சென்னை, அக். 19: இலங்கை அதிபர் ராஜபட்சவை சர்வதேச போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
மேலும் இக் கோரிக்கையை வலியுறுத்தி கட்சியின் சார்பில் வரும் 22-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
இலங்கைத் தமிழர்களின் வாழ்நிலையை நேரில் ஆய்வு செய்த தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு தனது அறிக்கையில், எதிர்க்கட்சிகளின் அவதூறுக்கு மாறாக தமிழர்களின் அவல நிலையை உள்ளது உள்ளபடியே வெளிப்படுத்தியது.
அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் அங்கே தலைவிரித்தாடுகின்றன. மக்களிடையே மன அழுத்தங்களும், அச்சமும் மோலோங்கி நிற்கின்றன. கால் வயிற்று கஞ்சிக்காக கையேந்தி நிற்கிறார்கள். மெலிந்த உடல்களிலிருந்து ஏக்கப் பெருமூச்சுகளும், முனகல்களும் மட்டுமே வெளிப்படுகின்றன. ""எங்களை ஒட்டுமொத்தமாக நஞ்சு வைத்துக் கொன்று விடுங்கள் அய்யா '' என்று சிலர் கதறி அழுதனர்.
2 பேர் மட்டுமே படுத்து எழக் கூடிய கூடாரங்களில் 10 பேர் வரை மனிதாபிமானமற்ற முறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தண்ணீருக்காக அவர்கள் படும்பாட்டை சொற்களால் விவரிக்க முடியாது.
இலங்கை ராணுவ ஆட்சியின் கொடுமைகளை எம்.பி.க்கள் குழு உலக அரங்கில் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. இந்நிலையில் இந்திய அரசு இலங்கை அரசோடு கொண்டிருந்த நட்புறவின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களின் வாழ்வுக்காக மேலும் ரூ.500 கோடி வழங்கத் தீர்மானித்துள்ளது.
மறுவாழ்வு மற்றும் மறுகட்டுமானப் பணிகளுக்காக உதவ வேண்டுமென்பது இன்றியமையாத ஒன்று. எனினும் இலங்கை இனவெறி ஆட்சியாளர்களின் ஈவிரக்கமற்ற மனித உரிமை மீறல்களை உலக அரங்கில் அம்பலப்படுத்த வேண்டியதும் அவசியம்.
பொருளாதார தடையும்... எனவே இலங்கை இன வெறி ஆட்சியாளர்களை குறிப்பாக, ராஜபட்ச மற்றும் அவரது சகோதரர்களை சர்வதேச போர்க் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும்; இலங்கை அரசுக்கு உலக அளவில் பொருளாதார தடை விதிக்க வேண்டும் என இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் சென்னையில் நடத்தப்படுகிறது என திருமாவளவன் அதில் தெரிவித்துள்ளார்.
அதிருப்தி எதிரொலி: இலங்கை சென்றபோது அந்நாட்டு அதிபர் ராஜபட்சவுடன் திருமாவளவன் கைகுலுக்கியதையும், அவருடன் ஆலோசனை நடத்தியதையும் பல்வேறு தமிழ் அமைப்புகள் முன்னதாக குறைக்கூறி அதிருப்தி தெரிவித்திருந்தன. இந்நிலையில் இலங்கையில் இருந்து சென்னை திரும்பிய ஒருவாரத்துக்கு பிறகு இத்தகைய அறிக்கையை திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.
source:dinamani
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment