Tuesday, August 19, 2008

ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதியில் அகில் குமார் தோல்வி

ஒலிம்பிக் குத்துச்சண்டை: காலிறுதியில் அகில் குமார் தோல்வி
பீஜிங் ஒலிம்பிக்கின் ஆடவர் 54 கிலோ பான்டம்வெயிட் பிரிவு குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில், ந்திய வீரர் அகில்குமார் தோல்வியுற்று வெளியேறினார்.

அகில் குமார் தனது காலிறுதிச் சுற்றில், மால்டோவ் குடியரசைச் சேர்ந்த வியசிஸ்லவ் கோஜன் உடன் இன்று மாலை மோதினார்.

நான்கு சுற்றுகள் கொண்ட இப்போட்டியில், மொத்தப் புள்ளிகள் அடிப்படையில் 3-10 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வியுற்றார், அகில்.

முதல் 2 சுற்றுகள் முடிவில் இரு வீரர்களும் தலா 2 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

ஆனால், 3-வது சுற்றில் தனது சாதுர்யமான ஆட்டத்தால் வியசிஸ்லவ் 4 புள்ளிகளைப் பெற்றார். இதனால், அச்சுற்று முடிவில் 2-6 என்ற புள்ளிக் கணக்கில் அகில் பின்னடைவைச் சந்தித்தார்.

காலிறுதியின் வெற்றியை நிர்ணயிக்கும் 4வது மற்றும் கடைசி சுற்றில், வியசிஸ்லவ் தற்காப்பு பாணியைப் பின்பற்றினார்.

அகில் குமாரின் குத்துகள் எதுவும் புள்ளிகளாக மாறாதபடி, சாதுர்யமாக விளையாடி, தனக்கு சாதகமாக தருணங்களைப் பயன்படுத்திக் கொண்ட வியசிஸ்லவ், எளிதாக 4 புள்ளிகளைப் பெற்று தனது மொத்த புள்ளிகளின் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்திக் கொண்டார்.

இதையடுத்து மொத்த புள்ளிகளின் அடிப்படையில் 10-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வியசிஸ்லவ் அரையிறுதிக்குத் தகுதி பெற்றார்.

மால்டோவ் குடியரசு வீரரின் தற்காப்பு முறையை சமாளிக்க முடியாமல் போனதே, அகில் குமாரின் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.

உலக சாம்பியனான ரஷ்யாவின் செர்ஜி வோடோப்யனோவை வென்று காலிறுதிக்குள் நுழைந்த அகில்குமார், இன்றைய போட்டியில் தோல்வியுற்றதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர்.
(மூலம் - வெப்துனியா)

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails