Friday, October 9, 2009

பரிசு விழுந்ததாக எஸ்.எம்.எஸ். அனுப்பி மோசடி

டாலர் தயாரிப்பு மிஷின் கொடுத்து மோசடி : நைஜீரியா ஆசாமி கைது
 

Front page news and headlines today

கோவை : பரிசு விழுந்ததாக எஸ்.எம்.எஸ்., அனுப்பி, ஒரு லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு, போலி டாலர் தயாரிப்பு மிஷின் பார்சலைக் கொடுத்த, நைஜீரியாவைச் சேர்ந்த வாலிபரை கோவை போலீசார் கைது செய்தனர். கோவை, சவுரிபாளையத்தைச் சேர்ந்தவர் மகாதேவன்(38); பீளமேட்டில் டெக்ஸ்டைல் மிஷின் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். செப்., 17ல் இவரது மொபைல் போனுக்கு, அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து எஸ்.எம்.எஸ்., வந்தது.



மகாதேவனுக்கு, இரண்டு லட்சம் பவுண்ட் பரிசு விழுந்திருப்பதாகவும், பரிசுத் தொகையை அலையன்ஸ் அண்ட் லெசிஸ்டர் கிரெடிட் வங்கியில் டிபாசிட் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. பரிசுத் தொகையைப் பெற, இ-மெயில் ஐ.டி.,யும் கொடுக்கப்பட்டிருந்தது. ஆச்சரியமடைந்த மகாதேவன், எஸ்.எம்.எஸ்., தகவலை உண்மையென நம்பி, நன்றி தெரிவித்து பதில் அனுப்பினார். இதைத் தொடர்ந்து பரிசுத் தொகையை இந்தியா கொண்டு வர, கஸ்டம்ஸ் கிளியரன்சுக்காக ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் உள்ள தனது கணக்கில் இருந்த 31 ஆயிரத்து 583 ரூபாயை மர்ம நபர் தெரிவித்த கணக்கில் கட்டியுள்ளார்.



சில நாட்களுக்குப் பின், போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், பரிசுத் தொகையைப் பெற மும்பை வர வேண்டும் என, அழைப்பு விடுத்தார். கடந்த 3ம் தேதி மும்பை சென்ற மகாதேவன், சம்பந்தப்பட்ட நபரை போனில் தொடர்பு கொண்டார். அப்போது, நேரில் பரிசுத்தொகை பெற வேண்டாம் என்றும், பார்சலில் அனுப்பி வைப்பதாகவும், ஸ்கேனரில் தெரியாமல் இருப்பதற்கு மேலும் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயை வங்கியில் செலுத்தும்படியும் தெரிவித்தார். உடனடியாக தொகையை வங்கியில் செலுத்தினார். அதன் பிறகும், போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், பரிசுத் தொகையை நேரடியாக கோவையில் பெற்றுக் கொள்ளுங்கள். எங்கள் ஏஜன்ட் உங்களை காந்திபுரத்தில் சந்திப்பார் என தெரிவித்து, மகாதேவனை கோவைக்கு திரும்ப சொன்னார்.



சந்தேகமடைந்த மகாதேவன், தான் ஏமாற்றப்பட்டது குறித்து கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் சிவனாண்டியிடம் புகார் கொடுத்தார். கோவை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் செல்வராஜ் தலைமையிலான போலீஸ் குழு இம்மோசடி குறித்து விசாரணை நடத்தியது. பரிசுத் தொகையை கொடுக்க, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஏஜன்ட் நேற்று கோவை வரும் தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், எஸ்.ஐ., சின்னக்கண்ணு தலைமையிலான போலீசார், காந்திபுரத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு வந்த தனியார் ஆம்னி பஸ்சில் இருந்து இறங்கிய நீக்ரோ வாலிபர், தயாராக நின்றிருந்த மகாதேவனை சந்தித்து, கொண்டு வந்திருந்த பார்சலை கொடுத்தார். மறைந்திருந்த போலீசார் விரைந்து சென்று நீக்ரோ வாலிபரை பிடித்து, அவர் கொண்டு வந்திருந்த பார்சலை பிரித்து சோதனையிட்டனர். பார்சலில் அமெரிக்க டாலர் நோட்டு அளவிலான, ஏழு கட்டு கறுப்பு தாள் மற்றும் காயின் பாக்ஸ் வடிவில் பெட்டி ஒன்றும் இருந்தது.



வாலிபரை விசாரித்தபோது, கறுப்புத் தாளில் ரசாயனத்தை தடவி, பெட்டியில் போட்டால் அமெரிக்க டாலராக மாறும் என தெரிவித்தார். இது ஏமாற்று வேலை என அறிந்த போலீசார், மோசடி பார்சலை கொடுத்த நைஜீரியாவைச் சேர்ந்த ஓடிக்வி ஜூட்(30) என்பவரை கைது செய்தனர். இம்மோசடியில் மேலும் சிலர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர்களையும் கைது செய்ய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.




source:dinamalar

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails