Saturday, May 16, 2009

சிறிலங்கா மீதான பொருளாதார தடைக்கு தயாராகும் மேற்குலகம்

சிறிலங்கா மீதான பொருளாதார தடைக்கு தயாராகும் மேற்குலகம்: கொழும்பு ஊடகம்
சிறிலங்கா மீது பொருளாதார தடைகளை மேற்கொள்வதற்கு மேற்குலகம் முயற்சிகளை வேகமாக எடுத்து வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

போர் நிறுத்தம் தொடர்பான அழைப்புக்களை சிறிலங்கா அரசு நிராகரித்ததை தொடர்ந்து பல மேற்குலக நாடுகள் சிறிலங்கா மீது பொருளாதாரத் தடைகளை மேற்கொள்ள முயற்சித்து வருகின்றன.

சிறிலங்கா மீதான நடவடிக்கைகள் தொடர்பாக பிரித்தானியா வெளிவிவகாரச் செயலாளர் டேவிட் மிலிபான்ட் மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்சுனர் ஆகியோர் கடந்த வாரம் ஆராய்ந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சகத்தின் அலுவலக அமைச்சர் பில் ராம்மெல் சிறிலங்காவுக்கு காத்திரமான எச்சரிக்கை ஒன்றை கடந்த புதன்கிழமை விடுத்திருந்ததுடன் சிறிலங்கா போர் குற்ற விசாரணைகளை எதிர்நோக்க வேண்டிவரும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

பிரித்தானியா நாடாளுமன்ற விவாதத்தின் போது பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா மீதான பொருளாதார தடையை ஆதரித்திருந்தனர்.

சிறிலங்கா மீது பொருளாதார தடைகளை கொண்டுவருவதுடன், அதனை பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்து நீக்கவும் சிறிலங்காவுடனான இராஜதந்திர உறவுகளை நிறுத்தவும் அமைதி முயற்சிகளில் நேரிடையாக மேற்குலகம் தலையிடவும் சிறிலங்கா பொருட்களை புறக்கணிக்கவும் சிறிலங்காவின் அரச அதிகாரிகள் மீது பயணத் தடையை கொண்டுவரவும் அவர்கள் ஆதரவுகளை தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியமும் சிறிலங்காவிற்கான புடவை ஏற்றுமதி வரிச்சலுகையுடன் மனித உரிமைகள் தொடர்பான அறிக்கைகளை இணைத்து கொள்ள முற்பட்டு வருகின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails