Sunday, October 25, 2009

இலங்கை மீதுள்ள போர்க்குற்றங்களைப் பட்டியலிட்டுள்ளது அமெரிக்கா

 

இலங்கையில் இந்த வருடம் ஜனவரி 2 ஆம் திகதி முதல் மே 18 ஆம் திகதி வரை நடந்த யுத்தத்தில் 170 சர்வதேச சட்டமீறல் சம்பவங்கள் இடம் பெற்றன என்றும் ஆயிரக்கணக்கான பொது மக்கள் இரு தரப்பாலும் கொல்லப்பட்டனர் என்றும் அமெரிக்காவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகள், செய்தி நிறுவனங்கள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவை தெரிவித்த பகிரங்கப்படுத்தப்படாத தகவல்கள் மற்றும் செய்மதிப்படங்கள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்க வெளிவிவகார அமைச்சு தயாரித்துள்ள 68 பக்க அறிக்கையிலேயே இவை குறிப்பிடப்பட்டுள்ளன. இதனால் பொது மக்கள் அனுபவித்த அவலங்கள் குறித்து மிகவும் வேதனையளிக்கக்கூடிய விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இலங்கை அதிகாரிகள் தாம் நம்பிக்கையான விசாரணைகளை நடத்துவதாகக் கூறியுள்ளதால் அமெரிக்கா அதை ஏற்றுக்கொண்டு இலங்கையில் உண்மையில் பக்க சார்பற்ற விசாரணை நடக்கிறதா என பார்க்கபோவதாக இந்த அறிக்கைக்கான விசேட தூதர் ஸ்ரீபன் ரப் கூறினார். இதேவேளை அமெரிக்க ஒதுக்கீட்டு உபகுழுவின் தலைவரும் இந்த அறிக்கைக்கான அனுமதியை வழங்கியவருமான செனட்டர் பட்ரிக் ஜே.லீகே இலங்கையில் இரு தரப்பும் மிக மோசமான யுத்த மீறல்களில் ஈடுபட்டனரா என்ற சந்தேகம் முழுமையாகத் தீர்ந்துபோயுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

வன்னி யுத்தத்தின் போது தாக்குதல்கள், வன்முறைகள், பட்டினி, மருந்துப் பற்றாக்குறை போன்றவற்றின் பிடியில் சிக்கியிருந்த பொதுமக்களின் நிலையையும் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை ஒவ்வொரு மீறல் சம்பவங்களையும் திகதி வாரியாக விவரித்துள்ளது. அதிலுள்ள சில விடயங்களாவன:

- ஜனவரி முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில் பல தடவைகள் விடுதலைப்புலிகள் இளைஞர்கள் பலரை பிடித்துச் சென்றனர். ஆனால் இக்காலத்தில் கொல்லப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கை சரியாகக் கிடைக்கவில்லை.
- போர்க் காலத்தில் ஏற்பட்ட மரணங்கள், காயங்கள் குறித்த முக்கியமான பல விவரங்கள் பதியப்படவில்லை என்றபோதும், ஆனால் அரச படையின் பெருமளவு ஷெல் தாக்குதல் பாதுகாப்பு வலயத்தின் மீது இடம்பெற்றன. 

- பொதுமக்கள் வெளியேற இரு தடவைகள் 48 மணித்தியால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும், அந்தக் காலம் முடிவடைவதற்குள் அரச படைகள் மீண்டும் ஷெல் தாக்குதலை ஆரம்பித்தனர். அதோடு விடுதலைப் புலிகள் பெருமளவு பொதுமக்களை வெளியேற விடாமல் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைத்தனர்.

- இலங்கைப் படையினர் சட்டவிரோதப் படுகொலைகளை மேற்கொண்டனர்.

- மோதலின் இறுதிக்காலப் பகுதியில் விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் சரணடைவதற்காக சர்வதேச பிரதிநிதிகளை சந்தித்து, இணக்கப்பாடு ஏற்பட்ட போதிலும் கூட, அவர்கள் கொல்லப்பட்டு விட்டனர்.
எனக் கூறப்பட்டுள்ளது.


source:athirvu

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails