சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடக்கும் 29வது ஒலிம்பிக் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. போட்டிகள் 24ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்ய அணிகள் அடுத்த இடங்களில் உள்ளன.
நீச்சல் போட்டிகளில் அமெரிக்க வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 8 தங்கப்பதக்கங்களை வென்று புதிய உலக சாதனை படைத்தார். மகளிர் கம்பு ஊன்றி உயரம் தாண்டுதலில் (போல்வால்ட்) ரஷ்ய வீராங்கனை இசின்பயேவா (5.05 மீ.), ஆண்கள் 100 மீ. ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் உசைன் போல்ட் (9.67 வி.) ஆகியோர் புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் தட்டிச் சென்றனர்.
ஆண்கள் துப்பாக்கிச் சுடுதலில் அபிநவ் பிந்த்ரா வென்ற ஒரே தங்கப்பதக்கம் இந்தியாவுக்கு கவுரவத்தை அளித்துள்ளது. குத்துச்சண்டையில் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட அகில் குமார் கால் இறுதியில் தோற்று ஏமாற்றினார். ஜிதேந்தர், விஜேந்தர் இருவரும் இன்று கால் இறுதியில் களமிறங்குகின்றனர்.
சரத்கமல் முன்னேற்றம்: ஆண்கள் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், சென்னை வீரர் சரத்கமல் நேற்று ஸ்பெயின் வீரர் ஆல்பிரடோ கார்னராஸ் உடன் மோதினார். மிகவும் பரபரப்பாக அமைந்த இப்போட்டியில் சரத் 4&2 என்ற செட் கணக்கில் (6&11, 12&10, 11&8, 9&11, 11&6, 11&7) வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று அசத்திய கமல், 2வது சுற்றில் ஆஸ்திரேலியாவின் வெய்க்சிங் சென் உடன் மோதுகிறார். இந்த போட்டியில் வென்றாலும், 3வது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் ஹவோ வாங் (சீனா) சவாலை சமாளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment