Thursday, May 28, 2009

பிரபாகரனின் பெற்றோர் வவுனியா வதை முகாம்களில் தங்கியுள்ளனர்

பிரபாகரனின் பெற்றோர் வவுனியா அகதி முகாம்களில் தங்கியுள்ளனர் – ஜனாதிபதி :

 
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோர் வவுனியா அகதி முகாமொன்றில் தங்கியிருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
புதிதாக அமைக்கப்பட்ட அகதி முகாமொன்றில் பிரபாகரனின் பெற்றோரும், ஏனைய விடுதலைப் புலித் தலைவர்களின் உறவினர்களும் தங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெற்றோரான திருவேங்கடம் வேலுப்பிள்ளை மற்றும் வள்ளிபுரம் பார்வதி ஆகியோர் தம்மிடம் சரணடைந்துள்ளதாகவும் பொதுமக்களுடன் அரசாங்க கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்ற இவர்கள் படையினரிடம் சரணடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியில் புகைப்பட அல்பம் ஒன்றை கைப்பற்றிய போதே பிரபாகரனின் பெற்றோர் தமிழ் நாட்டில் இருந்து சென்று வன்னியில் தங்கியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1924 ஆம் ஆண்டு சிங்கபூரில் பிறந்த பிரபாகரனின் தந்தையார், அங்கு தபால் துறையில் ஊழியராக பணியாற்றிய பின்னர், 1947 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளார். ஓய்வுபெறும் போது, இவர் யாழ்ப்பாண கச்சேரியில் காணி அதிகாரியாக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் வன்னியில் தங்கியிருந்த இவர்கள் படையினர் வன்னி பிரதேசத்தை சுற்றிவளைத்த பின்னர், பொதுமக்களுடன் இணைந்து அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்றுள்ளனர். புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் மீது குற்றவியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாத போதிலும் பயங்கரவாதத்திற்கு ஆதரவு வழங்கியமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழக்கு பதிவுசெய்யப்படக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
மேலும் அகதி முகாம்களின் வசதிகளை அதிகரிப்பது குறித்து நேற்றைய கூட்டத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
 
இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க துரித கதியில் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி இங்கு வலியுறுத்தியுள்ளார்.
 
அகதி முகாம்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக மலசலகூடங்களுக்கு பதிலாக 2000 நிரந்தர மலசலகூடங்களை அமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
 
அகதி முகாம்களில் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உரிய மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails