|
வன்முறையில் ஈடுபடுவோரைக் கண்டவுடன் சுட காந்தமால் மாவட்ட நிர்வாகம் புதன்கிழமை உத்தரவு பிறப்பித்தது. ஒரிசா மாநிலம் துமிதிபந்த் பகுதியில் உள்ள ஜலேஸ்பேட்டாவில் சனிக்கிழமை இரவு விஎச்பி தலைவர் லட்சுமணானந்த சரஸ்வதி நக்சலைட்டுகளால் கொல்லப்பட்டார். இதை அடுத்து மாவட்டத்தில் ஆங்காங்கே வன்முறை ஏற்பட்டு பிற மாவட்டங்களுக்கும் பரவியது. விஎச்பி தலைவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த பந்த் போராட்டத்தின்போது பல தேவாலயங்களுக்கு தீ வைக்கப்பட்டன. கிறிஸ்தவ அமைப்பு நடத்தும் அநாதை இல்லமும் கொளுத்தப்பட்டது. இதில் ஒரு பெண் இறந்தார். இதுபோன்ற வன்முறை சம்பவங்களில் இதுவரை 9 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆயினும் இந்த எண்ணிக்கை 14 ஆக இருக்கும் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில் காந்தமால் மாவட்டத்தில் வன்முறை தொடர்வதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதை பெரும்பாலான மக்கள் மதிக்கவில்லை. பெரிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்கின்றன. எனவே வன்முறையில் ஈடுபடுவோரை கண்டவுடன் சுடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வருவாய் கோட்ட ஆணையர் சத்யவிரத சாகு தெரிவித்தார். காந்தமால் மாவட்டம் பாலிகுடா மற்றும் உதயகிரிக்கு இடையே உள்ள பல இடங்களில் ஊரடங்கு உத்தரவுக்கு செவி சாய்க்காமல் ஏராளமானவர்கள் தீவைப்பு மற்றும் வன்முறையில் ஈடுபட்டனர். ஆயுதங்கள் மற்றும் மரத்தடிகளை ஏந்தியபடி வன்முறை கும்பல் நடமாடுகிறது. மாவட்டத்தில் உள்ள ரைகியா பகுதியில் கும்பலாக வந்த சிலர் பெரிய அளவில் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் ரைகியாவில் முன்னாள் காவல்துறை இயக்குநர் ஜான் நாயக் வீட்டின் மீதும் வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தியது. ஆதாரம் இல்லாமல் புகார் வேண்டாம்: சிவராஜ் பாட்டீல் காந்தமால் வன்முறைச் சம்பவத்தை தொடர்ந்து பரவிவரும் வன்முறைச் சம்பவங்களுக்கு யார் பொறுப்பு என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்படாதவரை யாரையும் குற்றம் சாட்டவேண்டாம் என்று கூறியுள் ளார் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல். தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: மாநில முதல்வர் நவீன் பட்நாயக்குடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன். லட்சுமணானந்தா கொல்லப்பட்டது கண்டிக்கத்தக்கதே. ஆனால் அதற்காக போராட்டம் என்ற பெயரில் மற்றவர்களுக்கு சேதம் விளைவிப்பது ஏற்கத் தக்கதல்ல. ஒரிசாவில் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர 20 கம்பெனி துணை ராணுவ படையும் ஹெலிகாப்டர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றார் சிவராஜ் பாட்டீல். |
No comments:
Post a Comment