Wednesday, October 21, 2009

ஐந்தாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகிவிட்டது?

ஐந்தாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகிவிட்டது? : பாரிஸ் 'ஈழநாடு'  

eelam flag peoplesவட்டுக்கோட்டையில் ஆரம்பித்து முள்ளிவாய்க்காலில் முடிவுற்றதாக சிங்கள அரசால் அறிவிக்கப்பட்ட ஈழத் தமிழர்களது விடுதலைப் போர் புதிய பரிமாணங்களோடு புலம்பெயர் தேசங்களில் பலம் பெற்று வருகின்றது. இது சிங்கள தேசம் முற்றிலும் எதிர்பார்க்காத புதிய களமாக அமைந்துள்ளது.

விடுதலைப் புலிகளது இராணுவக் கட்டமைப்பை அழித்துவிட்டால், ஈழத் தமிழர்களின் விடுதலை வேட்கையை இல்லாமல் ஆக்கி விடலாம் என்பதே ராஜபக்ஷக்களின் கணிப்பாக இருந்தது. பிரபாகரன் அவர்களை மையப்படுத்தியே விடுதலைப் புலிகள் அமைப்பு இயங்கி வந்ததால் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களும் பிளவுகளும் உருவாகும் என்பதே சிங்களத்தின் கனவாக இருந்தது. அதற்கான பல சதிகாரர்களும் தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவ விடப்பட்டனர். பலவிதமான குழப்பங்கள் நிறைந்த செய்திகளும் வெளியிடப்பட்டன.

ஆரம்பத்தில் சிங்கள தேசம் எதிர்பார்த்தபடி புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் குழப்பங்களும், சலசலப்புக்களும் உருவாகினாலும், அது வெகு விரைவாகவே தமிழ்த் தேசிய உணர்வாளர்களால் முறியடிக்கப்பட்டது. சிங்கள தேசத்தின் கொடூரங்கள் முள்ளிவாய்க்காலுடன் முற்றுப் பெற்றிருந்தால், இந்தக் குழப்பங்கள் நீடித்துச் சென்றிருக்கலாம். ஆனால், தொடர்ந்தே செல்லும் சிங்கள இனவாதக் கொடூரங்கள் வன்னி மக்களை வதை முகாமில் இட்டதன் மூலம்; ஒன்றிணைந்து போராடவேண்டிய அவசியத்தை புலம்பெயர் தமிழர்களுக்கு மேலும் மேலும் அவசியமாக்கியது.

தமிழீழ விடுதலையை வேகமாக முன்நகர்த்தும் பணிக்காக புலம்பெயர் தமிழர்கள் 'நாடு கடந்த தமிழீழ அரசு', 'உலகத் தமிழர் பேரவை' என்ற இரு அமைப்புக்களையும் இரு படை அணிகளாக முன்நிறுத்திச் செயற்பட, தமிழ் இளையோர் அமைப்புக்களும் போர்க் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஆக மொத்தத்தில், 'ஐந்தாவது கட்ட ஈழப் போர்' புலம்பெயர் தேசங்களில் மையங்கொண்டுள்ளது என்றே கருதத் தோன்றுகிறது. ஆயுதம் ஏந்திய நான்கு கட்ட ஈழப் போர்களை விடவும் வீரியமாக இந்த ஆயுதம் ஏந்தாத போர் வீறு கொண்டு எழ ஆரம்பித்துள்ளது. கடந்த சனிக்கிழமை புலம்பெயர் தேசங்கள் எங்கும் நடைபெற்ற சிங்கள அரசின் இன வன்முறைக் கொடுமைகளுக்கெதிரான போராட்டங்களில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டது இதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.

தற்போது, நாடுகடந்த தமிழீழ அரசுக்கும் உலகத் தமிழர் பேரவைக்கும் இடையே குழப்பத்தையும், போட்டியையும் உருவாக்கும் கைங்கரியங்களில் சிங்களக் கைக்கூலிகள் முனைந்து செயல்பட்டு வருகின்றனர். புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் இந்த இரு அமைப்புக்களையும் இரு கண்களாக வளர்க்க முன் வந்துள்ள நிலையில், பதவி ஆசை பிடித்த சிலர் இரு அமைப்புக்களுக்கும் இடையே போட்டிகளை உருவாக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னர், தமிழீழத் தேசியத் தலைமையே புலம்பெயர் தேசத் தமிழர்களின் அரசியல் செயற்பாடுகளை நெறிப்படுத்தி வந்தனர். அதற்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள்மேல் புலம்பெயர் தமிழர்கள் வைத்திருந்த நம்பிக்கையும், விடுதலைப் புலிகளின் வீரமும், தியாகமும் புலம்பெயர் தமிழர்களை விடுதலைப் புலிகள் பக்கம் அணி திரள வைத்திருந்தது. ஆனாலும், தீர்க்க தரிசனப் பார்வை கொண்ட தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு முன்னதாகவே அடுத்த கட்ட விடுதலைப் போரை புலம்பெயர் தேசங்களை நோக்கி நகர்த்திவிட்டார்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தைத் தோற்கடிக்க இந்திய – சிறீலங்கா கூட்டுப் போர் நடவடிக்கையில் விடுதலைப் புலிகளுக்கு இரண்டு தெரிவுகள் மட்டுமே இருந்தன. இந்த கூட்டு எதிர் சக்திகளிடம் சரணடைவது அல்லது விடுதலைப் போரைத் தொடர்ந்து நடாத்தி, அந்த அர்ப்பணிப்பு மூலம் அதனைப் புலம்பெயர் தமிழர்களிடம் கையளிப்பது என்ற தெரிவில் தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் தமது இலட்சியத்தைக் கைவிட மறுத்து இறுதிவரை களமாடினார். அதற்கு முன்னதாகவே, கடந்த வருட மாவீரர் தின உரையில் புலம்பெயர் தமிழர்களிடம் விடுதலைப் போராட்டத்தை ஒப்படைத்திருந்த அவரது தீர்க்க தரிசனம் மெய் சிலிர்க்க வைப்பதாக உள்ளது.

இந்த நிலையில், புலம்பெயர் தேசங்களில் மக்களால் உருவாக்கப்பட்ட இந்த இரு போராட்ட அமைப்புக்களும் கத்திமீதான பயணத்திற்கே அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதையில் கொஞ்சம் சறுக்கினாலும் கால்கள் அறுபடும் அபாயம் உள்ளதை அவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள். இவர்களது தமிழீழ விடுதலை நோக்கிய பயணத்தை நெறிப்படுத்தும் பொறுப்பில் புலம் பெயர் தமிழர்களே உள்ளார்கள். இதில் எங்கு பிழை நேர்ந்தாலும், அதற்குக் காரணமானவர் மக்களால் தூக்கி எறியப்படும் சாத்தியம் பலமானதாகவே உள்ளது.

ஏற்கனவே, உலகத் தமிழர் பேரவையினரின் நாடு தழுவிய அமைப்புக்கள் ஜனநாயக உரிமை கொண்ட அமைப்பாளர் தெரிவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இரு வருட கால ஆயுள் கொண்ட இதன் நிறைவேற்று அமைப்பை அந்தந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்களே ஜனநாயக முறைப்படி தெரிவு செய்வார்கள் என்பதை யாப்பு ரீதியாகப் பதிவு செய்துள்ளார்கள். மாறும் தலைமை முறை கொண்ட இந்த அமைப்பு முறை தவறுகளுக்கு இடம் கொடுக்காது திறமைகளுக்கே இடம் கொடுக்கின்றது. பெரும்பாலும், நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பும் இவ்வாறான யாப்பு மூலமான உரிமைகளை மக்களுக்கு வழங்குவதன் மூலம், இந்த இரு அமைப்புக்களும் தமிழீழ விடுதலைப் போரை மக்கள் பலத்துடன் முன் நகர்த்திச் செல்ல முடியும்.

நாங்கள் போகும் பாதை எதுவாக இருப்பினும் இலக்கு என்பது தெளிவானதாக இருக்க வேண்டும். இலக்குத் தவறிய பயணம் ஒட்டு மொத்த தமிழீழ மக்களையும் மீண்டும் புதைகுழிக்கே அழைத்துச் செல்வதாக முடியும். தமிழீழ தேசியத் தலைவரது தமிழீழம் என்ற இலக்கில் சமரசம் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வட்டுக்கோட்டை வரை முள்ளிவாய்க்கால் வரை அத்தனை இழப்புக்களையும் தமிழினம் தாங்கிக்கொண்டது தமிழீழம் என்ற இலட்சியத்திற்காகவே. அதில் சமரசம் செய்யும் எந்த முயற்சியிலும் யாரும் ஈடுபட முடியாது என்பது இறுதியான, உறுதியான முடிவாகும்.

தமிழீழ தேசியத் தலைவர் அவர்களால் புலம்பெயர் தேச தமிழீழ மக்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஐந்தாம் கட்ட ஈழப் போரை வேகமாக முன்னெடுத்து தமிழீழ விடுதலையை வென்றெடுக்கும் பணியையே இந்த அமைப்புக்களின் தலைமைகள் முனைந்து செயற்படுத்த வேண்டும். அல்லது அவர்கள் தமது பொறுப்புக்களிலிருந்து விலகி இலட்சியத்தை முன்னெடுக்கும் தகுதி உள்ளவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும்.

பாரிஸ் 'ஈழநாடு'
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails