இக்கூட்டத் தொடருக்காக ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஒஸ்லோ வருகை தந்திருந்த வேளையில் தமிழ் மக்களுக்காக சிறப்பு விளக்கக் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தமிழர் வள ஆலோசனை மைய றொம்மன் வளாகத்தில் நேற்று முன்நாள் சனிக்கிழமை மாலை 6:30 நிமிடம் தொடக்கம் 9:00 மணிவரை நடைபெற்ற நாடு கடந்த அரசு தொடர்பான விளக்கக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழீழ மக்கள் கலந்து கொண்டிருந்தனர். ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா நடராஜா இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.
சட்ட அறிஞரும் நாடு கடந்த தமிழீழ அரசை அமைக்கும் செயற்குழு இணைப்பாளருமான வி.உருத்திரகுமாரன் காணொலி இணைப்பு (Video Conference) மூலம் உரையாற்றியதோடு, மக்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். இன்றைய காலச் சூழலில் தமிழீழ மக்களின் அரசியல் வேட்கையினை உயிர்ப்புடன் பேணி, தமிழர்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய அடிப்படை உரிமைக் கோட்பாடுகளுக்கு ஊடாக தமிழீழ மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்கான போராட்ட இலக்கின் இன்றைய வரலாற்றுத் தேவையாக நாடு கடந்த தமிழீழ அரசு அமையவுள்ளதாக உருத்திரகுமாரன் குறிப்பிட்டார். கொடுங்கோன்மை அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் இனங்களின் தன்னாட்சி உரிமை (Self-determination) பற்றிய அனைத்துலக சட்டங்களை மேற்கோள் காட்டிய உருத்திரகுமாரன் அவர்கள், அனைத்துலக அரங்கில் தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமை சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள வைக்கப்படும் புறநிலையில் சுதந்திரமும் இறைமையும் (independent and sovereign state of Tamileelam) கொண்ட தமிழீழத் தனியரசை அமைக்கும் தமிழீழ மக்களின் உரிமையை ஏற்றுக்கொள்ள அனைத்துலகம் தலைப்படும் என்றும் சுட்டிக்காட்டினார். ஒவ்வொரு புலம்பெயர் நாடுகளிலும் நேரடியான தேர்தல் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதே இந்த அமைப்பிற்கு வலுச் சேர்க்கும். நேரடியான தேர்தல்களே அந்தந்த நாடுகளில் உள்ள மக்கள், நாடு கடந்த தமிழீழ அரசின் மீது உரித்துணர்வு (Ownership) கொள்வதற்கு வழிவகுக்கும் என்றும் உருத்திரகுமாரன் மேலும் தனது உரையில் தெரிவித்தார். இன்றைய உலக ஒழுங்கினை ஆழமானதும் கூர்மையானதுமான அரசியல் சிந்தனைக்கு உட்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான உலகளாவிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கி செயற்படுத்த வேண்டும் என அவுஸ்ரேலியாவில் இருந்து காணொலி இணைப்பு மூலம் உரையாற்றிய மருத்துவக் கலாநிதி சிவநேந்திரன் சீவநாயகம் தெரிவித்தார். நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கத்திற்கான ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த சட்டவாளர் கரண் பார்க்கர் மற்றும் சுவீடனைச் சேர்ந்த சமய வரலாற்றுத் துறை பேராசிரியர் பீற்றர் சால்க் ஆகியோரும் கருத்துரை வழங்கினர். நாடு கடந்த அரசானது பரந்துபட்ட மக்களின் பங்களிப்பை வேண்டி நிற்பதாக இக்கூட்டத்தில் வேண்டிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். source:puthinam |
No comments:
Post a Comment