`சிமி' இயக்கத்துடன் தொடர்பு
பெங்களூரைச் சேர்ந்த 2 டாக்டர்கள் கைது
குஜராத் போலீசார் நடவடிக்கை
பெங்களூர், ஆக.19-
சிமி இயக்கத்துடன் தொடர்பு உடைய பெங்களூரைச் சேர்ந்த 2 டாக்டர்களை குஜராத் போலீசார் கைது செய்தனர்.
குஜராத்தில் ஆமதாபாத் நகரில் கடந்த மாதம் 26-ந்தேதி தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. 55 பேரை பலி வாங்கிய இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் சிமி தீவிரவாதிகள் இருப்பது தெரிய வந்தது.
குஜராத் போலீஸ் விசாரணை
ஆமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி, 9 சிமி தீவிரவாதிகளை கைது செய்தனர். இவர்கள் மத்தியப் பிரதேச மாநிலத்தில் இருந்து வெடிபொருட்களை கொண்டு வந்து குண்டு வெடிப்பை நிகழ்த்தியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அம்மாநிலத்தில் மேலும் சில சிமி தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதனால் இதுபற்றி விசாரிப்பதற்காக 2 பேர் கொண்ட குஜராத் போலீஸ் குழு ஒன்று மத்தியப்பிரதேசம் சென்று உள்ளது. சிமி இயக்கம் மற்றும் அதன் நடவடிக்கைகள் பற்றி அறிந்து கொள்வதற்காக இக்குழுவினர் முதலில் உஜ்ஜைனி சென்றனர். இவர்கள் சிமி இயக்கம் வலுவாக காணப்பட்ட மால்வா, நிமத் பகுதிகளுக்கும் செல்ல உள்ளனர்.
வீடு கொடுத்த 3 பேர் கைது
மேலும் ரேவா சிறையில் உள்ள சிமி இயக்கத்தின் மத்தியப்பிரதேச பிரிவின் தலைவன் நகோரியிடம் ஆமதாபாத் குண்டுவெடிப்பு பற்றி விசாரிக்க குஜராத் போலீசார் தீர்மானித்து உள்ளனர். இதற்காக அவனை கைது செய்து தங்கள் காவலில் எடுக்க நடவடிக்கை தொடங்கி உள்ளனர்.
ஆமதாபாத் குண்டுவெடிப்பில் கைதான 9 தீவிரவாதிகளில் சஜித் மன்சூரும் ஒருவன். இவனுக்கு பரூச்சில் வாடகைக்கு வீடு ஏற்பாடு செய்து தந்த 3 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். மன்சூரின் நடவடிக்கை பற்றி அவர்களிடம் விசாரணை நடக்கிறது.
பெங்களூர் டாக்டர்கள்
இந்தநிலையில் சிமி இயக்கத்துடன் தொடர்புடைய மற்றவர்களை பிடிப்பதற்காக குஜராத் போலீசார் பெங்களூர் வந்தனர். கடந்த 3 நாட்களாக ரகசிய விசாரணை நடத்திய அவர்கள், பெங்களூரில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பயிற்சி பல் டாக்டராக பணியாற்றி வந்த ஒரு டாக்டரையும், சொந்தமாக கிளினிக் நடத்தி வந்த வேறொரு டாக்டரையும் நேற்று கைது செய்தனர்.
அவர்களின் பெயர் விவரம் பற்றி உடனடியாக தெரியவில்லை. அதே சமயம் 2 பேரும் சிமி இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
மேலும் தீவிரவாதி கைது
இதற்கிடையே குஜராத் போலீசார் அளித்த தகவலின்பேரில், சிமி இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரை மத்தியப்பிரதேச போலீசார் நேற்றுமுன்தினம் இரவில் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடக்கிறது.
இந்தநிலையில் ஆமதாபாத் குண்டுவெடிப்பில் கைதான 9 தீவிரவாதிகளில், ஒரு தீவிரவாதி பற்றிய விவரங்களை சேகரிப்பதற்காக பெங்களூர் போலீசார் குஜராத் விரைந்து உள்ளனர்.
கர்நாடக உள்துறை மந்திரி வி.எஸ்.ஆச்சார்யா இந்த தகவலை தெரிவித்தார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=432904&disdate=8/19/2008
No comments:
Post a Comment