கொச்சி: மூன்று நிமிடங்களுக்கொரு பெண் வீதம், நாட்டில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்து வருகின்றன. இதில், ராஜஸ்தான் மாநிலம் முதலிடத்தையும், கேரளா இரண்டாம் மற்றும் ஆந்திரா மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளது.
நாட்டில், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கொரு பெண் வீதம், கொடுமைக்கு ஆளாக நேரிடுகிறது. ஒவ்வொரு 29 நிமிடத்திற்கொரு பெண் பலாத்காரம் செய்யப்படுகிறார். மேலும், 77 நிமிடங்களுக்கு ஒரு பெண் வரதட்சணை கொடுமையால் இறக்க நேரிடுகிறது. இவை எல்லாம் நம்ப முடியாத தகவல்கள் என்று தானே யோசிக்கிறீர்கள்? அல்ல.
இவை அனைத்தும் நம் நாட்டில் நடந்தவையாக பதிவாகி உள்ள உண்மைத் தகவல்கள். இத்தகவல்கள் அனைத்தும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய குற்ற ஆவண பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல்கள் என, கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.ஆர். பண்ணூர் மட் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் கொச்சியில், பெண்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளில் இருந்து அவர்களைப் பாதுகாக்க உள்ள சட்டங்கள் குறித்த விழிப்புணர்வுக்கான கருத்தரங்கம், கேரள ஐகோர்ட் வளாகத்தில் நடந்தது.
மாநில சட்ட சேவை ஆணையம் மற்றும் சமூக நலத்துறையும் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கை, தலைமை நீதிபதி எஸ்.ஆர்.பண்ணூர்மட் துவக்கி வைத்து பேசுகையில், "வீட்டிலும் வெளியிலும் பெண்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர். "இவ்வாறு இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி இறக்க நேரிட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நாட்டில் ராஜஸ்தான் மாநிலத்தில் 3,440ம், கேரளாவில் 1,028ம், ஆந்திராவில் 731ம் டில்லியில் 607ம் என உள்ளது' என்றார்.
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment