Tuesday, October 13, 2009

விடுதலைப்போரை விலை பேசுவோரை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது

 

karutthu-nerudalமுள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர், ஈழத் தமிழினம் மிக மோசமானதொரு நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் வழிகாட்டியாக- அவர்களின் உரிமைக்குரலாக ஓயாமல் இயங்கிய புலிகள் இயக்கமும், அதன் தலைமைத்துவமும் இல்லாது போயுள்ளதால் ஏற்பட்டுள்ள நிலை இது.

தமிழ் மக்களின் எதிர்காலம் எப்படிப்பட்டதாக இருக்குமோ என்ற அச்சம் இப்போது உலகெங்கும் வலுப்பெறத் தொடங்கி விட்டது. இதற்குக் காரணம், முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் புலிகள் இயக்கம் சந்தித்த பேரழிவுக்குப் பின்னர்- அதனைக் கட்டியெழுப்ப மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு தான்.

இப்போது புலிகள் இயக்கத்தின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி ஒரு புறத்திலும், தமிழ் மக்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி மறுபுறத்திலுமாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. புலிகள் இயக்கத்தினது எதிர்காலத்தையும், தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாததான காலம் ஒன்று முன்னர் இருந்தது.

'மக்களே புலிகள்" என்பது புலிகள் இயக்கம் ஆரம்ப காலத்தில் இருந்து கடைப்பிடித்து வந்த ஒரு கொள்கை.

ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை.

புலிகளையும் மக்களையும் வேறுபடுத்தி நோக்க முடியாத அளவுக்கு இருந்து காலம் மாறியிருக்கிறது. இந்த மாற்றம் முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பின்னர் உருவானது.

ஆனால் இந்தப் போரில் புலிகள் இயக்கம் தோல்வியைத் தழுவியதால் ஏற்பட்ட மாற்றம் இதுவல்ல. இதற்கு காரணம், புலிகள் இயக்கத்தின் ஒழுக்கத்தை, கட்டுக்கோப்பை, அர்ப்பணிப்பு உணர்வை கேள்வி எழுப்பக்கூடிய வகையில் செயற்படுகின்ற சில தரப்பினரேயாகும். இவர்கள்; மக்களிடத்தில் இருந்து புலிகள் இயக்கத்தை அந்நியப்படுத்தி வருவது ஒன்றும் இரகசியமான விடயம் அல்ல.

தாயகத்தில் சலுகைகளுக்கு விலை பேசுகின்ற தரப்புக்கள் ஒரு பக்கத்தில் இருந்தும், கோடரிக் காம்புகளானவர்கள் இன்னொரு பக்கத்திலும் தமிழ் மக்களின் விடுதலை வேட்கையையும்- உரிமைப் போராட்டத்தையும் சிதைப்பதற்கு முயற்சிக்கின்றனர். ஒரு காலத்தில் இவர்களின் சிறுபிள்ளைத்தனத்தை எண்ணி வருந்திய தமிழ் மக்கள், இன்று புலிகள் இயக்கத்துக்குள் நடந்து வரும் சில சம்பவங்களால் வெறுப்படையத் தொடங்கியுள்ளனர்.

தேசியத் தலைவர் பிரபாகரனால் இறுக்கமான கட்டுப்பாடுகளுடன் கட்டமைக்கபட்டு- வளர்த்தெடுக்கப்பட்ட புலிகள் இயக்கம் இன்று நகைப்புக்கிடமாகி வருவது தமிழ்மக்களை வருத்தமடையச் செய்திருக்கிறது.

சுவிசில் நடைபெற்ற ஒரு கைகலப்பு விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மட்டும் களங்கத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வு அல்ல. அதற்கும் அப்பால் தமிழ்மக்களின் விடுதலைப் போராட்டத்தை- அதை இதுவரை காலமும் தாங்கி நின்று வழிநடத்திய தேசியத் தலைமையை அவமானப்படுத்தும் செயலாகும்.

  • ஏன் இந்த இழிநிலை?
  • இதற்கெல்லாம் காரணம் என்ன?
  • எமது நோக்கமும் பயணமும் திசைமாறிச் செல்லத் தொடங்கி விட்டதா?

என்பன போன்ற ஆயிரம் ஆயிரம் கேள்விகள் தமிழ் மக்களின் முன் எழத் தொடங்கி விட்டது.

மே 19 ஆம் நாள் நிகழ்ந்த பேரனர்த்தத்தின் பின்னர் உருவாகியுள்ள இந்தச் சூழல் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பாரியதொரு வெறுமை நிலையை உருவாக்கியிருக்கிறது.

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி தமிழ் மக்களின் வாழ்வை எப்படிப் புரட்டிப் போட்டதோ- அது போன்றதொரு நிலையைத் தான் முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் விட்டுச் சென்றிருக்கிறது. இதைத் தாங்கிக் கொள்வதற்கும் ஏற்றுக்கொள்வதற்கு நீண்டகாலம் எடுக்கலாம். ஆனால் இதிலிருந்து மீள்வதும் அடுத்த கட்டப் பயணத்தை தொடர்வதும் வரலாற்றில் தவிர்க்க முடியாத விடயம்.

இதை உணராத சக்திகள்தான் இப்படி மோதிக்கொள்ளும் நிலைக்கு வந்திருக்கின்றன. தமிழ் மக்களிடத்தில் தோன்றியிருக்கும் சந்தேகங்களை யதார்த்தபூர்வமாகவும், அறிவுபூர்வமாகவும் தீர்ப்பதற்கு முனையாமல், சுயநலப் போக்குடன் செயற்பட முனைவது விடுதலைப் போராட்டத்தின் வீரியத்தைக் குறைத்து விடும்.

ஆயிரக்கணக்கான மாவீரர்களினதும், சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களினதும் புதைகுழிகளின் மீது யாரேனும் மாளிகை கட்ட நினைத்தால் அது அப்பட்டமான துரோகம். அவர்களின் தியாகங்களைக் கொச்சைப்படுத்தி- மலினப்படுத்தும் ஈனச்செயல். தமிழ் மக்களின் வரலாற்றில் ஏராளமான துரோகங்கள் நிகழ்ந்துள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைப்பட்டது. இப்படிப்பட்ட துரோகங்களினால் தான் தமிழ்மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் முன்னோக்கி நகர்த்தப்பட்டதை, அதிகளவு தூரம் பின்நோக்கி நகர்ந்தது. இதை நாம் கண்ணார கண்டிருக்கிறோம்.

இதன்பின்னரும் விடுதலைப் போராட்டத்தையும், அதன் வேராக இருந்த தேசியத் தலைமையையும் விலை பேசும் அளவுக்கு சில சக்திகள் முனைகின்றன. தேசியத் தலைமையின் தியாகத்தையே அங்கீகரிக்காமல் கொச்சைப்படுத்துவதை விட மோசமான துரோகம் வேறேதும் இருக்க முடியாது. அதற்காக துரோகி என்று யாருக்கும் பட்டம் கொடுப்பது இந்தப் பத்தியின் நோக்கம் அல்ல. இன்று புலிகள் இயக்கத்தின் பெயரால் ஒருவருக்கொருவர் துரோகி என்று பட்டம் கொடுத்துக்கொள்வது, வரலாற்றின் கொடிய துரோகிகளை நியாயப்படுதியும் விடவும் கூடும். இதனை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்வது அவசியம்.

இந்த நிலையானது, வரலாற்றில் தமிழ்மக்களின் உரிமைகளை மீட்பதற்கான போராட்டத்தை ஒருபோதும் வெற்றிபெற முடியாத நிலைக்கே கொண்டு செல்லும். இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதால் தமிழ் மக்களுக்கு எந்த வகையிலும் நன்மை கிடைக்காது. இப்படி நடந்து கொள்வதால் தமிழ் மக்களுக்கு விடுதலையையோ- உரிமைகளையோ பெற்றுக் கொடுத்துவிட முடியாது. அவர்களை முடிவற்ற அடிமைத்தனத்துக்குள்ளேயே சிக்க வைப்பதாக முடியும்.

சுpங்கள பேரினவாத சக்திகளுக்கே இது இனிப்பானதாக இருக்க முடியும். யாருக்காகப் போராடத் தொடங்கினோம், எதற்காக ஆயுதமேந்தினோம் என்று இவர்கள் சிந்தித்ததாகத் தெரியவில்லை. இத்தகைய செயல்களின் மூலம் சிங்கள அரசுக்கு துணை நிற்பதே எதிர்காலக் கொள்கையாக இருக்கும் என்றால் இப்படி மோதிக் கொள்ளலாம். முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் அடுத்த கட்டமாக என்ன செய்யப் போகிறோம்- எப்படி போராட்டத்தைக் கையாளப் போகிறோம் என்பது பற்றிய தெளிவு இல்லாமையால் தான் பல்வேறு குழப்பங்களும் நிகழ்ந்து வருகின்றன.

மூன்று தசாப்த காலமாக போராட்டத்தை வழிநடத்திய தேசியத் தலைமையை விலைபேசும் அளவுக்குச் சிலர் துணிந்து விட்டதே- தமிழ் மக்களிடத்தில் இருந்து புலிகள் இயக்கம் அந்நியப்பட்டு வருவதற்குப் பிரதான காரணம். தேசியத் தலைமையின் நிலை பற்றித் தெளிவுபடுத்துவதற்கும்;, அவருக்கு மரியாதை செலுத்துவதற்கும் தடையாக இருப்பவர்களால் நிச்சயமாகப் போராட்டத்தை முன்னகர்த்த முடியாது. தெளிவற்ற நிலையில் இருக்கும் தமிழ்மக்களும் கூட நவம்பர் 27 ஆம் நாளுடன் ஒரு இறுதியான முடிவுக்கு வந்து விடுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அதற்குப் பின்னரும் தமிழ்மக்களை ஏய்த்துப் பிழைப்பது முடியாத காரியமாகி விடும்.

தமிழ் மக்கள் தான் விடுதலைப் போரின் ஆணிவேர்.

மக்களை விலத்தி விட்டு எவராலும் போராட முடியாது- ஏன் ஒரு சிறு துரும்பைக் கூட அசைக்க முடியாது. போராட்டத்தின் இன்றைய நிலை- புலிகள் இயக்கத்தின் உண்மை நிலை- அடுத்த கட்டம் பற்றிய தெளிவான கொள்கைகளை முன்வைக்காமல் எந்தவகையிலும் மக்களின் ஆதரவைப் பெற முடியாது. மக்களின் ஆதரவைப் பெறாமல் பேராட்டத்தை முன்னகர்த்த எவராலும் முடியவே முடியாது. இதைப் புரிந்த கொள்ளாத- அல்லது புரிந்து கொள்ள விரும்பாத சக்திகளே மாயை நிலை ஒன்றுக்குள் இருந்து கொண்டு மாளிகை கட்ட நினைக்கிறார்கள்.

இது மூன்று தசாப்தமாகப் போராடி உயிரைக் கொடுத்த 25 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களுக்கு கொடுக்கின்ற மரியாதை அல்ல. அவர்களை இழிவுபடுத்துகின்ற- கொச்சைப்படுத்துகின்ற செயல். சொத்துக்காகவும், பணத்துக்காகவும் சண்டையிடும் நிலையொன்று புலிகள் இயக்கத்துக்கு வந்திருப்பதாக வெளியாகும் செய்திகள் தனியே புலிகள் இயக்கத்தை மட்டும் பாதிக்காது. புலிகள் இயக்கம் பற்றி இதுவரை இருந்து வந்த உயர்வான கருத்துக்களையும் மதிப்பையும் சிதைக்கும் வகையில் இவை அமைந்திருக்கின்றன. இதற்கெல்லாம் காரணம் போராட்டத்துக்காக அர்ப்பணிக்கப்பட்ட பொருளாதார வளங்களைச் சுரண்ட நினைக்கின்ற சக்திகளே. தமிழ் மக்களின் போராட்டம் வெறும் சொத்துக்களுக்காகவோ, சுகங்களுக்காகவோ தொடங்கப்பட்டதல்ல.

1987 இல் இந்தியா புலிகள் இயக்கத்தின் போராட்டத்துக்கு விலை பேசியது. மாதா மாதம் 50 இலட்சம் ரூபா தருகிறோம் ஆயுதத்தைக் கைவிடுங்கள் என்று புலிகள் இயக்கத்தின் கொள்கைக்கு விலை பேசினார் ராஜீவ் காந்தி.

தேசியத் தலைமை நினைத்திருந்தால் இந்தியா கொடுக்க முனைந்த நிதியை வைத்து சுகபோக வாழ்க்கையை அமைத்திருக்கலாம்.

ஆனால் தேசியத் தலைமையும், போராளிகளும் அன்று மாதாந்தம் தருவதாகக் கூறிய 50 இலட்சம் ரூபாவை விட தமிழ்மக்களின் விடுதலையையே பெரிதாக மதித்தனர். இப்படியெல்லாம் தமது உயிரையும், வாழ்வின் சுகபோகங்களையும் துறந்து விட்டு போராடி மடிந்த மாவீரர்களுக்கு மத்தியில் இருந்தவர்கள்- இன்று மோதிக் கொள்ளவது அபத்தமானது.

இது தமிழ் மக்களின் போராட்டத்துக்குச் செய்கின்ற வரலாற்றுத் துரோகம்.

நாளொன்றுக்கு ஒரு நேர உணவு கூடக் கிடைக்காமல் போராடி மடிந்த போராளிகளுக்கு இழிவை ஏற்படுத்தி விடும்; இத்தகைய செயல். விடுதலைப் போரை விலை பேசும் நிலைக்குக் கொண்டு செல்லாமல்- ஆக்கபூர்வமான, அறிவுபூர்வமான முறையில் முன்னெடுப்பதே இப்போது தமிழ் மக்கள் அனைவருக்கும் முன்னால் இருக்கின்ற ஒரு கடமை. இதை மறந்து விட்டு யார், எதைச் செய்ய முனைந்தாலும் வரலாறு அவர்களை மன்னிக்க மாட்டாது.

- தொல்காப்பியன்


source:nerudal


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails