Tuesday, August 26, 2008

ஒரிசாவில் சங்பரிவார் நடத்திய வெறிச்செயல்-கிறிஸ்தவ ஆலயங்கள் அனாதை விடுதிகள் மீது மனிதாபிமானமற்ற முறையில் தாக்குதல்


ஒரிசா பந்த்தில் பயங்கர வன்முறை:
2 பேர் எரித்துக் கொலை; பாதிரியாருக்கு பலத்த தீக்காயம்
தேவாலயங்கள், பள்ளிகளுக்கு தீவைப்பு


புவனேஸ்வரம், ஆக. 26-

விசுவ இந்து பரிஷத் தலைவர் கொலையை கண்டித்து, ஒரிசாவில் நடைபெற்ற பந்த்தில் வன்முறை வெடித்தது. 2 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். கிறிஸ்தவ பாதிரியார் பலத்த தீக்காயம் அடைந்தார். தேவாலயங்கள் மற்றும் பள்ளிகளுக்கு தீவைக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவு

ஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் ஜலஸ்பேட்டாவில் உள்ள ஆசிரமத்துக்குள் கடந்த சனிக்கிழமை இரவு, ஆயுதம் தாங்கிய மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் அங்கிருந்த விசுவ இந்து பரிஷத் தலைவர் சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி உள்பட 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இக்கொலையை கண்டித்து, விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினர், வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், பதட்டம் மிகுந்த கந்தமால் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டனர்.

பாதிரியார் காயம்

இந்நிலையில், சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதி கொலையை கண்டித்து, விசுவ இந்து பரிஷத் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் நேற்று 12 மணி நேர பந்த்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதற்கு பா.ஜனதாவும் ஆதரவு தெரிவித்தது. இதையொட்டி, ஏராளமான வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. பர்கார் மாவட்டத்தில் புட்பாலி என்ற இடத்தில் கிறிஸ்தவ அமைப்பு நடத்தி வரும் அனாதை ஆசிரமத்துக்கு ஒரு மர்ம கும்பல் தீவைத்தது.

இதில் அங்கிருந்த ஒரு பெண், தீயில் கருகி பலியானார். ஒரு கிறிஸ்தவ பாதிரியார் பலத்த தீக்காயம் அடைந்தார். அவர் பர்காரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கிருந்த 20 குழந்தைகள் உயிர் தப்பின. பலியான பெண்ணைப் பற்றிய அடையாளம் கண்டறியப்படவில்லை. அனாதை ஆசிரமத்தில் இருந்த மரச்சாமான்களையும் கும்பல் அடித்து நொறுக்கியது.

கந்தமால் மாவட்டம் ரூபா கிராமத்தில் ஒரு வீட்டுக்கு தீவைக்கப்பட்டது. இதில் வீட்டில் இருந்த ராசானந்த பிரதான் என்பவர் தீயில் கருகி பலியானார்.

தேவாலயங்களுக்கு தீவைப்பு

இதற்கிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதியின் உடல், ஜலஸ்பேட்டா ஆசிரம பள்ளியில் இருந்து சாகபடாவில் உள்ள அவரது ஆசிரமத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. முன்னதாக, அவரது உடலுடன் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் நடந்து சென்றனர். அப்போது அவர்களில் பலர் வன்முறையில் ஈடுபட்டனர்.

வழியில் தென்பட்ட தேவாலயங்களுக்கு தீவைத்தனர். கிறிஸ்தவ பள்ளிகளையும், வீடுகளையும், கடைகளையும், போலீஸ் சோதனை சாவடிகளையும் அடித்து நொறுக்கினர். 12 தேவாலயங்களும், 40 வீடுகளும் தீவைத்து எரிக்கப்பட்டன. வன்முறையை தடுக்க முயன்ற போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 2 போலீசார் காயம் அடைந்தனர்.

ஒரிசா ஸ்தம்பித்தது

பந்த்தையொட்டி, தலைநகர் புவனேஸ்வரத்தில் விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள் அமைப்பினர், அதிக அளவில் சாலையில் நடமாடினர். கடைகளை வற்புறுத்தி அடைக்க வைத்தனர். முக்கிய சாலைகளில் டயர்களை எரித்து, போக்குவரத்தை தடை செய்தனர். இதனால் பஸ், டாக்சி, ஆட்டோக்கள் ஓடவில்லை. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. சைக்கிளில் கூட யாரையும் செல்ல விடவில்லை.

பல இடங்களில் தண்டவாளத்தில் அமர்ந்து ரெயில் போக்குவரத்தை தடை செய்தனர். கல்வி நிறுவனங்களுக்கு மாநில அரசு விடுமுறை அளித்திருந்தது. அரசு அலுவலகங்கள், வங்கிகளில் வருகைப்பதிவேடு குறைவாக இருந்தது. கடைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்தது.

இதற்கிடையே, விசுவ இந்து பரிஷத் தலைவர் கொலை சம்பவம் தொடர்பாக, ஒரிசா சட்டசபையில் மாநில அரசுக்கு எதிராக, காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மான நோட்டீசு கொடுத்தது. அப்போது ஏற்பட்ட அமளியில் சபை ஒத்தி வைக்கப்பட்டது.

 http://www.dailythanthi.com/article.asp?NewsID=434412&disdate=8/26/2008&advt=1

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails