பிரபாகரனை சுற்றிலும் பாதுகாப்பாக 1,000 தற்கொலை படை வீரர்கள்
பிரபாகரனை சுற்றிலும் பாதுகாப்பாக 1,000 தற்கொலை படை வீரர்கள்
இலங்கை ராணுவம் தகவல்
கொழும்பு, மே.8-
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை சுற்றிலும் பாதுகாப்பாக 1,000 தற்கொலை படை வீரர்கள் இருப்பதாக, இலங்கை ராணுவம் கூறி இருக்கிறது.
இது குறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியதாவது:-
1,000 தற்கொலை படை வீரர்கள்
முல்லைத்தீவு பகுதியில், விடுதலைப்புலிகள் வசம் இருந்த கரய முல்லை வாய்க்கால் என்ற இடத்தை கைப்பற்றி இருக்கிறோம். இதற்காக நடந்த சண்டையில், ஏராளமான விடுதலைப்புலிகள் இறந்தனர். விடுதலைப்புலிகள், மண் அரண்களை அமைத்து, ராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து வருகிறார்கள். ஆங்காங்கே கண்ணி வெடிகளையும் பதித்து வைத்து இருக்கிறார்கள்.
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் இருக்கும் இடத்தில் இருந்து 800 மீட்டர் தூரத்தில் ராணுவம் முகாமிட்டு உள்ளது. பிரபாகரனுடன் 500 முதல் 1,000 தற்கொலை படையினர் பாதுகாப்புக்காக இருக்கிறார்கள். மேலும், அங்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையில் பொது மக்களும் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் பிரபாகரன் இருக்கிறார்.
இவ்வாறு ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார்.
ராஜபக்சே பேட்டி
இலங்கை அதிபர் ராஜபக்சே கூறியதாவது:-
சண்டை நடக்கும் பகுதியில், விடுதலைப்புலிகள் வசம் இருக்கும் பொதுமக்களை பத்திரமான இடத்துக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் கவனம் செலுத்தி வருகிறோம்.
பாதிக்கப்பட்ட தமிழர்களை பார்க்க சர்வதேச பார்வையாளர் குழுவினர், சமீபத்தில் வந்தனர். அவர்கள், நிவாரண முகாம்களை பார்வையிட்டு திருப்தியாக சென்று விட்டனர்.
நன்கொடையாக பெறப்படும் பொருட்கள், தமிழர் முகாம்களில், மே 9-ந் தேதி வழங்கப்படும். இடம் பெயர்ந்து வரும் தமிழர்களில் 80 சதவீதம் பேரை, உடனடியாக மாற்று இடங்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு ராஜபக்சே கூறினார்.
ராணுவ செயலாளர்
ராணுவ செயலாளரும், ராஜபக்சேயின் தம்பியுமான கோதபய ராஜபக்சே கூறியதாவது:-
2005-ம் ஆண்டு இலங்கையின் அதிபராக ராஜபக்சே பொறுப்பு ஏற்றார். தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார்.
2006-ம் ஆண்டு முதல், விடுதலைப்புலிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த முயற்சியை எடுத்து இருக்காவிட்டால், விடுதலைப்புலிகள் "தமிழ் ஈழம்'' அமைக்க வாய்ப்பு ஏற்பட்டு இருக்கும். இலங்கை, இரு நாடாக உடைவதை தடுத்து விட்டோம்.
பொதுமக்கள் பொய் பிரசாரத்தை நம்ப வேண்டாம்.
இவ்வாறு கோதபய ராஜபக்சே கூறினார்.
No comments:
Post a Comment