Wednesday, October 28, 2009

சங்கிலிகளால் கை, கால்கள் கட்டப்பட்டு விசாரிக்கப்பட்ட தமிழர்கள் விடுவிக்குமாறு கோரிக்கை

 

கனடா நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஓஷன் லேடி என்ற கப்பலில் சென்ற 76 இலங்கையர்களில் ஒருதொகுதியினர் கை கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் திங்கட்கிழமை குடிவரவுத்துறை அதிகாரிகள் முன்னிலையில் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். கப்பலில் வந்தவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கு எந்த ஆவணங்களுமே இல்லாத பட்சத்தில் அவர்களை அடையாளம் காண மேலும் 30 நாள்களுக்கு தடுத்துவைக்குமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் எனவும் 'த வன்கூவர் சன்' என்ற பத்திரிகைச் செய்தி கூறியுள்ளது. 

இவர்களில் பலர் தாங்கள் யார் என்பதை நிரூபிப்பதற்கான வலுவான ஆவணங்கள் இன்றிக் கனடா வந்துள்ளனர். இலங்கையர்களில் ஒருவர் தனது கடவுச்சீட்டு, அடையாள அட்டை போன்றவற்றை தனது கனடா பயணத்திற்கான முகவரிடம் கையளித்துவிட்டார் எனவும் அதற்குப் பதில் தனக்கு இந்தியக் கடவுச் சீட்டு வழங்கப்பட்டது எனவும் கனடாவின் எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். 

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிற்கு இந்தக் கப்பல் ஒக்ரோபர் 17 ஆம் திகதிவந்த தருணத்திலிருந்து கனடா அதிகாரிகள் இவர்களை விசாரணை செய்து வருகின்றனர். இவர்களில் எவருக்காவது குற்றச் செயல்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தால் அவர்களை விலக்கப்போவதாகக் கனடா குடிவரவு அமைச்சர் ஜசோன் கென்னியின் அலுவலகம் அறிவித்துள்ளது.

குறிப்பாக அதிகாரிகள் கப்பலில் வந்தவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்பது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். இவர்களில் ஒருவர் விடுதலைப் புலிகளுடன் உள்ள தொடர்பிற்காக சர்வதேச போலீசாரின் கவனிப்பில் உள்ளார். எனினும், ஏனைய அநேகமானவர்கள் மீது இவ்வாறான குற்றச்சாட்டு எதுவுமில்லை என அவர்களுடைய கனடா ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அநேகமானவர்கள் இலங்கை அரசின் நன்கு அறியப்பட்ட வன்முறை, ஒடுக்கு முறையிலிருந்து தப்பியோடிய தமிழர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

"எனது பார்வையில் அவர்கள் அனைவரும் அமைதியாக, ஒழுங்காக வளர்க்கப்பட்ட இளைஞர்கள் போன்று தென்படுகின்றனர்'' என அவர்களில் பலரை விசாரித்துள்ள சட்டத்தரணி லீ ரன்கின் தெரிவித்தார். இலங்கையிலிருந்து அகதி அந்தஸ்து கோரி வருபவர்கள அநேகமானோர் கனடா அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 9 மாதங்களில் 93 வீதமானவர்களின் அகதி அந்தஸ்து கோரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


source:athirvu


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails