Friday, October 30, 2009

துபாயை மிஞ்சியது ஹாங்காங் 118 மாடி கட்டிடத்தில் வருகிறது உலகின் உயரமான ஹோட்டல்

 

ஹாங்காங் : ஹாங்காங் நகரில் உள்ள மிகவும் உயரமான கட்டிடத்தில் உலகத்திலேயே மிகவும் அதிக உயரத்தில் உள்ள 17 மாடி ஹோட்டல் உருவாகி வருகிறது. இதனை ரிட்ஜ் கார்ல்டன் குரூப் ஆப் ஹோட்டல்ஸ் உருவாக்கி வருகிறது. அந்த ஹோட்டல் 2010ல் இயங்கத் தொடங்கும். ஹாங்காங் துறைமுகத்தை நோக்கிய நிலையில் சர்வ தேச வர்த்தக மையக் கட்டிடம் உருவாகி வருகிறது. இக்கட்டிடத்தின் இறுதி உயரம் 484 மீட்டராக இருக்கும். மொத்தம் 118 மாடிகளுடன் ஹாங்காங் நகரில் உள்ள மிகவும் அதிக உயரமான கட்டிடமாக இது அமையும். இக்கட்டிடம் ஹாங்காங்கில் மிக உயரமான கட்டிடமாக இருந்தாலும் உலகில் உள்ள உயரமான கட்டிடங்களின் வரிசையில் 3வது இடத்தில் இருக்கும். 

இக்கட்டிடத்தின் மேலே உள்ள 17 மாடிகளில் ரிட்ஜ் கார்ல்டன் ஹோட்டல் குரூப்பின் 6 நட்சத்திர ஹோட்டல் அமையும். இந்த ஹோட்டலில் மொத்தம் 312 அறைகள் இருக்கும். தற்பொழுது உலகின் மிகவும் உயரமான ஹோட்டல் துபாயில் உள்ளது. அது 333 மீட்டர் உயரம் உடையது. 72 மாடிகளைக் கொண்டது. அடுத்து 330 மீட்டர் உயரம் கொண்ட ரியோகியாங் ஹோட்டல் வட கொரியத் தலைநகரான பியோன்கியாங் நகரில் உள்ளது. மூன்றாவது உயரம் உள்ள அல் அராப் ஹோட்டலும் துபாயில் உள்ளது. அதன் உயரம் 321 மீட்டர். எனவே ரிட்ஜ் கார்ல்டன் பணிகள் முடிந்ததும் அது உலகின் மிக உயரமான ஹோட்டலாக அமையும். அது ஹாங்காங் நகரின் புதிய சமூக மையமாக அமையும் என ரிட்ஜ் கார்ல்டன் குரூப் துணைத் தலைவர் மார்க் டிகாசினிஸ் கூறினார்.

source:dinamalar
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails