Thursday, October 15, 2009

மகிந்தாவின் தலைக்கு மேல் தொங்கும் கத்தி!

 

mahiதலைக்கு மேல் தொங்கும் கத்தியாக மகிந்தாவை அச்சுறுத்தும் அழுத்தங்கள்!

என்னதான் அரசாங்கம் நியாயங்களைக் கூறிக் கொண்டிருந்தாலும் மகிந்தாவை ஏற்கின்ற நிலையில் சர்வதேசம் இல்லை

வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தடுப்பு முகாம்களில்; நீண்டகாலமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கும் விவகாரம் அரசாங்கத்துக்கு நாளுக்கு நாள் சிக்கல்களை அதிகமாக்கி வருகிறது. சர்வதேச ரீதியாக இது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், அரசாங்கம் பல்வேறு அழுத்தங்களைச் சுமக்கின்ற நிலையையும் தோற்றுவித்துள்ளது.

என்னதான் அரசாங்கம் நியாயங்களைக் கூறிக் கொண்டிருந்தாலும் அதை ஏற்கின்ற நிலையில் சர்வதேசம் இல்லை என்பது வெளிப்படை. இப்படி பொதுமக்களைத் தடுத்து வைத்திருப்பது ஐ.நா.வின் சர்வதேச உடன்பாடுகளுக்கு விரோதமானது என்று ஐரோப்பிய நாடாளுமன்றம் கடந்த வாரம் கூறியிருக்கிறது. அத்துடன் முகாம்களில் உள்ள மக்களுக்கு நடமாட்ட சுதந்திரம் மறுக்கப்பட்டிருப்பது குறித்தும் கவலையை வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தெற்காசிய விவகாரங்களுக்கான பிரதிநிதிகள் குழுவின் தலைவர் ஜீன் லம்பேர்ட் இது குறித்துக் கருத்து வெளியிட்ட போது- "இடம்பெயர்ந்த மக்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பொது மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேசப் பிரகடனத்தை மீறுவதாக அமைந்துள்ளது" என்று கூறியிருக்கிறார்.

அதேவேளை, பிரித்தானிய அமைச்சர் மைக் பொஸ்டர் இலங்கைக்கு விஜயம் செய்து இடம்பெயர்ந்த மக்களின் நிலைமைகள் குறித்து நேரில் பார்வையிட்ட பின்னர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இந்த மக்கள் தொடர்பான அரசின் போக்கினால் அதிர்ச்சியடைந்துள்ள பிரித்தானியா, முகாம்களுக்கான அவசர உதவிகளைத் தவிர ஏனைய அனைத்து உதவிகளையும் நிறுத்தப் போவதாக எச்சரித்துள்ளது. ஏற்கனவே இருக்கும் முகாம்களிலிருந்து புதிய முகாம்களுக்கு இடம்பெயர்ந்தவர்களை மாற்றும் நடவடிக்கைகளுக்கு தாம் நிதியுதவி வழங்க முடியாது என்றும் பிரித்தானியா கூறிவிடடடது. ஆனால் சிறீலங்காவோ பிரித்தானியாவின் இந்த எச்சரிக்கையைப் பற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.

mdog

முகாம்களில் உள்ளவர்களுக்கான உதவியை பிரித்தானியா நிறுத்தினாலும், வேறு பல நாடுகள் இலங்கைக்குத் தொடர்ந்து உதவத் தயாராக இருப்பதாகவும்- இந்த முடிவால் தாம் கவலைப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியான ரஜீவ விஜயசிங்க. அதேவேளை, பிரித்தானியாவின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் மகிந்த சமரசிங்க வெளியிட்டிருக்கும் கருத்தம் விசனத்தை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

"முகாம்களில் தங்கியுள்ள மக்களை விரைவாக மீள்குடியேற்றுவது தொடர்பாகவோ- அவர்களின் நடமாட்ட சுதந்திரம் தொடர்பாகவோ பிரித்தானியா எமக்கு அறிவுரை கூறவேண்டிய அவசியம் இல்லை." என்று கூறியிருக்கிறார் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க.

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் விடயத்தில் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் அதிகரித்து வருவதை அமைச்சர் மகிந்த சமரசிங்க ஏற்றுக்கொள்ளும் அதேவேளை- இந்த அழுத்தங்களுக்கு புலம்பெயர் தமிழ்மக்களின் நெருக்குதல்கள் காரணமாக இருக்கலாம் என்று கருத்து வெளியிட்டிருக்கிறார். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களையும் அரசாங்கம் தவறான கண்ணோட்டத்துடனேயே பார்க்கிறது என்பது இதிலிருந்து வெளிப்படையாகியிருக்கிறது. இதனால் தான், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவும், பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் சர்வதேச அழுத்ங்களுக்கு நாடு ஒருபோதும் அடிபணியாது என்று வீராப்பாகப் பேசி வருகின்றனர்.

இடம்பெயர்ந்துள்ள மக்களின் விடயத்திலாயினும் சரி -வேறெந்த விடயத்திலாயினும் சரி வெளிநாடுகளின் அழுத்தங்களுக்கு வளைந்து கொடுப்பதில்லை என்ற பிடிவாதத்தில் அரசு இருக்கிறது. கண்ணிவெடிகளினால் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் காரணம் காட்டிக் கொண்டு மீள்குடியமர்வை தாமதம் செய்து வருகிறது அரசாங்கம். அதேவேளை முகாம்களில் வடிகாலமைப்பு வசதிகளை மேற்கொள்வது, நீண்டகாலத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் முகாம்களில் சிறிய தோட்டங்களை உருவாக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது என்பன் மீள்குடியமர்வைக் குறுகிய காலத்துக்குள் நிறைவேற்ற அரசாங்கம் தயாரில்லை என்பதையே எடுத்துக் காட்டுகின்றன.

மீள்குடியமர்வு, முகாம்களில் உள்ளவர்களின் சுதந்திரமான நடமாட்டம் ஆகியவற்றை சர்வதேச சமூகம் எப்படித்தான் வலியுறுத்தினாலும் அதற்கெல்லாம் அரசு செவிசாய்ப்பதாக தெரியவில்லை. இந்தநிலையில் அரசாங்கம் பொருளாதார ரீதியான நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஆபத்தும் உருவாகி வருகிறது.

முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்பான அழுத்தங்கள் அதிகரித்துள்ள நிலையில்- அரசாங்கம் இதுகுறித்து ஐநா பொதுச்செயலர் பான் கீ மூன், மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான ஆணையாளர் ஜோன் ஹோம்ஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு விளக்கமளிக்க முடிவு செய்திருக்கிறது. இதற்காக மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க அடுத்தவாரம் நியூயோர்க் செல்லவுள்ளார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் சிறீலஙா அரசாங்கம் சந்திக்கும் அழுத்தங்கள் அதனால் தாங்க முடியாத கட்டத்தை அடைந்திருக்கிறது. சர்வதேச அழுத்தங்களைச் சமாளிப்பது என்பது சாதாரண விடயமல்ல. அதேவேளை சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து மீள்குடியமர்வுக்கு அனுமதி வழங்கவோ-அல்லது முகாம்களில் அடைபட்டுள்ள மக்களுக்கு நடமாட்ட சுதந்திரத்தை வழங்கவோ அரசாங்கம் தயாராகவும் இல்லை.

மாரிகாலம் தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில்- சர்வதேச சமூகத்தை எப்படியாவது திருப்திப்படுதியாக வேண்டிய கட்டம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தான் ஒரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்கு மாற்றி- அவர்களை விடுவிப்பது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்க முயன்றது.
ஆனால் இது ஏமாற்று வேலை என்கிறது சர்வதேசம்- இதற்கு நிதி கொடுக்கவும்; அது தயாராக இல்லை. என்னதான் அரசு சர்வதேச சமூகத்தை சமாதானப்படுத்த முயன்றாலும்- முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் விடயத்தில் அரசு நெகிழ்வுப் போக்கைக் கடைப்பிடிக்க முன்வராத வரைக்கும் அது சாத்தியமாகாது. அதுவரையில் இந்த விவகாரம் இலங்கை அரசுக்கு தலைக்கு மேல் தொங்கும் கத்தியாகவே இருக்கப் போகிறது.

-சத்திரியன்-
mdog1


source:tamilspy


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails