Friday, October 23, 2009

யுத்தக் குற்றம் தொடர்பில் அமரிக்க ராஜாங்கத் திணைக்களம் தயாரித்த 60 பக்க அறிக்கையின் முழு வடிவம் தமிழில் படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது

    

 இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், போர்க் குற்றங்கள் தொடர்பாகவும் விரிவான அறிக்கை ஒன்றை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

60 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை சிறுவர்களும் ஆயுத மோதல்களும், பொதுமக்கள் மற்றும் அவர்களுடைய உடமைகள் பாதிப்பு, சரணடைய முனைந்த அல்லது கைது செய்யப்பட்ட போராளிகளின் படுகொலை, காணாமற் போதல் மற்றும் மனிதாபிமான நிலை ஆகிய ஐந்து பிரதான பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

sat

சிறுவர்களும், ஆயுத மோதல்களும் என்ற பகுதியில் விடுதலைப் புலிகளால் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் பலவந்தமாக சிறுவர்கள் ஆட்சேர்ப்புக்கு உட்படுத்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக 12 வயதிற்கும் 16 வயதிற்கும் இடைப்பட்ட சிறுவர்கள் ஆண், பெண் என்ற பேதமின்றி அவர்களுடையதும், பெற்றோர்களுடையதும் விருப்புக்கு மாறாக விடுதலைப்புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள பெப்ரவரியிலிருந்து ஏப்ரல் வரையான தகவல்கள் தரவுகளோடு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

இக்கட்டாய ஆட்சேர்ப்பை எதிர்த்த சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் தாக்கப்பட்ட கொல்லப்பட்ட சம்பவங்களும் குறித்துக் காட்டப்பட்டுள்ளன. உதாரணமாக பெப்ரவரி 23ஆம் திகதி கட்டாய ஆட்சேர்ப்புக்கு உட்பட மறுத்த சிறுவன் ஒருவனது இரண்டு கைகளும் விடுதலைப் புலிகளால் தண்டனையாக முறிக்கப்பட்ட சம்பவம் குறித்துக் காட்டப்பட்டுள்ளது. மார்ச் 21க்கும் 24க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் வலைஞர்மடம் கத்தோலிக்க தேவாலயத்தைச் சுற்றிவளைத்து அங்கு அகதிகளாகத் தஞ்சமடைந்திருந்தவர்களிடையே இருந்து 400 சிறுவர்களை கட்டாயப்படுத்திப் பிடித்துச் சென்றதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

sat1

இன்னொரு தகவல் மூலம் மார்ச் 23 ஆம் திகதி பிடித்துச் சென்ற சிறுவர்களின் எண்ணிக்கை 250 எனக் குறிப்பிடுகிறது. மார்ச்சில் கிடைத்த இன்னொரு அறிக்கை, விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்புக்கு வயது வேறுபாடோ பால்வேறுபாடோ இருக்கவில்லையென்றும் இதனை எதிர்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாக்கப்பட்டும், சிலசமயங்களில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

கட்டாயமாகப் பிடித்துச் சென்ற சிறுவர்களை போரிட முன்னரங்க காவல் அரண்களுக்கு விடுதலைப் புலிகள் அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் விடுதலைப் புலிகளுக்கும் இச்சிறுவர்களுடைய குடும்பத்தினருக்குமிடையே சில இடங்களில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் சிறுவர்களை விடுதலைப் புலிகள் அழைத்துச் செல்வதைத் தடுத்த சில பெற்றோர் தாக்குதலுக்கும், துப்பாக்கிச் சூட்டிற்கும் இலக்கானதாகவும் கார்டியன் பத்திரிகையை மேற்கோள் காட்டிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

sat2

2009 ஜனவரி தொடக்கம் மே வரையான பொதுமக்கள் இழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து முழுமையான தகவல்கள் எதுவும் கிடைக்காவிடினும் ஒரு நிறுவனம் மேற்கொண்ட கணக்கீட்டின்படி 2009 ஜனவரி 20 முதல் ஏப்ரல் 20வரையான காலப் பகுதியில் ஆறாயிரத்து 710 பேர் கொல்லப்பட்டதாகவும் பதினையாயிரத்து 102 பேர் படுகாயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையிலேயே கொல்லப்பட்டவர்களதும், படுகாயமடைந்தவர்களதும் எண்ணிக்கை இதனை விட அதிகமாகத்தான் இருக்கும் எனச் சுட்டிக் காட்டியிருக்கும் அவ்வறிக்கை அந்நேரத்தில் பெரும்பாலான மரணங்களும், படுகாயமடைந்தவர்களின் விபரங்களும் பதிவாக்கப்படவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளது.

இக்காலப் பகுதியில் இலங்கை அரசாங்க அதிகாரிகள் பாதுகாப்பு வலயத்தின் மீது தாங்கள் தாக்குதல்களையோ செல் வீச்சுக்களையோ மேற்கொள்ளவில்லையென்றும், வைத்தியசாலைகளைத் தாக்கி பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாக்கவில்லையென்றும் திரும்பத் திரும்பக் கூறினாலும் அங்கிருந்து கிடைத்த தகவல்களின்படி பாதுகாப்பு வலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பெருமளவான செல் தாக்குதல்கள் இலங்கை அரச படைகளினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இரண்டு சந்தர்ப்பங்களில் 48 மணித்தியாலப் போர் நிறுத்தத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்த போதும் இரண்டாவது 48 மணிநேர போர் நிறுத்தகாலம் முடிவடைவதற்கு முன்பாகவே இலங்கை அரசாங்கம் செல் வீச்சுக்களை மேற்கொண்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை புலிகள் அங்கிருந்து மக்களை வெளியேற விடாமல் மனிதக் கவசங்களாகத் தடுத்து வைத்திருந்தமையும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

sat3

புதுக்குடியிருப்பு வைத்திசாலை மீதும், முல்லைத்தீவு வைத்தியசாலை மீதும் ஜனவரி 2 ஆம் திகதி இலங்கை அரச படையால் செல் மற்றும் விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றினால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவங்களில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டும், படுகாயமடைந்துமுள்ளனர்.

ஜனவரி 8 ஆம் திகதி தர்மபுரம் வைத்தியசாலையின் மீது மேற்கொள்ளப்பட்ட செல் வீச்சில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையிட்டுள்ளது.

sat4

மே 12ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இருந்த தற்காலிக மருத்துவமனை தாக்குதலுக்கு உள்ளானது. காலை 8 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இச்செல் வீச்சில் 26 பேர் கொல்லப்பட்டனர். முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டார். மே 9, 10ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட கடுஞ் செல்வீச்சில் காயமடைந்த ஆயிரக்கணக்கானவர்களும் அவர்களுடைய உறவினர்களும் வைத்தியசாலையில் குவிந்திருந்த நேரத்திலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் உடனடியாக 29 பேர் கொல்லப்பட்டாலும் மொத்தமாக 49 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிய வருகிறது.

மே 14க்கும் 18 க்குமிடையே நடைபெற்ற இறுதிப் போரில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து வெளியேற முற்பட்ட பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகளும் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். இதன்போதும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இதுதவிர இலங்கை அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஏராளமான படுகொலைச் சம்பவங்கள் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

sat5

இலங்கை அரசின் நியாயமற்ற படுகொலைகள் குறித்துப் பல்வேறு தரப்புகளும் சுட்டிக் காட்டியுள்ளன. கைது செய்யப்பட்ட தமிழர்களைப் படுகொலை செய்யும் வீடியோக் காட்சியொன்றும் வெளியாகியுள்ளது. மே 14க்கும் 18க்குமிடையில் இவ்வாறான பல படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. சற்றலைற் தொலைபேசியூடாக சர்வதேச பிரதிநிதிகளுடன் பேசி சரணடைவதற்காக ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து சரணடைய முனைந்த பல விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கை அரச படைகளினால் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்படுவதாக வெளி யான வீடியோக் காட்சி புனையப்பட்டது என்று இலங்கை அரசாங்கம் மறுத்திருந்தாலும் சுயாதீனமான ஆய்வுகள் இது தொடர்பாக மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மோதல் பிரதேசத்திலிருந்து பெப்ரவரி முதலாந் திகதி தனது குடும்பத்தினருடன் ஒருவர் தப்பி வந்தார். அவருடைய குடும்பத்தினரை இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். சில நாட்களின் பின்னர் அவர்களுடைய உடல்களைத் தான் இவரால் காண முடிந்தது. முகாம்களில் சுதந்திரமான கண்காணிப்பாளர்கள் எவரும் இல்லாததினால் இராணுவத்தினர் எதேச்சாதிகாரமாக நடந்து கொள்ள முடிந்துள்ளது.

sat6

மே14க்கும் 18க்குமிடையில் எஞ்சியிருந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த நடேசன், புலித்தேவன் உட்பட பல புலி உறுப்பினர்கள் கூடப் படுகொலைக்கு ஆளாகியுள்ளனர். ஏறத்தாழ நடேசனுடன் 300 புலி உறுப்பினர்கள் சரணடைய வந்ததாகக் கூறப்படுகிறது. இச்சரணடைவிற்கான உடன்பாடு வெளிநாட்டமைச்சின் செயலாளர் பாலித ஹோகணவூடாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி விஜய் நம்பியாரை சரணடைவிற்குச் சாட்சியாக நடேசன் கோரியிருந்த போதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தரவாதம் இருந்ததால் அது தேவையில்லையென்று அவர்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது.

sat7

ஜுலை 10 ஆம் திகதி அம்பலாங்கொடையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகளைக் கூடத் தாம் விட்டுவைக்காமல் கொன்றொழித்ததாகக் கூறியிருந்தார்.

இலங்கை அரசாங்கத்தினாலும், துணை இராணுவக் குழுக்களினாலும் தமிழர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இனங்காணப்படாத இடத்திற்குக் கடத்திச் செல்லப்படும் இவர்கள் பின்னர் கொல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 8ஆம் திகதி ஓமந்தை காவலரணைத் தாண்டி வந்த 50 குடும்பங்கள் கைது செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்குப் பின்னர் என்ன நடந்ததென்று இதுவரை தெரிய வரவில்லை. 

இறுதிக்கட்டப் போரின்போது ஓமந்தையைக் கடந்து வந்த பலர் காணாமற் போனதாக அறிக்கையிடப்பட்டிருக்கிறது. இது தவிர இடம்பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களிலிருந்தும் இலங்கை அரசாங்கத்தினாலும், துணை இராணுவக் குழுக்களாலும் அழைத்துச் செல்லப்பட்ட பலருக்கு இதுவரை என்ன நடந்ததெனத் தெரிய வரவில்லை.

பாதுகாப்பு வலயத்துள் இடைத்தங்கல் முகாம்களில் இருக்கும் மக்களுக்குப் போதிய உணவுப்; பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களைத் தொடர்ந்தும் அனுப்பி வைத்துக் கொண்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. நாளாந்தம் 80 தொடக்கம் 100 மெற்றிக்தொன் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. மருத்துவப் பொருட்களையும், உணவுப் பொருட்களையும் தாம் ஒருபோதும் தடை செய்யப் போவதில்லையெனவும் அது தெரிவித்திருந்தது. ஆனால் அவ்வாறு நடைபெற்றிருக்கவில்லை.

உதாரணமாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் 70 ஆயிரம் மக்கள் இருப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. 70 ஆயிரம் மக்களுக்கும் தொழாயிரத்து எண்பது மெற்றிக்தொன் பொருட்கள் தேவைப்பட்டன. ஆனால் அரசாங்கம் 150 மெற்றிக் தொன் பொருட்களையே அனுப்பியிருந்தது. ஆனால் அக்காலப்பகுதியில் உண்மையிலேயே அப்பிரதேசத்தில் இரண்டரை இலட்சம் மக்கள் இருந்துள்ளனர். அவர்களுக்கு மூவாயிரத்து 500 மெற்றிக்தொன் உணவுப ;பnhருட்கள் தேவைப்பட்டன. ஆக 3350 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் பற்றாக்குறையாக இருந்தன.

இதேபோல் மே மாதத்தில் 20 ஆயிரம் மக்களே அங்கிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. அரசாங்கத்தின் கணக்குப்படி அங்கிருந்த மக்களுக்கு 200 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் தேவையாக இருந்தது. ஆனால், அரசாங்கம் 50 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களையே அனுப்பியிருந்தது. அக்காலப்பகுதியில் 80 ஆயிரம் மக்கள் அங்கிருந்தனர். அவர்களுக்கு 720 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் தேவையாக இருந்தன எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- நன்றி தமிழாக்கம்: GTN

source:nerudal
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails