணுவத்திடம் பிடிபட்டார்
கொழும்பு, மே.30-
வவுனியா முகாமில் குடும்பத்தினருடன் தங்கி இருந்த பெண் விடுதலைப்புலி தளபதி தமிழினியை இலங்கை ராணுவத்தினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
தமிழினி கைது
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெண்கள் பிரிவு தளபதியாக இருந்து வந்தவர் தமிழினி. வவுனியாவில் உள்ள அகதிகள் முகாமில் இவர் தனது தாயார் சுப்பிரமணியம் கவுரி விஜயராஜா, சகோதரி மகேஸ்வரி ஆகியோருடன் தங்கி இருந்தார். அப்போது, தமிழினியை ராணுவத்தினர் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்தனர்.
தமிழினி கைதானது பற்றியும், அவர் எப்படி அகதிகள் முகாமுக்கு வந்தார்? என்பது பற்றிய விவரங்களும் ஆசியன் டிரிபிïன் பத்திரிகையின் இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.
அந்த தகவல்கள் வருமாறு:-
தாயாருடன் வந்தார்
முல்லைத்தீவு மாவட்டத்தில், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் இறுதிக்கட்டத்தை எட்டியதும், பாதுகாக்கப்பட்ட புதுமாத்தளன் பகுதியில் இருந்து ஏராளமான தமிழர்கள் உயிர் தப்புவதற்காக ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு அகதிகளாக வந்தனர். அப்போது புதுமாத்தளன் பகுதியில் இருந்து தமிழினியும் தனது தாயார் சுப்பிரமணியம் கவுரி விஜயராஜா, சகோதரி மகேஸ்வரி ஆகியோருடன் ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தார்.
தான் யார் என்பது அடையாளம் தெரிந்து விடாமல் இருப்பதற்காக தன்னிடம் இருந்த சயனைடு விஷ குப்பி, கைத்துப்பாக்கி ஆகியவற்றை தூக்கி எறிந்து விட்டு மக்களோடு மக்களாக கலந்து ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து விட்டார். அப்போது, உடன் வந்த அகதிகளுக்கு தமிழினி யார் என்று அடையாளம் தெரியவில்லை.
அகதி முகாமில் கைது
இதனால் தமிழினி மற்ற அகதிகளுடன் முகாமுக்கு சென்று தனது தயார் மற்றும் சகோதரியுடன் தங்கி இருந்தார். என்றாலும் அதன்பிறகு ராணுவத்தினர் முகாமுக்கு சென்று விசாரணை நடத்திய போது, தமிழினி பெண் விடுதலைப்புலி இயக்க தளபதி என தெரிந்து விட்டது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்தனர்.
பின்னர் தமிழினியிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்தன.
கல்லூரியில் படித்தவர்
தமிழினியின் உண்மையான பெயர் சிவத்தாய். பரந்தன் இந்து கல்லூரியிலும், கிளிநொச்சியில் உள்ள சென்டிரல் கல்லூரியிலும் படித்தவர். 1991-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு தமிழினி என்ற பெயர் சூட்டப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அவரது பதிவு எண் 1736.
நீர்வேலி என்ற இடத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமில் போர் பயிற்சி பெற்ற தமிழினிக்கு, முதலில் ஒரு கயிறு தொழிற்சாலையை கவனிக்கும் பொறுப்பும், அதன்பிறகு கிலாலியில் உள்ள பண்ணையை கவனிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனின் அலுவலகத்திலும் பணியாற்றி உள்ளார்.
மற்றொரு சகோதரி பலி
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெண்கள் பிரிவு தளபதியாக இருந்த நெஸ்மியா என்பவர் முகமலை என்ற இடத்தில் ராணுவத்துடன் நடந்த சண்டையில் பலியானதை தொடர்ந்து, அந்த பதவிக்கு தமிழினி நியமிக்கப்பட்டார்.
தமிழினியின் மற்றொரு சகோதரியான சாந்திலன் கடந்த 1998-ம் ஆண்டு பரந்தன் என்ற இடத்தில் ராணுவத்துடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment