பதினாறாம் நூற்றாண்டு வரை பெரும்பாலான மருத்துவர்கள் மனித உடலின் உள் அமைப்பைப் பற்றி அதிகம் அறியாமலே இருந்தனர். அதுவரை, தசைகள் மற்றும் எலும்புகள் பற்றி முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க மருத்துவரான கேலன் எழுதி வைத்த குறிப்புகளையே அவர்கள் பின்பற்றி வந்தனர்.
கேலனின் கருத்துகளை முதன்முதலில் மறுத்தவர், பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த ஆண்ட்ரியாஸ் வெசாலியஸ்தான். பாரீசில் மருத்துவ மாணவராக இருந்தபோது, அவராகவே நேரடியாக ஆராய்ந்து மனித உடலின் உள்கட்டமைப்பு பற்றிய தகவல்களைத் தெரிந்து கொண்டார். அந்தக் காலகட்டத்தில் பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பாவின் பல பகுதிகளில் மனித உடலை வெட்டிப் பகுப்பதற்குத் தடை இருந்தது. எனவே கல்லறைகளில் எலும்புக்கூடுகளைத் தோண்டியெடுத்து அவற்றின் எலும்புகளை ஆராய்ச்சி செய்தார் வெசாலியஸ்.
ஒருமுறை, பொது இடத்தில் தூக்கிலிடப்பட்டு அழுக விடப்பட்ட ஒரு மனிதனின் எலும்புக்கூட்டை வெசாலியஸும் அவரது நண்பரும் திருடினர். அதன்பின் வெசாலியஸ் பல மணி நேரம் அதை ஆராய்ச்சி செய்து, எலும்புக் கூட்டின் அமைப்பைப் படமாக வரைந்துகொண்டார்.
வெசாலியஸ் தனது இருபதாவது வயதின் தொடக்கத்தில் இத்தாலியில் உள்ள படுவா பல்கலைக்கழகத்தில் மனித உடலமைப்பு மற்றும் அறுவை சிகிச்சைத்துறை பேராசிரியராக நியமிக்கப்பட்டார். அவர் பாடம் நடத்தும்போது, மனித சடலங்களை நேரடியாக வெட்டிப் பகுத்துக் காண்பிப்பது வழக்கம். (அப்போது சடலங்களை வெட்டுவதற்கான தடைச் சட்டம் இத்தாலியில் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கப்படவில்லை.) அதனால் மிகவும் பிரபலமான வெசாலியஸிடம் ஐரோப்பா முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்து சேர்ந்தனர்.
வெசாலியஸ் தனது ஆசிரியப் பணிக்கு இடையே ஆராய்ச்சியையும் தொடர்ந்தார். அவர் 1543-ம் ஆண்டில் புத்தகம் ஒன்றை வெளியிட்டார். அப்போது அவருக்கு சுமார் 30 வயதுதான் இருக்கும். அந்த நூலின் பெயர், `டி கார்போரிஸ் ஹிïமானி பேப்ரிகா' என்பதாகும். அதாவது, `மனித உடலின் அமைப்பு' என்று அர்த்தம். கேலனின் கருத்துகள் பலவற்றை தவறு என அந்தப் புத்தகம் சுட்டிக் காட்டியதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால் அப்போது இருந்த அறிவுஜீவிகள் வெசாலியஸியன் கண்டுபிடிப்புகளை ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், அவருடைய பெருமையைக் குலைக்கும் வண்ணம் தகாத வார்த்தைகளால் இகழ்ந்து பேசியதால், வெசாலியஸ் தான் பார்த்துக் கொண்டிருந்த பேராசிரியர் வேலையை ராஜினாமா செய்தார். மனம் வெறுத்துப்போய், மனித உடல் அமைப்பு பற்றிய ஆராய்ச்சியையும் வெசாலியஸ் கைவிட்டார்.
ஆனாலும் வெசாலியஸ் எழுதிய அந்த ஒரு புத்தகமே அறிவியல் உலகில் அழியாத புகழை அவருக்குப் பெற்றுத் தந்தது. பல்வேறு விதமான எலும்புகள் மற்றும் தசைகளின் இயற்கை அமைப்பை மிகவும் நுட்பமாகவும், தெளிவாகவும் விளக்கும் முதலாவது நூலாக அது அமைந்தது. அற்புதமான அழகுடன் திகழ்ந்த மனித உடல் அமைப்பு ஓவியங்களை வெசாலியஸுக்கு உதவியாகத் தீட்டியவர் அவரது ஒரு மாணவர்.
காலம்காலமாகப் பின்பற்றப்பட்ட கேலனின் கருத்துகளைத் தகர்த்தெறிந்துவிட்டு நவீன மனித உடல் அமைப்பைத் தெரிந்து கொள்ள வெசாலியஸ் எழுதிய `பேப்ரிகா' நூல் உதவியது.
source:thinathanthi
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment