Monday, October 19, 2009

உலகப் பத்திரிகையாளர்களின் உதாரணம்!

 

வில்லியம் சஃபையர் பேனா ஓய்ந்துவிட்டது. அவர் காலமாகிவிட்டார்.

'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திகள் எழுதிவந்தவர். தனது கட்டுரைகள் மூலமாக உலகமெங்கும் சர்ச்சைகளை, விவாதங்களை உருவாக்கியவர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் பலரும் அவரை குருவாக எண்ணி மதித்தார்கள். பத்திரிகைத் துறையில் வில்லியம் சஃபையர் அளவுக்கு உலகளாவிய செல்வாக்கு செலுத்திய ஓர் எழுத்தாளரைக் காண்பது அரிது. 79 வயதில் வந்திருக்கிறது மரணம். என்றபோதிலும், சஃபையரின் ஆளுமையை எண்ணும்போது அதை ஓர் அகால மரணமாகவே நினைக்கத் தோன்றுகிறது.

வில்லியம் சஃபையருக்கு பல்வேறு பெருமைகள் உண்டு. நிக்சன் அமெரிக்க அதிபராக இருந்தபோது அவருக்கு உரைகளைத் தயாரித்துத் தரும் பணியில் சஃபையர் ஈடுபட்டிருந்தார். 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையில் 1973-ம் ஆண்டு பத்தி எழுத ஆரம்பித்தார். வாரத்துக்கு இரண்டு பத்திகள் என... ஓய்வுபெற்ற 2005-ம் ஆண்டு வரை அவர் எழுதிய கட்டுரைகள் மூவாயிரத்தைத் தாண்டும். அந்த நாளேட்டின் ஞாயிறு சிறப்பிதழ்களில், மொழியின் ஆளுமை மற்றும் அதைக் கையாளும் விதம் குறித்து இன்னொரு பத்தியையும் தொடர்ந்து எழுதிவந்தார். அவர் இறக்கும் வரையில் அது தொடர்ந்து வெளிவந்தது.

நெருக்கடியான பணிச்சுமையில் மூழ்கியிருந்தபோதிலும் இலக்கி யத்தின் மீதான அவரது காதல் குறையவில்லை. அவர் நான்கு நாவல்களை எழுதியிருக்கிறார். அவை விற்பனையில் சாதனை படைத்தவை. அவருடைய கட்டுரைகள் பல்வேறுதொகுப்பு களாக வெளியிடப்பட்டுள்ளன. மொழியைப் பற்றி அவர் எழுதிவந்தவை உலகெங்கும் ஆங்கில மொழி குறித்து அக்கறை காட்டிவரும் ஆய்வாளர்களுக்கு மட்டுமல்லாமல், சாதாரண வாசகர்களுக்கும்கூட சுவாரஸ்யம் தருபவை.

1929-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிறந்த சஃபையர் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு பட்டப்படிப்புக்காக பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால், இரண்டே ஆண்டுகளில் படிப்பை விட்டு விட்டு ஓடிவந்துவிட்டார். அவர் படிக்காமல் வெளியேறிய சிராக்யூஸ் பல்கலைக்கழகத்துக்கு, அவரே பிறகு சிறப்பு பேச்சாளராகச் சென்றார். அடுத்து அந்தப் பல்கலைக்கழகத்தின் அறங்காவலர்களில் ஒருவராகவும் ஆனார். பட்டம்கூட பெறாத ஒரு 'ட்ராப் அவுட்' பல்கலைக்கழகப் பேராசிரியர்களைவிடவும் தேர்ந்த சிந்தனையாளராக உருவெடுத்தார் என்றால்... அதற்குப் பின்னால் எத்தகைய உழைப்பும், முயற்சியும் இருக்க வேண்டும்!

பத்தி எழுத்துகளில் வில்லியம் சஃபையர் ஒரு புதிய பாணியை உருவாக்கினார். தன்னுடைய எழுத்து முறையை 'ஒப்பினியனேட்டட் ரிப்போர்ட்டிங்' என்று அவர் அழைத்தார்.

''பத்திரிகைத் துறையில் ஓர் அபிப்ராயம் இருக்கிறது. நிருபர்கள் ஒரு செய்தியை எழுதும்போது அவர்கள் ஒருபக்கச் சார்பு அற்றவர்களாக இருக்கவேண்டும். ஆனால், பத்தி எழுதும் எழுத்தாளர்களோ அவர்களது கருத்துகளை, ஒரு நிலைப்பாடு எடுத்துத் தெரிவிக்க உரிமை கொண்டவர்களாக இருக்கிறார்கள். வாசகர் களும் அதை ஏற்கிறார்கள். இந்தப் பிரிவினை எனக்கு சுவாரஸ்யமாக இருந்தது. வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையிலும் நியூஸ் வீக் பத்திரிகையிலும்பத்திகள் எழுதிக்கொண்டிருந்த என்னுடைய ஆதர்ச எழுத்தாள ரான ஸ்டூவர்ட் அல்சாப் என்னிடம் ஒருமுறை சொன்னது நினைவுக்கு வருகிறது. 'உனது பத்தியில் எவரும் அறிந்திராத உண்மை ஒன்றை நீ பொதித்து வைக்க முடியுமானால், நீ கட்டாயம் வாசகர்களை ஈர்க்க முடியும். அவர்களை எதிர்வினையாற்ற வைக்கவும் முடியும்' என்று அல்சாப் கூறுவார். ஒரு பத்தி எழுத்தாளர், எப்போதுமே நிருபர்களோடு போட்டிபோடக் கூடாது. எனவே, ஒரு புதியதகவல் உங்களுக்குக் கிடைத்தால், அதை நீங்கள்எழுதும் பத்தியின் உள்ளேயே சாமர்த்தியமாகப் பொதித்து வைத்து, அதையட்டி உங்களது கருத்துகளை கட்டியெழுப்பவேண்டும். அதுதான் 'ஒப்பினிய னேட்டட் ரிப்போர்ட்டிங்' எனப்படும்'' என்று வில்லியம் சஃபையர் தனது புதுவகை எழுத்துக்கு விளக்கம் அளித்தார்.

அவரைத் தொடர்ந்து உலகெங்கும் ஏராளமான எழுத்தாளர்கள் அந்தப் பாணியை இப்போது பின்பற்றுகிறார்கள்.

ஒரு பத்தி எழுத்தாளர் நினைவில் கொள்ளவேண்டிய விதிமுறைகளை, வில்லியம் சஃபையர் வகுத்துத் தந்திருக் கிறார். ஆச்சரியக் குறியை அதிகம்பயன்படுத்தக் கூடாது என்பது அவர் வகுத்துத் தந்த விதிமுறைகளில் ஒன்றாகும்.

யூதரான வில்லியம் சஃபையர் எப்போதுமே இஸ்ரேலுக்கு ஆதரவாகவே எழுதிவந்தார் என்பது அவர் மீதான விமர்சனங்களில் ஒன்று. அது மட்டு மின்றி... ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்துசெல்ல வேண்டும் என்று எழுத்தால் வற்புறுத்தினார் அவர். ஒருமுறை ஹிலாரி கிளின்ட்டனை விமர்சித்து அவர் எழுதியது மிகப்பெரும் சர்ச்சையைக்கிளப்பியது. 'அதிபர் என்ற பதவி மட்டும் தடுக்காமல் இருந்திருந் தால், இந்நேரம் சஃபையரின் மூக்கை கிளின்ட்டன் உடைத்திருப்பார்' என்று அதிபர் மாளிகையில் இருந்து ஓர் அறிக்கையே வெளியிடுகிற அளவுக்கு கோபத்தைத் தூண்டிய கூரிய விமர்சனம் அது.

வில்லியம் சஃபையர் அகராதியியலிலும் முக்கிய மான பங்களிப்பைச் செய்திருக்கிறார். அரசியல் சொற்களுக்காக அவர் பிரத்தியேகமான அகராதி ஒன்றைத் தயாரித்தார். சுமார் ஐந்து லட்சம் சொற்கள் அதில் தொகுக்கப்பட்டுள்ளன. 'ஆஃப் த ரெக் கார்டு' என்ற சொல் பத்திரிகையாளர்கள் மத்தியில் இன்று அதிகம் புழங்குகிற ஒரு சொல்லாகும். அது எப்போது பயன்பாட்டுக்கு வந்தது, அதன் உண்மையான அர்த்தம் என்ன என்பது போன்ற சுவாரஸ்யமான தகவல்கள்கூட அந்த அகராதியில் இடம்பெற்றுள்ளள.

2005-ம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் பத்தி எழுதுவதிலிருந்து விடைபெற்றபோது, 'ஓய்வு பெறாதீர்கள்' என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரையை இவர் எழுதியிருந்தார். மரணம் குறித்து அதில், 'நாம் இப்போதெல்லாம் நீண்ட காலம் வாழ்கிறோம். அமெரிக்கர்களின் சராசரி ஆயுட் காலம் 47 ஆண்டுகள் என்பதிலிருந்து 77 ஆண்டுகளாக உயர்ந்துவிட்டது. புற்றுநோய், இதயநோய், மாரடைப்பு முதலானவற்றைத் தீர்க்கும் சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. மரபணு தொழில்நுட்பம், ஸ்டெம் செல் உருவாக்கம், உறுப்பு மாற்று சிகிச்சைகள் போன்றவற்றால் இன்னும் அதிக நாள் வாழக் கூடிய வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால், இதன் நோக்கம் என்ன? உடல் வலிமையாகவே இருக்கும். மூளை மட்டும் வயதுக்கேற்ப சோர்ந்துபோய்விடும். அப்படியான நிலையில் வாழ்வதென்பதே சுமையாக மாறிவிடும். உடலின் ஆரோக்கியத்தை நீட்டிக்கும்போது நாம் மூளையின் திறனையும் பாதுகாக்க வேண்டும்' என்று சஃபையர் குறிப்பிட்டிருந்தார்.

அப்படி மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாப் பதற்காக அமைப்பு ஒன்றையும் நண்பர்களோடு சேர்ந்து உருவாக்கினார். அதில் அதிக நேரத்தைச் செலவிடவேண்டும் என்பதற்காகவே பத்தி எழுதுவதி லிருந்து அவர் ஓய்வுபெற்றார். 'மருத்துவ மற்றும் மரபணு விஞ்ஞானங்கள் நமது ஆயுட் காலத்தை நீட்டிக்கும். நரம்பியல் விஞ்ஞானமோ வயதாவதிலிருந்து மூளையைக் காப்பாற்றிவிடும். அறிவியல் நமக்குத் தரப்போகும் இந்தக் கொடைகளை நாம் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்' என்று நம்பிக்கையோடு எழுதியிருந்தார் வில்லியம் சஃபையர்.

ஆனால், அவரையும் அவரது நம்பிக்கையையும் புற்றுநோய் தின்று தீர்த்துவிட்டது! 

source:vikatan
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails