Wednesday, October 7, 2009

இ-மெயில் மோசடி:அதிரடி ஜாங்கிட்... அமுக்கப்பட்ட ஓலபாஜி!





-மெயில் மூலமாக ஏகபோக ஆசை காட்டி, அப்பாவிகளை ஏமாற்றும் மோசடி கும்பல்களைப் பற்றி கடந்த 17.09.09 தேதியிட்ட ஜூ.வி-யில் 'நைஜீரியா மாப்பு... ஜாங்கிட் வைத்த ஆப்பு!' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அதில், நைஜீரிய டுபாக்கூர் பார்ட்டியான ஓசாமா தியோன் என்பவனின் தில்லாலங்கடி வேலை குறித்தும், சென்னை புறநகர் கமிஷனரான ஜாங்கிட் அவனை வளைத்துப் பிடித்த நடவடிக்கை குறித்தும் விரிவாகச் சொல்லி இருந்தோம். இந்நிலையில், 'எங்களுக்கும் ஆன்-லைன் லாட்டரியில் பரிசு விழுந்திருப்பதாகச் சொல்லி மெயில்கள் வந்திருக்கின்றன. அதை நம்பி பணத்தைக் கட்டுவோமா, வேணாமான்னு நாங்க யோசிச்சுகிட்டு இருந்த நேரத்திலதான் ஜூ.வி-யில் நைஜீரியா டுபாக்கூர் ஆசாமியைப் பற்றிய கட்டுரை வெளியிட்டிருந்தீங்க. இல்லை என்றால் நாங்களும் அந்த டுபாக்கூர் மெயில் களை நம்பி ஏமாந்திருப்போம்' என நம்மைத் தொடர்புகொண்டு பலரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள்.

இதற்கிடையில், நம் ஜூ.வி செய்தியைப் படித்துவிட்டு கமிஷனர் ஜாங்கிட்டிடம் அலறி அடித்துக்கொண்டு ஓடிய மாங்காடு பகுதியைச் சேர்ந்த சாத்தையா என்ற இன்ஜினீயர், ''உலக 'நோக்கியா' லாட்டரியில் எனக்கு பரிசு விழுந்திருக்கிறதா சொல்லி என்னோட செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது சார். அதை நம்பி சம்பந்தப்பட்ட இ-மெயில் முகவரியை கான்டக்ட் பண்ணினேன். எனக்கு அஞ்சு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்கிறதா தகவல் சொல்லப்பட்டது. தலைகால் புரியாத சந்தோஷத்தில அவங்க கேட்டிருந்த ஐம்பதாயிரம் பணத்தை கட்டினேன். அதுக்கப்புறம் பரிசுப் பணத்தைக் கொண்டுவர்றதுக்காக, சுங்க வரி, அந்நிய செலாவணி கட்டணும்னு சொல்லி பணம் கேட்டாங்க. ஒன்பது தவணையில 13 லட்ச ரூபாயை அவங்ககிட்ட இழந்திட்டேன். இப்போ ஜூ.வி படிச்சதுக்கு அப்புறம்தான் ஏமாந்து போயிட்டேங்கிறதே தெரியுது. எப்படியாச்சும் என்னோட பணத்தை மீட்டுக் கொடுத்திடுங்க சார்...'' எனக் கதறி இருக்கிறார்.

உடனே ஆக்ஷனில் குதித்த கமிஷனர் ஜாங்கிட், மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை அமைத்தார். ஏமாற்றப்பட்ட சாத்தையாவைப் போலவே நடித்த போலீஸார் பணம் கொடுப்பதாக ஆசை காட்ட, அடுத்தகணமே சேலையூர் அருகே அவன் தங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது. அதிரடியாய் அங்கே சென்ற போலீஸ் படை அங்கிருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஓலபாஜி என்பவனை வளைத்துப் பிடித்திருக்கிறது. அவனிடம் நடத்திய விசாரணையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இந்த கும்பல்கள் கைவரிசையைக் காட்டியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

இதுகுறித்து ஜாங்கிட்டிடம் பேசினோம். ''லாட்டரி வாங்கா மலே பரிசு விழுவதாக அறிவிப்பு வந்தால் பொதுமக்கள் கொஞ்சமாவது யோசிக்கவேண்டும். கோடிக்கணக்கில் பரிசு விழுந்திருப்பதாகச் சொன்னவுடன், படித்தவர்களே இந்தக் கும்பல்களிடம் ஏமாந்து விடுகிறார்கள். இத்தகைய லாட்டரி மோசடிகளுக்கு ஆளாகி ஒன்றிரண்டு பேர் தற்கொலை செய்து விட்டார்கள். இனி லாட்டரியில் பரிசு விழுந்திருப்பதாக எஸ்.எம்.எஸ்., இ-மெயில், போன் என எது வந்தாலும், அதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக போலீஸில் புகார் செய்யவேண்டும். தங்களுக்குள் ஏரியாக்களைப் பிரித்துக்கொண்டு மோசடிகளை அரங்கேற்றும் இத்தகைய கும்பல்களை, மக்களின் ஒத்துழைப்பு கிடைத்தால் ஒருசில நாட்களிலேயே ஒழித்துக் கட்டிவிடலாம்.'' என அக்கறையோடு சொன்னார் ஜாங்கிட்.

- இரா.சரவணன்   
 
--
www.thamilislam.co.cc

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails