Friday, October 23, 2009

இலங்கையில் போர் குற்றம் ; அமெரிக்கா கண்டிப்பு ! விளக்கம் தர இலங்கைக்கு உத்தரவு


 
 

Top world news stories and headlines detail 

இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையேயான போரின்போது, அத்துமீறல்கள் போர்குற்றம் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு, இலங்கை அரசுக்கு, அமெரிக்கா அறிக்கை அனுப்பியுள்ளது.அமெரிக்க பார்லி., உறுப்பினர்கள், இது குறித்து பிரச்னை கிளப்பியதாகவும், அதன் அடிப்படையில் இந்த அறிக்கை அனுப்பியுள்ளதாகவும் அமெரிக்கா கூறுகிறது.



அமெரிக்க வெளியுறவுத் துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள்:



இந்த ஆண்டு துவக்கத்தில், இலங்கையில் நடந்த போரில், அப்பாவி மக்கள் வசித்த பகுதிகளில், இலங்கை ராணுவம் குண்டு வீசியதும், விடுதலைப் புலிகள் தரப்பில் குழந்தைகளை போரில் ஈடுபட வைத்ததும் கவலையளிக்கக் கூடிய விஷயங்கள்.
இது தொடர்பாக எங்களிடம் கொடுக்கப்பட்ட தனி நபர் புகார்கள் உண்மை தானா என சரிபார்க்க நாங்கள் விரும்பவில்லை என்றாலும், அவற்றுக்கு சரியான விளக்கம் தேவை என கருதுகிறோம்.



இலங்கையின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த மக்களை மீண்டும் அங்கே குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டிருப்பதாக இலங்கை அரசு கூறினாலும், அதை விட முக்கியமாக, குடியமர்த்தப்படுவோர் குறித்து தகுந்த ஆதாரங்கள் தேவை என்பதை திடமாக நம்புகிறோம்.



புலிகள் சரண் அடைய முன்வந்தபோது கொலை : இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே, போர் நடந்த விதம் எங்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. புலிகள் சரண் அடைய வருவதாக ஒப்பந்தம் ஏற்பட்ட நேரத்தில் வரவழைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "கடந்த 1983 முதல் 2009 வரையில், பல்வேறு கால கட்டங்களில், இலங்கையில் நடந்த சண்டையில், இது வரை, 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்' என்ற, ஐ.நா., தகவலும், அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.



ராஜபக்சே மறுப்பு: அமெரிக்கா அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள், ஆதாரம் அற்றவை என்றும், முரண்பாடானவை என்றும், இலங்கை அதிபர் ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார்.



அமெரிக்க தூதரகம் விளக்கம்: ஆனால், அமெரிக்க அறிக்கை, ஆதாரத்துடன் தயாரிக்கப்பட்டிருப்பதாக, இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் கருத்து தெரிவித்துள்ளது. "போர் நடந்தபோது, அதை கண்ணெதிரே பார்த்த மக்கள் தெரிவித்த தகவல்களும், போர் நடக்காத பகுதியில் வாழும் மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் அந்த அறிக்கை அமைந்துள்ளது' என, கூறியுள்ளது.



கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக இலங்கையில் போர் தொடர்பாக ஐ.நா., குற்றம் சாட்டியது. இந்நிலையில் அமெரிக்காவும் அறிக்கை கேட்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails