Sunday, May 3, 2009

நான்கு நாட்களாக படையினர் முன்னேற கடும் முயற்சி - 600 வரையான படையினர் பலி

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் எஞ்சியிருக்கும் பகுதியை ஆக்கிரமிப்பதற்கு சிறிலங்கா கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்றது. இதற்காக கடந்த நான்கு நாட்களாக சிறிலங்கா படையினர் வன்னியின் இரட்டைவாய்க்கால் வடக்குப் பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதியை உடைத்து - 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிக்குள் நுழைய அதிக பலத்துடன் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.  இதன்போது படை தரப்பு பலத்த இழப்புக்களை சந்தித்துள்ளது.

இரட்டைவாய்க்கால் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டு வரும் தொடர் முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் முறியடிப்புத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று சனிக்கிழமை நடத்திய தாக்குதல்களில் 60 வரையான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

படையினருக்கு ஆதரவாக கடலில் இருந்து தாக்குதல் நடத்தப்படும் அதேவேளை, எம்.ஐ.24 ரக தாக்குதல் உலங்குவானூர்திகளும் கடுமையான தாக்குதலை நடத்தியுள்ளன. மிகவும் வெளியான பகுதியில் நின்றுகொண்டும் படையினரின் முன்னேற்ற முயற்சியை விடுதலைப் புலிகள் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.

கடந்த நான்கு நாட்களில் நடந்த சண்டைகளில் மட்டும் 600 வரையான படையினர் கொல்லப்பட்டதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படையினர் தொடர்ந்தும் முன்னேறுவதற்கான தமது அனைத்து பலத்தையும் பிரயோகித்து வருவதாகவும், கடல் வழியிலான தரையிறக்கம் ஒன்றுக்கு மீண்டும் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails