விண்வெளி ஆய்வில் பல வெற்றிக் கொடிகளை நாட்டி, சாதனைகளை புரிந்துள்ள அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான "நாசா', சந்திரனில் தண்ணீர் இருக்க வாய்ப்பு உண்டு என்ற சந்திரயான்-1 விண்கலத்தின் கண்டுபிடிப்பை வியந்து, பாராட்டியுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள், சந்திரனுக்கு விண்கலங்களை அனுப்பி, ஆய்வுகளை மேற்கொண்ட போதிலும், இந்தியா அனுப்பிய ஆளில்லா விண்கலமான சந்திரயான்-1 மட்டுமே சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் உள்ளதாக கண்டுபிடித்து, உலக விண்வெளி ஆராய்ச்சி அரங்கில் இந்தியாவிற்கு பெருமையை தேடித் தந்துள்ளது. சந்திரனில் நீர், மற்ற இயற்கை வளங்கள் உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து அறிந்து கொள்ள இந்தியா எடுத்த முதல் முயற்சியே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சந்திரன் குறித்து ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதியன்று சந்திராயன்-1 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. வெற்றிகரமாக செலுத்தப்பட்ட இந்த விண்கலம், சந்திரனை பற்றிய பல தகவல்களை கடந்த 10 மாதங்களாக தெரிவித்து வந்தது. இரண்டு ஆண்டுகள் செயல்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் 29ம் தேதியன்று சந்திரயான்-1க்கும் இஸ்ரோவுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது. சந்திரயான் கிட்டத்தட்ட 95 சதவீத பணிகளை முடித்து விட்டது. இதுவரை சந்திரயான்-1 அனுப்பிய தகவல்களை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஆய்வு மேற் கொள்ள உதவிடும் என்பதால் இத்திட்டம் தோல்வி என்ற கருத்து தேவையில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
""சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டுபிடித்தமைக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். இதுவரை சந்திரன் என்பது பாறைகள் நிறைந்த தரைப்பகுதியை கொண்ட ஒரு கிரகம் என்பதை இஸ்ரோவின் இந்த கண்டுபிடிப்பு பொய்யாக்கியுள்ளது'' என்று நாசா விண்வெளி மையத்தின் இயக்குனர் ஜிம் கிரீன் மனமார பாராட்டியுள்ளார். அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வசதி கொண்ட நாசா உள்ளிட்ட உலகின் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் செய்ய முடியாத ஒரு இமாலய சாதனையை இஸ்ரோ செய்து காட்டியுள்ளது. வெற்றிகரமாக சந்திரயான்-1 ஏவப்பட்டது, விண்ணில் செலுத்தப்பட்ட 15 நாட்களுக்கு பின், சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரம் கொண்ட உறுதியான தகவல்களை அது அனுப்பியது. சந்திரனில் அந்த விண்கலம் எடுத்த புகைப்படங்களில் இருந்து தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் தெரிந்தது. மேலும், சந்திரயான்-1ல் பொருத்தப்பட்டிருந்த எச்.ஒய்.எஸ்-1 மூலம் அது உறுதி செய்யப்பட்டது. இந்த வகையில், சந்திரனில் தண்ணீர் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவே கடந்த பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளால் கருதப்பட்டு வருகிறது. ஆனால், சந்திரயான்-1 தெரிவித்துள்ள தகவல் மூலம் எதிர்பார்த்ததற்கு மேலாக சந்திரனில் அதிகளவு தண்ணீர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சந்திரனில் தண்ணீர் இருப்பதை சந்திரயான்-1 விண்கலம் மூலம் ஆய்வு நடத்தி முதன்முதலாக கண்டுபிடித்தது இந்தியாதான் என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளலாம். ஆனால், சந்திரயான்-1 எடுத்து அனுப்பிய தகவல்களை ஆய்வு செய்து சந்திரனில் தண்ணீர் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளும் தொழில்நுட்பம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவிடம் மட்டுமே உள்ளது. ""எதிர்காலத்தில் செயல்படுத்தக்கூடிய பல்வேறு திட்டங்களுக்கு சந்திரயான்-1 விண்கலத்தின் செயல்பாடுகள் உதவிகரமாக இருக்கும். சந்திரயான்-1 திட்டத்தின் மூலம் கிடைத்த அனுபவங்களை கொண்டு சந்திரயான்-2 விண்கலத்தை 2012ம் ஆண்டின் இறுதியில் அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது'' என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார். இது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு அறிவிப்புதான் என்றாலும், இந்தியா அனுப்பும் விண்கலங்கள் தரும் புகைப்படங்களையும், சிக்னல்களையும் இஸ்ரோவே ஆய்வு செய்து அதிலுள்ள கண்டுபிடிப்புகளை அறிந்து கொள்ளும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே ஒவ்வொரு இந்தியனின் கனவாகும்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment