புதுடெல்லி, அக்.14, 2009 : தனக்கு பாராட்டுத் தெரிவித்து வரும் இ-மெயில் குவியலால், இந்தியர்கள் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார், வேதியியல் துறைக்கான நோபல் பரிசு பெற்ற தமிழக விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்.
இது தொடர்பாக அவர் இ-மெயில் அளித்த பேட்டி ஒன்றில், "இந்தியாவில் இருந்து எல்லா தரப்பு மக்களும் எனக்கு இ-மெயில் அனுப்பி வருகிறார்கள். இதனால், எனது இன்பாக்ஸ் பகுதியையே நிரப்பி வழிகிறது. அதை அழிப்பதற்கே எனக்கு ஒன்றிரண்டு மணி நேரம் ஆகிவிடுகிறது.
இந்த இ-மெயில் குவியலால் எனது சகாக்களிடம் இருந்து வரும் முக்கியமான தகவல்கள் கூட படிப்பதற்கு இயலாமல் போய்விடுகிறது. இவர்களுக்கு கொஞ்சம் கூட இரக்கமே கிடையாதா? நான் நோபல் பரிசு பெற்றதற்காக இவர்கள் பெருமைப்படுவது சரிதான். அதற்காக ஏன் எனக்கு இப்படி தொல்லை தருகிறார்கள்?
இ-மெயில் அனுப்புபவர்களில் பலரும் பல ஆண்டுகளாக என்னைத் தொடர்பு கொள்வதைப் பற்றி யோசிக்காதவர்கள். இப்போது திடீரென என்னைத் தொடர்பு கொள்ளும் ஆர்வம் எப்படி வந்தது என்று நினைக்கையில் வினோதமாக இருக்கிறது," என்று அதிருபதியுடன் கூறியிருக்கிறார்.
மேலும், தன்னைப் பற்றி வெளியான பல தகவல்களையும் மறுத்துள்ள அவர், "என்னைப் பற்றி ஏராளமான பொய்த் தகவல்கள் வெளியாகி வருகின்றன. நான் சிதம்பரம் நகரில் பள்ளிப் படிப்பும், பி.யு.சி.யும் படித்ததாக செய்திகள் வெளிவருகின்றன. அது தவறானது.
நான் மூன்று வயதிலேயே சிதம்பரம் நகரை விட்டு குஜராத்துக்கு சென்று விட்டதால், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கவில்லை. ஆனால், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எனக்கு ஆசிரியர்களாக இருந்ததாக, கோவிந்தராஜன் போன்றோர் சொல்கிறார்கள். அவர்களை யார் என்றே எனக்குத் தெரியாது.
நான் நோபல் பரிசு பெற்றதன் மூலம், நிறைய மாணவர்கள் ஊக்கம் அடைந்து விஞ்ஞானம் படிக்க முன்வந்தால், அதுதான் நல்ல விஷயம்தான். ஆனால், தனிப்பட்ட முறையில் எனக்கு முக்கியத்துவம் கொடுப்பது தவறு.
நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன் என்பது கூட முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல. நாமெல்லாம் மனிதர்கள். ஒருவரின் தேசம் என்பது, பிறப்பால் வருவது தானே?
எனக்கு இந்தியாவில் பணியாற்ற வாய்ப்பு வந்திருப்பதாக வெளியான தகவலிலும் உண்மையில்லை. அப்படியே யாராவது அணுகினாலும், அந்த வாய்ப்பை நான் உடனடியாக மறுத்து விடுவேன் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் பெங்களூரில் உள்ள இந்திய விஞ்ஞான கழகத்தில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி வருகிறேன். அதற்காக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கு சென்று 2 வாரங்கள் தங்கி இருந்து பாடம் நடத்துவேன். மற்றபடி, நான் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜில் உள்ள எனது நுண்ணணு உயிரியல் ஆய்வுக்கூடத்தில் பணியாற்றுவதைத்தான் பெரிதும் விரும்புகிறேன். அதை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை. அதை விட மகிழ்ச்சியாக பணியாற்றக் கூடிய இடத்தை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது," என்றார் ராமகிருஷ்ணன்
source:vikatan
--www.thamilislam.co.cc
No comments:
Post a Comment