தர்மராஜ்
பழுத்த பழம்; சட்டை போடாத சந்தன வண்ண மேனி; வெண் தாடி; அவர்-தமிழ் இலக்கிய ஆய்வாளர்-பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம்.
விழிகள் உண்டு-பார்வை இல்லை. அது பற்றிச் சற்றும் கவலை கொள்ளாமல் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து வருகிறார். நடுப்பகல் வெயிலிலும் உறங்குவதில்லை. வயதை மீறிய உற்சாகத்தோடு தூக்கத்தை விடத் தமிழ் இலக்கிய ஆய்வுகள் செய்வதில்தான் அதிகமான விழிப்புணர்வு.
''தமிழ் இலக்கியங்களில் உள்ள சிறப்புகள் தெரியாமல் எத்தனையோ பேர் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்! அவர்களைத் தட்டி எழுப்பவே நான் உறங்காமல் இருக்கிறேன்!'' என்கிறார் அந்தத் தமிழ்ப் பெரியார்.
தமிழைப் பற்றியும், நாயன்மார்களைப் பற்றியும் மற்றும் பல தமிழ் இலக்கிய வரலாறுகள் பற்றியும் அவர் பேசும்போது கை வெண் தாடியை மெல்ல நீவிக் கொண்டே இருக்கிறது! கண் பார்வையை பல ஆண்டுகளுக்கு முன்பே இழந்து விட்டாலும் அதை ஒரு பெரிய குறையாகக் கருதாமல் உற்சாகமாகவே பேசுகிறார். கேட்கக் கேட்கச் செவி பெற்ற பேறு என்ற பெருமிதம் எழுகிறது.
''என் கண் பார்வை பல ஆண்டுகளுக்கு முன்பே போய் விட்டது. பார்க்காத மருத்துவம் மீதமில்லை. அமெரிக்கா வரை சென்று பாடுபட்ட மருத்துவ முயற்சிகள் பயனற்றுப் போய்விட்டன'' என்று இந்தத் தமிழ்ப் பெரியார் பார்வையிழந்த வரலாற்றை சற்றுக்கூட சஞ்சலமில்லாமல் தடுமாறாத குரலில் கூறுகிறார்.
யாராவது வந்தால் நடையோசையைக் கொண்டே ''யார்?'' என்று வினவுகிறார். குரலைக் கொண்டு, வந்தவரை அடையாளம் கண்டுகொள்கிறார். அதன் தொடர்பில் பேச்சுகளும், பேட்டிகளும், வினாக்களும், விடைகளும் நடைபெறுகின்றன. பொருள் செறிந்த சுவையான விளக்கங்கள் கிடைக்கின்றன.
தினசரி செய்திகளை வானொலி வாயிலாக இவர் கேட்டு அறிந்து கொள்கிறார். ''வானொலிதான் எனக்கு ஒரு காலத்தில் வாழ்வு அளித்த ஒலிக்கூடம். என் இதய ஒலி ஒலித்த இடம். அதில் அன்றாடச் செய்திகளை அறிந்து கொள்கிறேன்'' என்கிறார்.
''இப்பொழுது என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்று இவரைக் கேட்டதற்கு,
''திருவாசகம் பற்றி நீண்ட ஆராய்ச்சி நூல் எழுதிக் கொண்டிருக்கிறேன். நான் சொல்ல ஒருவர் எழுதி வருகிறார். ஆராய்ச்சி என்றால் வழக்கமான சில நூல்களில் காணப்பெறும் முன்னுரை, விரிவுரை, முகவுரை என்பது போன்றவை இதில் இடம்பெறவில்லை. 'சிந்தனைகள்' என்ற தலைப்பில் இந்த ஆராய்ச்சி நூல் எழுதப்பெற்று வருகிறது. இதற்குமுன் மற்றவர்கள் எழுதியிருக்கும் திருவாசக ஆராய்ச்சி நூல்களைப் போல இது அமைந்திராது. படிப்பவர்களுக்குப் புதிய சிந்தனைகளை உண்டாக்கக்கூடிய ஆய்வு நூலாக இருக்கும்''
இவர் இப்போது ஆய்வு அரங்கங்கள், தமிழ்த் தொடர்புள்ள கூட்டங்கள் ஆகியவற்றில் கலந்து கொள்வதில்லை. உதவியாளருடன் சென்று பேசிவிட்டு வருவது தொல்லையாக இருப்பது மட்டுமின்றி வயதாகிவிட்டதும் மற்றொரு காரணம்.
ஆனால் ஆண்டுதோறும் சேக்கிழார் விழாவை மட்டும் இவர் சிறப்பாக நடத்தி வருகிறார். ''சேக்கிழாரிடம் எனக்கு ஏற்பட்டுள்ள ஈடுபாடு சிறுவயதிலிருந்தே ஊறிப்போன ஓர் உற்சாக உணர்வு. என் தந்தையின் காலத்திலிருந்தே அவரிடம் நான் சேக்கிழாரைப்பற்றிக் கேட்டறிந்த வரலாறுகள் என்னைப் பெரியளவில் ஈடுபாடு கொள்ளக் காரணமாக அமைந்திருக்கின்றன. எனவே என் வயதான தளர்வையும் பொருட்படுத்தாமல் சேக்கிழார் விழாவை நடத்தி வருகிறேன்'' என்று கூறும் அ.ச.ஞானசம்பந்தம் மேலும் குறிப்பிட்டார்.
''கண் பார்வை இல்லையே என்ற குறை என்னிடம் கறையாகப் படிந்து விடவில்லை. மற்ற சக்திகள் என்னிடம் மிகுந்து இருப்பதால் தமிழ் இலக்கிய ஆராய்ச்சிகள் எவ்வித இடையூறுமின்றி நடைபெற்று வருகின்றன. என்னைச் சுற்றி உதவும் உள்ளம் படைத்தவர்கள், உறவினர்கள் இருக்கிறார்கள். பார்வை போனால் என்ன, பாசம் மிகுந்தவர்கள் உதவி வருகிறார்களே?'' என்கிறார். பெரிய புராணத்துக்குப் பெருமை சேர்த்த இந்தப் பெரியவர்.
No comments:
Post a Comment