அரங்கமே அதிர்ந்தது அவர் பாடி முடித்ததும். ஆனால், கை தட்டியவர்களில் ஒருவர்கூட அவர் பாடியதற்காகக் கைத்தட்டவில்லை என்பதுதான் இதில் விசேஷம்! அப்படியென்ன அவர் பெரிதாகச் சாதித்துவிட்டார் என்ற கேள்வி உங்கள் மனதில் எழாமல் இருக்காது. உண்மை இதுதான்!
திருச்சியில் மலையாளிகள் சங்கம் சார்பில் அண்மையில் நடைபெற்ற பொன் ஓணம் கொண்டாட்ட நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையாவின் படத்தை "இளையநிலா பொழிகிறது' என்ற பாடலைப் பாடிக் கொண்டே நான்கரை நிமிஷத்தில் அற்புதமாக வரைந்து, அரங்கத்தில் உள்ள அனைவரது பாராட்டையும் பெற்றவர்தான் சாதனைக்கு சொந்தக்காரரான கேரளத்தைச் சேர்ந்த இலியாஸ்.
ஓவியம் வரைய அமைதியான சூழல் வேண்டும் என்று கருதப்படும் நிலையில், அதிலிருந்து சற்று விலகி ஏராளமான மக்கள் கூடியிருக்கும் ஒரு மேடையில், தேர்வு செய்யப்பட்ட நபரை அப்படியே தத்ரூபமாகப் படமாக வரைவதுதான் இலியாஸின் சிறப்பம்சம்.
அவரிடம் பேசினோம்: ""கேரள மாநிலம், பாலக்காட்டை அடுத்த மண்யான்காடுதான் எனது சொந்த ஊர். சிறுவயதிலிருந்தே படம் வரைவதில் அதிக நாட்டம் உண்டு. ஓவியம் மீது கொண்ட காதலால் பள்ளி இறுதி வகுப்பை முடித்ததும் நுண்கலை பட்டப்படிப்பில் சேர்ந்து படித்தேன்.
பின்னர், ஓவிய ஆசிரியராகப் பணியைத் தொடங்கினேன். கேரளம் மற்றும் துபையில் ஆசிரியர் பணி செய்தேன். இருப்பினும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றியதால் "மாத்தியோசி' பாணியில் வித்தியாசமான முயற்சியில் இறங்க முடிவு செய்தேன்.
ஓரளவு பாட வரும் என்பதால், நண்பர் ஒருவர் உதவியோடு பாடிக் கொண்டே படம் வரையும் பழக்கத்தை உருவாக்கினேன். தொடக்கத்தில் சிரமமாக இருந்தாலும், முயற்சி எடுத்ததால் இன்று ஏறத்தாழ நான்கரை நிமிஷத்தில் ஒருவரது படத்தை வரையும் அளவுக்கு இதில் தேர்ச்சி பெற முடிந்துள்ளது.
கேரளத்தில் பல மேடைகளில் மலையாளப் பாடல்களைப் பாடிக்கொண்டே இதுபோன்று படங்களை வரைந்துள்ளேன். மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததால், ஓராண்டுக்கு முன்பு ஆசிரியர் பணியை விட்டுவிட்டு முழுநேர ஓவியனாக மாறிவிட்டேன்.
மிமிக்ரி, வித்தியாசமான நடனம், ஒருவரே ஆண் மற்றும் பெண் குரலில் பாடுவது எனப் பல்வேறு திறமைகள் கொண்ட 20 பேர் இணைந்து "டார்க் டாபோடில்ஸ்' என்ற குழுவை ஏற்படுத்தி மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். கற்பனையாக ஓவியம் வரைவதைவிட ஒருவரை நேரில் வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட நேரத்தில் அவரது படத்தை அவர் விரும்பியபடி வரைய வேண்டும் என்பது சற்று சிரமமானதுதான். இருப்பினும், வரவேற்பு அதிகமாக இருக்கும்போது இதுபோன்ற "ரிஸ்க்'கை எடுத்தாக வேண்டியுள்ளது.
மேடை நிகழ்ச்சிகள் இல்லாதபோது மனதுக்குப் பிடித்த ஓவியங்களை வரையத் தொடங்கிவிடுவேன். மூன்று மாதங்களில் 75 படங்களை வரைந்துள்ளேன். 100 ஓவியங்களை வரைந்து முடித்ததும் கேரளத்தில் ஓவியக் கண்காட்சியொன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளேன்' என்றார் இலியாஸ்.
இலியாசுக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். மனைவி பெயர் ஷாஜிதா. சாதிப்பதற்கு திருமணம் ஒரு தடையே கிடையாது என்பது பாடும் ஓவியர் இலியாஸின் "அட்வைஸ்'.
source:dinamani
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment