Thursday, October 1, 2009

தேசப்பிதா நினைவுகள்!

  (கட்டுரை)
 

காந்திஜியின் தனிச் செயலராக பணிபுரிந்த 88 வயது வை. கல்யாணத்துடன் ஒரு பேட்டி... டில்லியில், காந்திஜி தலைமையில், ஜன., 3, 1948ல் பிர்லா மாளிகை தோட்டத்தில், பிரார்த்தனை நடந்து கொண்டிருந்த மாலை நேரம், திடீரென்று குண்டு வெடித்தது. மதன்லால் பாவா என்பவன் குண்டை வீசிவிட்டு ஓடிவிட்டான். நல்லவேளை, காம்பவுண்ட் சுவர் மட்டும் சேதமடைந்தது.
"காந்திஜியைக் கொலை செய்ய முயற்சியா?' என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்றது. "காந்திஜியைப் பார்க்க வருபவர்களின் பையை சோதனையிட வேண்டும். அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால், போலீஸ் துறை மீது களங்கம் வந்துவிடும்!' என்று அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேலிடம் போலீஸ் முறையிட, அவர், காந்திஜியைச் சந்திக்க ஒரு டி.ஐ.ஜி.,யை அனுப்பி வைத்தார். 
காந்திஜியோ, "நீங்கள் பல ஆயிரம் போலீசைக் காவலுக்கு போட்டு சோதனைகள் நடத்தினாலும் என் உயிரைக் காப்பாற்ற முடியாது; காரணம், என் உயிர் இருப்பது கடவுளின் கையில். நடக்கிறபடிதான் நடக்கும்!' என்று டி.ஐ.ஜி.,யிடம், கூறி, பார்க்க வருபவர்களின் பைகளை சோதனை போடக்கூடாது என்று மறுத்து விட்டார்.



 ஜனவரி 30, 1948 அன்று மாலை ஐந்தேகால் மணிக்கு பிரார்த்தனைக் கூட்டத்தில் காந்தி சுடப்பட்டு சாய்ந்தார். சில வினாடிகளில் அவர் உயிர் பிரிந்தது. உலகமே அதிர்ந்து, கண்ணீர் விட்டது.
காந்திஜி சுடப்பட்ட போது நான் அருகில் தான் இருந்தேன். சர்தார் வல்லபாய் பட்டேல் அப்போது தான் காந்திஜியிடம் பேசிவிட்டுச் சென்றிருந்தார். நான் பரபரப்பாக இரண்டு தெரு தள்ளியிருந்த அவரது வீட்டுக்கு ஓடியபோது, பாத்ரூமில் குளித்துக் கொண்டிருந்தார்.அவர் மகளிடம் விஷயத்தைத் தெரிவித்து விட்டு மறுபடியும் ஓடி வந்தேன். 
ஒரே பரபரப்பு... பதைபதைப்பு... என்னிடமோ, காந்திஜியைத் தாங்கிப் பிடித்து வந்த ஆபா, மனுபென் காந்தியிடமோ போலீஸ் எதுவுமே விசாரிக்கவில்லை.
காந்திஜியிடம் தனிச் செயலராக பணியாற்ற எப்படி வாய்ப்பு கிடைத்தது?
அது தற்செயலாக நடந்தது. நான் சிம்லாவில் பிறந்து வளர்ந்தாலும், என் சொந்த ஊர் தஞ்சை வட்டம். அக்ரஹாரம். அப்பா வெங்கட்ராம ஐயர் சிம்லாவில் வெள்ளைக்காரர் ஆபீசில் மேலாளராக இருந்தார். சிம்லாவில் இருந்த மதராசி ஸ்கூலில் தான் ஆரம்ப கல்வி பயின்றேன். பிறகு, பி.காம்., டில்லிக்கு வந்து பிரிட்டிஷ் கம்பெனி ஒன்றில் பணி செய்து கொண்டிருந்தேன்.



எனக்கு எப்போதுமே ஆபீஸ் சேவகம் பிடிக்காது; உடல் உழைப்பு அதிகம் உள்ள வேலைகளையே விரும்புவேன். அப்போது டில்லியில், "மெட்ராஸ் கிளப்' என்று ஒன்று இருந்தது. அந்தக் காலத்தில் டில்லியில் பிரிட்டிஷாரிடம் முக்கால் பங்கு பேர் தமிழர்கள் தான் வேலை பார்த்தனர். அவர்கள் சேர்ந்து துவங்கியது தான் மெட்ராஸ் கிளப். 
அங்கு நான் சென்ற போது தேவதாஸ் காந்திக்கு தெரிந்தவர், என்னைப் பற்றி அவரிடம் சொல்லியிருக்கிறார். காந்தியின் மீது விசுவாசம் கொண்ட என் கம்பெனி முதலாளியிடம் அனுமதி பெற்று, லீவில் ஆசிரமத்திற்கு சென்றேன். 
காந்திஜியை எப்போது முதன் முதலாகச் சந்தித்தீர்கள்?
ஆகாகான் மாளிகையில் ஹவுஸ் அரெஸ்ட் ஆகியிருந்த காந்திஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதும், அவர் அலோபதி மருத்துவத்தை ஏற்க மறுத்ததும், ஆங்கிலேயருக்கு பிரச்னை ஏற்பட்டது. காந்திஜிக்கு ஏதாவது ஆகிவிட்டால். பிரச்னை ஆகிவிடும் என்று பயந்து, அவரை நிபந்தனையின்றி விடுதலை செய்துவிட்டனர். அவர் பம்பாயில், சாந்திகுமார் மொரார்ஜி என்பவர் வீட்டில் தங்கி, இயற்கை சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் போது தான் நான் அவரைச் சந்தித்தேன். 
நான் வாங்கிக் கொண்டிருக்கும் சம்பளம் என்ன என்று கேட்டார். 250 ரூபாய் என்றேன். அது, இப்போது, பல ஆயிரங்களுக்கு சமம். "அடடா... எனக்கு இவ்வளவு தர முடியாது; அறுபது ரூபாய் தான் தரமுடியும்...' என்றதும், "அதுகூட வேண்டாம். எனக்குத்தான் உண்ண உணவும்... இருக்க இடமும் கிடைக்கிறதே...' என்றதும் வியந்தார். 



காந்திஜியுடன் பணியாற்றிய வருடங்களில் தங்களின் மனநிலை எப்படி இருந்தது?
மிகப் பெருமையாக உணர்ந்தேன். தேசியத் தலைவர்களையும், மவுண்ட்பேட்டன் போன்ற உலகத் தலைவர்களையும் சாதாரணமாக சந்திக்கும் வாய்ப்பு மட்டுமல்ல, அவர்கள் முதலில் என்னிடம் தான் பேசி அப்பாயின்ட்மென்ட் வாங்குவர். நேரு, பட்டேல் போன்ற மிகச்சிலர் தான் காந்திஜி யிடம்அப்பாயின்ட் மென்ட் இல்லாமல் பேச முடியும். 
காந்திஜியை சந்திக்க வந்த சாதாரண மனிதர் ஒருவர் பிற்காலத்தில் மிகப்பெரும் தமிழகத் தலைவராகவும், தேசியத் தலைவராகவும் மாறினார்; அவர் தான் காமராஜர். இதைப் போல ஜனாதிபதியாக பதவி வகித்த, ஜாகிர் உசேன், நீலம் சஞ்சிவரெட்டி, சங்கர் தயாள் சர்மா போன்றவர்கள் கூட அப்போது சாதாரணத் தொண்டர்களாக காந்திஜியின் தரிசனத்திற்காக காத்திருந்தனர். அத்தனை பேரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
தற்கால இளைஞர்களுக்கு தாங்கள் சொல்ல விரும்புவது?
காந்திஜி, நிறைய தியாகங்கள் புரிந்துள்ளார். அவர் செய்த தியாகங்கள் இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை. இளைஞர்கள், அவர் சரித்திரத்தை பலமுறை படிக்க வேண்டும். அவர்களின் மூலம் அவரது கனவுகள் நிறைவேற வேண்டும். 
தொகுப்பு :கே.ஜி.ஜவஹர்

source:dinamalar
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails