மகிந்த அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு தென் மாகாணசபைத் தேர்தல் முடிவு அமைத்திருக்கிறது. இந்தத் தேர்தலில் 90 சதவீதமான வாக்குகள் தமக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் இருந்தது. ஆனால் 68 வீதத்துக்கும் குறைவான வாக்குகளையே ஆளும்கட்சியால் பெற முடிந்துள்ளது. இது அரசாங்கத்தைப் பெரிதும் நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
அத்துடன் அரசாங்கத்தின் அரசியல் நிகழ்ச்சித் திட்டங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய நிலைக்குள் தள்ளியிருக்கிறது. போரில் பெற்ற வெற்றியைக் கொண்டு- வாக்காளர்களை வசப்படுத்த முடியும் என்றும், அதைக் கொண்டே இன்னும் ஒரு தசாப்த காலத்துக்காவது காலத்தைக் கழிக்கலாம் என்றும் போடப்பட்ட கணக்குகள் தப்பாகும் போலத் தெரிகிறது.
தென் மாகாணசபைத் தேர்தல் முடிவு இதையே தான் வெளிப்படுத்தியிருக்கிறது. இதன் காரணமாக அரசாங்கம் அவசர அவசரமாகத் தேர்தல்களை நடத்தி அதிகாரத்தை உறுதி செய்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் ஏப்ரல் 24ம் திகதியுடன் காலாவதியாகிறது.
எனவே பொதுத்தேர்தல் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தப்பட்டாக வேண்டும். அதேவேளை ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைய இன்னமும் இரண்டு ஆண்டுகள் இருக்கின்றன. ஆனால் அரசாங்கம் அடுத்த இரண்டு ஆண்டுகள் வரைக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்காகக் காத்திருக்கத் தயாராக இல்லை.
போர் வெற்றியை அரசியல் வெற்றியாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உச்சக் கடத்தில் இருந்த போதே அடுத்த வருடத் தொடக்கத்தில் ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் முடிவு எடுக்கப்பட்டு விட்டது. அதாவது போர் வெற்றியைக் கொண்டு பிரமாண்டமானதொரு அரசியல் வெற்றியைப் பிரகடனப்படுத்திக் கொள்வதே அரசாங்கத்தின் திட்டம். ஆனால் இப்போது போர் வெற்றியின் சாயம் வெளுக்கத் தொடங்கியுள்ள நிலையில்- இரண்டு தேர்தல்களையும் குறுகிய காலத்துக்;குள் நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உருவாகியிருக்கிறது.
போர் முடிவுக்கு வந்த பின்னர் நடத்தப்பட்ட ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும்கட்சிக்குக் கிடைத்த வாக்குகளின் வீதத்தை விட தென் மாகாணசபைத் தேர்தலில் கிடைத்த வாக்குகளின் வீதம் மிக மிகக் குறைவானது. இது ஆளும்கட்சிக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருப்பது ஒன்றும் ஆச்சரியத்துக்குரியதல்ல. ஏனென்றால் ஊவா மாகாணத்தில் அரசின் கூட்டணியில் உள்ள சிறுபான்மைக் கட்சிகள் சில தனித்தும் போட்டியிட்டன. அதைவிட சிறுபான்மையினரின் வாக்குகள் அரசாங்கத்துக்கு சார்பாகவும் இருக்கவில்லை. ஆனாலும் ஊவா தேர்தல் களத்தில் பிரமாண்டமான வெற்றி அரசாங்கத்துக்குக் கிடைத்தது. ஆனால் தென் மாகாணசபைத் தேர்தலில் சிறுபான்மையினர் தாக்கம் செலுத்தக் கூடிய சக்தியாக இருக்கவில்லை.
பெரும்பாலும் சிங்கள வாக்காளர்களைக் கொண்ட தென் மாகாணத்தில் அரசாங்கத்தால் நினைத்தது போன்ற வெற்றியைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஏனைய இடங்களின் நிலை என்னவாகும் என்ற கேள்வி உருவாகியுள்ளது. குறிப்பாக பொதுத்தேர்தல் என்று வரும்போது சிறுபான்மைக் கட்சிகளின் தாக்க்ம அதிகமாகவே இருக்கும். இதைச் சமாளிப்பது ஒரு பிரச்சினை. இந்தநிலையில் போரின் வெற்றி குறித்த உற்சாகத்தில் இருந்து சிங்கள மக்கள் விடுபடத்த தொடங்கியிருப்பதும்- அவர்களின் கவனம் பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ளிட்ட வேறு திசைகளில் திரும்பி வருவதும் அரசுக்கு நெருக்கடியாக அமைந்துள்ளது.எனவே தான் விரைவாகப் பொதுத்தேர்தலை நடத்த வேண்டிய அவசரம் அரசுக்கு உருவாகியிருக்கிறது.
அடுத்த பொதுத்தேர்தலில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பலத்தைக் கைப்பற்றுவோம் என்று கூறித் திரிந்த அமைச்சர்கள் இப்போது, மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் என்று நம்பும் அளவுக்குக் கீழ் இறங்கியிருக்கின்றனர். அதேவேளை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பிரமாண்டமான வெற்றியைப் பெறுவது ஜனாதிபதி மகிந்தவினதும் அவரது அரசாங்கத்தினதும் மற்றொரு இலக்கு. இதுவரையில் நடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் எந்தவொரு வேட்பாளருமே- மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்றது கிடையாது.
சந்திரிகாவுக்குக் கிடைத்தது 62 வீத வாக்குகள் தான். ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றிலேயே ஆகக் குறைந்த வாக்குகளைப் பெற்று தெரிவானவர் மகிந்த ராஜபக்ஸ தான். ஆனால் அடுத்த தேர்தலில் மூன்றில் இரண்டுக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றுத் தெரிவாவதே அவரது இலக்கு. ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்த வேண்டும் என்பது அவரது ஆசை. இந்த நிலையில் தான் இன்னும் இரண்டு ஆண்டுகளில் தேர்தலை நடத்தினால்- போரின் வெற்றியை சிங்கள மக்கள் மறந்து விடுவார்களோ என்ற அச்சத்தை தென் மாகாணசபைத் தேர்தல் முடிவு உருவாக்கியிருக்கிறது.
இரண்டு ஆண்டுகளுக்குள் எதுவும் நடக்கலாம் என்ற நிலையில் இப்போதே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது அவசியமாகியிருக்கிறது. இதனால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்துக்குள் இரண்டு தேர்தல்களும் நடக்கப் போவது உறுதி. ஆனால் எது முதலில் நடக்கும் என்பதே இப்போதுள்ள கேள்வி. தென் மாகாணசபைத் தேர்தல் முடிந்த மறுநாள் , அலரிமாளிகையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களைச் சந்தித்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, அடுத்த தேர்தல் உங்களுக்குத் தான் என்று கூறியிருந்தார்.
தொகுதி அமைப்பாளர்கள் அனைவரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது வழக்கம். எனவே பொதுத்தேர்தலே முதலில் நடக்கும் என்ற கருத்து வலுவடைந்துள்ளது. விரைவாக பொதுத்தேர்தலை நடததுமாறு-ஜனாதிபதி மகிந்தவிடம் அமைச்சர்கள் சிலர் ஆலோசனை கூறியிருப்பதாகவும் தகவல். தென்னிலங்கையில் ஏற்பட்டு வரும் அரசியல் மாற்றமானது அரசாங்கத்துக்குச் சார்பான வகையில் இருக்காததர்ல தான் அமைச்சர்கள் இப்படி ஆலோசனை கூறியிருக்கின்றனர்.
எனவே முதலில் பொதுத்தேர்தல் நடக்கலாம் என்ற கருத்து வலுவடைந்துள்ளது. அதேவேளை பசில ராஜபக்ஸ தனது எம.;பி பதவியை ராஜினாமா செய்து விட்டு- ஜனாதிபதி தேர்தலில் பொட்டியிடும் மகிந்த ராஜபக்ஸவுக்காக பிரசாரத்தை மேற்கொள்ளப் போவதாக அறிவித்திருக்கிறார்.
முதலில் ஜனாதிபதித் தேர்தல் தான் நடக்கும்; என்பதற்கான அறிகுறியாகவும் இதை எடுத்துக் கொள்ளலாம். அதேவேளை ஜெனரல் சரத் பொன்சேகா விவகாரமும் அடுத்து நடக்கப் போகும் தேர்தல்களைத் தீர்மானிக்கும் காரணியாக அமையலாம். எவ்வாறாயினும் அடுத்த மாதம் 19ம் திகதியுடன் ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு முடிவடைவதால் அதற்குப் பிறகு எப்போதும் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்படலாம்.
தென் மாகாணசபைத் தேர்தலின் முடிவு திருப்தியாக அமையாததால்- ஏப்ரல் மாதம் வரை பொறுத்திராமல் வருடத்தின் தொடக்கத்திலேயே இரண்டு தேர்தல்களையும் நடத்த அரசாங்கம் முயற்சிக்கலாம்.
சத்திரியன்
--
www.thamilislam.co.cc
No comments:
Post a Comment