Wednesday, October 7, 2009

இலங்கை கடற்படை சிப்பாய்களுக்கு இந்திய வீரர்கள் பயிற்சி: கொச்சியில் இருந்து 3 கப்பல்களில் கொழும்பு சென்றனர்


 
கொழும்பு,அக்.7-

இலங்கை கடற்படை சிப்பாய்களுக்கு 5 நாட்கள் பயிற்சி அளிப்பதற்காக இந்திய கடற்படை வீரர்கள் 3 கப்பல்களில் கொழும்பு சென்றுள்ளனர்.

5 நாட்கள் பயிற்சி

விடுதலைப்புலிகளுடனான போரில் இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு பல்வேறு உதவிகளை அளித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, இலங்கை கடற்படைக்கு அதிநவீன கண்காணிப்பு கப்பலை கொடுத்தது.

இலங்கையில் போர் முடிவடைந்த பிறகு முதல்முறையாக, இலங்கை கடற்படை வீரர்களுக்கு இந்திய கடற்படை பயிற்சி அளிக்க முன்வந்துள்ளது. இப்பயிற்சி, கொழும்பு நகரில் நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) தொடங்கியது. 10-ந் தேதிவரை நடைபெறுகிறது.

3 கப்பல்களில் பயணம்

இந்தப் பயிற்சியை அளிப்பதற்காக, கேரள மாநிலம் கொச்சியில் இருந்து 140 கடற்படை மற்றும் கடலோர காவல்படை வீரர்கள் கொழும்பு சென்றுள்ளனர். அவர்கள் ஐ.என்.எஸ். ஷர்துல், ஐ.என்.எஸ். கிருஷ்ணா ஆகிய 2 கடற்படை போர்க் கப்பல்களிலும், வருணா என்ற கடலோர காவல்படை கப்பலிலும் கொழும்பு சென்றுள்ளனர். இக்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

2 கடற்படை கப்பல்களும் இங்கிலாந்து கடற்படையில் பணியாற்றியவை. அவை தற்போது இந்திய கடற்படை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கப்பல்களில் ஹெலிகாப்டரையும் ஏற்றிச் செல்ல முடியும்.

கால்பந்து போட்டி

இந்தப் பயிற்சி குறித்து இலங்கை கடற்படை செய்தித்தொடர்பாளர் டி.கே.பி.தசநாயகே கூறியதாவது:-

விடுதலைப்புலிகளுடன் போர் நடைபெற்று வந்ததால், இதற்கு முன்பு இத்தகைய பயிற்சி நடைபெறவில்லை. பயிற்சியில், இலங்கை கடற்படையைச் சேர்ந்த சயுரா, சமுத்ரா ஆகிய கப்பல்களும் கலந்து கொள்கின்றன. இக்கப்பல்கள், 2000-ம் ஆண்டு விலைக்கு வாங்கப்பட்டவை. பயிற்சி அளிப்பதுடன், இலங்கையில் பல்வேறு இடங்களை இந்திய கடற்படையினர் சுற்றிப் பார்க்கிறார்கள். திரிகோணமலையில் உள்ள ராணுவ மற்றும் கடற்படை அகாடமிக்கும் அவர்கள் செல்கிறார்கள்.

மேலும், இரு நாட்டு கடற்படை வீரர்களுக்கும் இடையே கால்பந்து போட்டிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
source:dailythanthi 7/10/2009
 

--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails