Monday, August 25, 2008

'சிமி' மீதான தடை 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

'சிமி' மீதான தடை 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
'சிமி' இயக்கம் மீதான தடையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீவிரவாத அமைப்பு என்று குற்றம்சாட்டப்பட்ட 'சிமி' தீவரவாத இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அண்மையில் தடை விதித்தது.

தடையை நீட்டிப்பதற்கான போதுமான ஆதாரங்களை அரசு அளிக்க தவறி விட்டதாக உயர்நீதிமன்றம் கூறியிருந்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தடையுத்தரவையடுத்து,தடை நீட்டிப்பு அவசியத்திற்கான உரிய ஆதாரங்களை அளிக்க தவறிய மத்திய அரசை பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் கடுமையாக விமர்சித்தன.

இதனையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம்,முதலில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தற்காலிக தடைவிதித்ததோடு,'சிமி' மீதான தடையுத்தரவு நீடிக்கும் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையின்போது அண்மையில் அகமதாபாத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 'சிமி'இயக்கத்திற்கு உள்ள தொடர்பு குறித்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் மத்திய அரசு சமர்பித்தது.

இந்நிலையில், மத்திய அரசின் மேல் முறையீட்டு மனு மீது இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், 'சிமி' மீதான தடையை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்தது.
(மூலம் - வெப்துனியா)

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails