Friday, October 9, 2009

ஆனந்த விகடன்:ஐ.நா.வையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணிச்சலை சிறிலங்காவுக்கு யார் தந்தது?

 
ஐக்கிய நாடுகள் சபையின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்கு துணிச்சலை சிறிலங்காவுக்கு யார் தந்தது? என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார ஏடான 'ஆனந்த விகடன்' கேள்வி எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக விகடன் குழுமத்தின் 'ஆனந்த விகடன்' வார ஏட்டில் நிஜ 'வில்'லன் யார்? எனும் தலைப்பில் வெளிவந்த ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிரதமர் மன்மோகன்சிங்கும், ஆளும் காங்கிரசின் தலைவி சோனியா காந்தியும் தீமைக்கு எதிராக வில்லேந்தி நின்ற தசரா கொண்டாட்டக் காட்சி - தமிழனைப் பொறுத்தவரை- இந்த வருடத்தின் தலைசிறந்த அவல நகைச்சுவை!

தீமைகளின் உருவமாக இராவணனைச் சித்திரித்து, அவனைக் 'கொடும்பாவி'யாக்கி அம்பு எய்து அருமையான நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் இந்தத் தலைவர்கள். அடுத்தவர் மனைவியைக் கவர்ந்து சென்றான் என்பதுதான் இதிகாச இராவணன் மீதான குற்றச்சாட்டு. மற்றபடி அவன் சுத்த வீரன், யுத்த தர்மத்தை ஒருபோதும் மீறாதவன்!

ஆனால், இன்றைக்கு இலங்கையை ஆள்வோர் மீது உலக சமுதாயம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஒன்றா, இரண்டா? 'விடுதலைப் புலிகள் இயக்கம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது' என்று ஒருபக்கம் மார் தட்டிக்கொண்டே, போர் தர்மங்களைக் காலில் போட்டு மிதித்துவிட்டு, அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக இன்னமும் சித்ரவதைகளைத் தொடர்கிறார்கள்!

ஐக்கிய நாடுகள் சபையின் குரலையே துச்சமாக மதிக்கும் அளவுக்குத் துணிச்சலை இவர்களுக்கு யார் தந்தது? ஒருபக்கம் முள்வேலி முகாம்களுக்குள் அப்பாவித் தமிழர்களை வதைத்துக்கொண்டே, மறுபக்கம் தன்னைப் புத்தராகவும் புனிதராகவும் காட்டிக்கொள்ள அங்கே இருப்பவர்கள் வேண்டுமானால் வெட்கம் கெட்டவர்களாக இருக்கலாம். 'தப்பாக எதுவும் நடக்கவில்லை' என்று இந்திய அரசுமா வெட்கம்கெட்டு பக்கவாத்தியம் வாசிக்க வேண்டும்?

அமெரிக்காவோ, ஐ.நா. சபையோ இலங்கை அரசுக்கு எதிராக அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கு, இந்திய அரசுதான் மறைமுகத் தடையாக இருக்கிறது என்று இதுநாள் வரை நிலவிவந்த குற்றச்சாட்டுகளை இப்போதாவது பொய்யாக்க வேண்டாமா?

இன்னலுற்ற தமிழர்கள் வாழ்வில் இனியாவது ஒளி தோன்ற வேண்டுமானால்... உருவகக் கொடும்பாவிகளை விட்டுவிடுங்கள்... உண்மைக் கொடும்பாவிகளை நோக்கி வீரத்தைக் காட்டுங்கள். ஆம், நிஜமாகவே உங்கள் வில்லும் அம்பும் திரும்ப வேண்டியது இலங்கையை நோக்கித்தான்! என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source:puthinam
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails