Friday, May 1, 2009

தமிழீழ ஆதரவாளர்கள் சிலரால் சிறிலங்கா இராணுவ இணையத்தளம் முடக்கம்

இராணுவ இணையத்தளம் முடக்கம்: பிற்பகல் பயன்பாட்டிற்கு வந்தபோதிலும், சற்று நேரத்தில் மீண்டும் செயலிழந்தது
சிறிலங்கா இராணுவத்தினரின் உத்தியோக பூர்வ இணையத்தளம் இன்று காலை முதல் முடக்கப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளத்தினை திறக்கும் போது, அரசாங்கம் செய்து வந்த இனப்படுகொலைகள் குறித்து விபரிக்கும் புகைப்படங்கள் மாத்திரமே காட்டப்படுகின்றன.

தமிழீழ ஆதரவாளர்கள் சிலரால் இந்த இணையத்தளம் முடக்கப்பட்டு, அரசாங்கம் மேற்கொண்டுள்ள இனப்படுகொலை சம்பவங்களை அதில் பிரசுரித்துள்ளனர்.

அரசாங்கத்தினால் கடந்த 15 மணித்தியாலங்களில் 5600 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணைத்தளம் இன்று முடக்கப்பட்டுள்ளமை, தமிழீழ விடுதலைப் புலிகள் இணையத்தள பயங்கரவாதத்தை மேற்கொண்டுள்ளமையை எடுத்துக் காட்டுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அது இராணுவத்தினரின் மனிதாபிமான நடவடிக்கைகளை வெளியுலகுக்கு மறைக்கும் பொருட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கை என அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரில் விடுதலைப்புலிகளின் பின்னடைவு தகவல்களை இராணுவ இணையதளம் உரிய முறையில் உண்மையாக வெளியிட்டு வந்துள்ளது. இந்நிலையில், விடுதலைப் புலிகளின் மென்பொருள் நிபுணர்கள் இராணுவ இணையதளத்தை திட்டமிட்டு சேதப்படுத்தியுள்ளனர்.

எனவே, புலிகளுக்காக பிரசாரத்தில் ஈடுபடுவோர் இனியேனும் அவர்களைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்த இணையத்தளம் சீர்செய்யப்பட்டு இன்று பிற்பகல் முதல் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. எனினும், சற்று நேரத்தில் மீண்டும் அந்த இணையத்தளம் செயலிழந்தது.

இலங்கை இராணுவத்தின் இந்த புகார் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் முடக்கப்பட்டுள்ள இராணுவ இணையத்தளம் மீண்டும் விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails