Wednesday, October 21, 2009

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அமைதிக்கான நோபல் பரிசு

 

  அல்பேட் நோபல் பெயரில் வழங்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. உலக அமைதிக்காக பாடுபட்டவர்களுக்கே இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது.

 

 

ஆனால், பதவிக்கு வந்து ஒன்பது மாதங்களே ஆகியுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபமா இன்னும் அமைதிக்கான எந்தவொரு செயற்பாட்டையும் செய்து முடிக்காத நிலையில் இந்தப் பரிசை அவருக்கு வழங்குவதற்கு நோபல் குழு முடிவு செய்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்கும், இந்தப் பரிசு தொடர்பான நோபலின் கொள்கைகளையும் கேள்விக்கும் உள்ளாக்கியுள்ளது. ஆனாலும், சர்வதேச அளவில் ராஜீய உறவுகளை பலப்படுத்துவதற்கு மேற்கொண்ட முயற்சி, அணு ஆயுத குறைப்பு நடவடிக்கை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வெற்றியை கண்டதற்காக அதிபர் ஒபாமாவுக்கு அமைதிக்கான விருது வழங்கப்படுவதாக நோபல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், ஒபாமா அதிபராக பதவியேற்ற பிறகு சர்வதேச அரசியலில் சுமுகமான சூழ்நிலையை உருவாக்கினார். ஐ.நா. மற்றும் சர்வதேச அமைப்புகளில் ராஜீய உறவுகளை பலப்படுத்தினார். அணு ஆயுதம் இல்லாத உலகை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் அளித்தார்.

சர்வதேச அளவில் தீர்க்கமுடியாத சில பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகண்டார். உலகம் எதிர்நோக்கி வரும் பருவநிலை மாற்றம் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளித்தார். ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தொடங்கப்பட்ட போரினால் சர்வதேச அளவில் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளிடம் அமெரிக்காவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டது. ஒபாமா பதவியேற்ற பிறகு தனது ஓயாத முயற்சியால் நடவடிக்கை மேற்கொண்டு அந்த களங்கத்தை போக்கி, உலக அளவில் அமெரிக்காவுக்கு மீண்டும் நற்பெயரை பெற்றுத் தந்தார். தான் பதவியேற்றவுடன் மத்திய கிழக்கு நாடுகளின் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சிறப்புத் தூதரை நியமித்து இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன தலைவர்களை சந்திக்க வைத்து அந்த பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த முயற்சித்தார்.

அதேபோல் ஈரான் அணு ஆயுத பிரச்னைக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தைக்கு அந்த நாட்டை உடன்பட வைத்தார். மியான்மர் மீதான நீண்டகால பொருளாதார தடையை விலக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டார். ஒபாமாவின் ஐரோப்பிய நாடுகளுக்கான புதிய ஏவுகணை பாதுகாப்பு கொள்கைக்கு ரஷ்யா அமோக ஆதரவு அளித்ததன் மூலம் உலகின் இரு வல்லரசுகளிடையே நிலவி வந்த பனிப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தார் என்று நோபல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அமெரிக்க அதிபர்களாக பதவியில் இருந்த தியோடர் ரூஸ்வெல்ட் (1906), உட்ரோ வில்சன் (1919) ஆகிய இருவரும் நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அதிபர்களாவர்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர், தனது பதவி காலத்துக்கு பிறகு நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டார். அமைதிக்கான நோபல் பரிசுக்காக ஜிம்பாப்வே பிரதமர் மோர்கன் ஸ்வன்கிரை, ஆப்பிரிக்க மகளிர் உரிமை ஆர்வலர் ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் இருந்தன. வரும் டிசம்பர் 10ம் திகதி ஸ்டாக்ஹோமில் நடைபெறும் விழாவில் இவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது. நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டவர்கள் பட்டியலில் 205 பேர் இடம் பெற்றிருந்தனர். இந்த விருதுக்கான பரிந்துரைக்கு கடைசி நாளான பெப்ரவரி 1ம் திகதிக்கு 2 வாரத்திற்கு முன்பாகத்தான் ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி ஏற்றார்.இந்த நிலையில் அவருக்கு நோபல் பரிசு கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அமைதிக்கான விருதை தவிர மற்ற நோபல் பரிசுகள் அனைத்தும், ஹராயல் சுவீடன் அகாடமி` என்ற அமைப்பு சார்பில் வழங்கப்படுகிறது.

ஆனால், அமைதிக்கான நோபல் பரிசு மட்டும், விஞ்ஞானி நோபல் எழுதிய உயிலின்படி நோர்வே நாட்டு நாடாளுமன்றம் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் 5 பேர் கொண்ட குழுவினரால் வழங்கப்படுகிறது. நோபல் இறந்தபோது நோர்வே, சுவீடன் ஆகிய இரு நாடுகளும் ஒரே மன்னரின் ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தன. வழக்கமாக அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக (நள்ளிரவில்), விருது பெறப்போகிறவர்களுக்கு தேர்வுக்குழுவினர் தொலைபேசி மூலம் தகவல் தெரிவிப்பார்கள். ஆனால், இந்த முறை ஒபாமாவுக்கு அதேபோல் நள்ளிரவில் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று, தேர்வுக்குழு தலைவர் ஜெக்லாண்ட் தெரிவித்தார்.கடந்த காலங்களில், இதுபோன்ற தகவல் தெரிவிப்பதன் மூலம் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, பரிசு பெற்றவர் மூலம் மற்றவர்களுக்கு இந்த தகவல் வெளியாகி இருப்பதாகவும் அதேபோல் இப்போதும் நடந்துவிடக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

நோபல் பரிசு வழங்கப்படுவது குறித்த அறிவிப்பு, கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் வெளியானது. உடனே அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பத்திரிகை தொடர்பாளர் ரொபர்ட் கிப்ஸ், தூங்கிக்கொண்டு இருந்த ஒபாமாவை எழுப்பி மகிழ்ச்சியான இந்த தகவலை அவரிடம் தெரிவித்தார். அதன் பின்னர் ஊடகவியலாளர்களிடம் ஒபாமாவின் செய்தித் தொடர்பாளர் ரொபர்ட் கிப்ஸ் கூறுகையில், மிக உயரிய நோபல் பரிசுக்கு தன்னை தேர்ந்தெடுத்துள்ளதை பணிவுடன் ஏற்றுக் கொள்வதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார். அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் ஒபாமா உற்சாகமடைந்துள்ளார். அத்துடன், பரிசுத் தொகை முழுவதையும் அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக கொடுக்க அவர் முடிவு செய்துள்ளதாக கிப்ஸ் தெரிவித்தார்.

நன்றி:ஈழமுரசு


--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails