தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் பொட்டு அம்மானின் உயிரிழப்பு குறித்து சந்தேகம் எழுந்துள்ளது.
பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தாக்குலில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் பொட்டு அம்மானின் சடலம் மீட்கப்படவில்லை.
எனவே, பொட்டு அம்மான் உயிருடன் இருக்கக் கூடுமென இலங்கை இராணுவம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்குடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர்களில் பொட்டு அம்மானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் கொல்லப்பட்டுள்ளதாக புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் அண்மையில் வானொலியொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.
பொட்டம்மான் ‐ கபில் அம்மான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பரவிவரும் வதந்திகளில் உண்மையில்லை:
விடுதலைப்புலிகளின் புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் பொட்டம்மான், அதன் இரண்டாம் நிலை பொறுப்பாளர் கபில் அம்மான் ஆகியோர் இராணுவப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பரவிவரும் வதந்திகளில் எந்த உண்மையில்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
பொட்டு, கபில் மாத்திரமல்ல பிரபாகரனையும் உயிருடன் பிடிக்கும் தேவை இருந்த போதிலும் கடுமையான யுத்தத்தின் போது ஒருவரை கொன்று விட்டு மற்றுமொருவரை கைதுசெய்வதென்பது இயலாத காரியம் என தெரிவித்துள்ள பொன்சேக்கா, இவர்கள் உயிருடன் பிடிக்கப்பட்டிருந்தால் பல முக்கிய தகவல்களை கண்டறிந்திருக்கலாம் என கூறியுள்ளார்.
பொட்டாம்மானின் சடலம் அடையாளம் காணப்படாததன் காரணமாகவே இவ்வாறான வதந்திகள் பரவி வருகின்றன. பொட்டம்மானின் சடலத்தை அடையாளம் காண படையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இறுதியாக நந்திக்கடல் பகுதியில் கடும் மோதல்கள் இடம்பெற்றன இதில் கொல்லப்பட்ட புலிகளின் சுமார் 100 சடலங்கள் மிதந்து கொண்டிருந்தன. இவற்றில் பல சடலங்கள் நீரில் மூழ்க்கியுள்ளன. அவற்றை மீட்க்கும் பணியில் சுழியோடிகள் ஈடுபட்டு, சடலங்கள் மீட்க்கப்பட்ட போதிலும் அவை அடையாளம் காணமுடியாத அளவில் பழுதடைந்த நிலையில் காணப்பட்டதாக சரத் பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment