Wednesday, August 6, 2008

இரண்டு புலிகள் கைது

இரண்டு புலிகள் கைது
.
.
 சென்னை, ஆக. 6: சென்னையில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் சேகரிக்க தங்கியிருந்த அந்த இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் பேட்டரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருமங்கலம் திருவல்லீஸ்வரர் நகர் இளங்கோ தெருவில் சந்தேகத்திற்கிடமான முறையில் 3 பேர் ஒரு வீட்டில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சென்னை போலீஸ் கமிஷனர்  ஆர்.சேகர் உத்தரவின் பேரில், மத்திய சென்னை இணை கமிஷனர் பாலசுப்பிரமணியன், அண்ணாநகர் மாவட்ட துணை கமிஷனர் பாண்டியன், உதவி கமிஷனர் அசோக் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்டு சோதனை செய்தனர்.

போலீசார் வருவதை கண்ட 3 பேரில் ஒருவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. போலீசிடமிருந்து தப்ப முயன்ற மேலும்2 பேரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த போது, வெடிகுண்டு   தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒன்னரை கிலோ  பொட்டாசியம் நைட்ரேட்என்ற வெடிமருந்து, சோலார் லைட்டுகள், ஸ்பார்க் பிளக்குகள், 60 பேட்டரிகள், ஒயர்கள், மோட்டாருக்கான உதிரிபாகங்கள் என 2 மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட இரண்டு பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி போது, அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது பெயர் உமாரமணன் (வயது 23), கமலன் (வயது 27) என்பதும் தெரிய வந்தது.

மேற்படி இரண்டு பேரும் விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரமும் விசாரணையில் வெளிவந்தது.  கைதான உமாரமணன் என்பவன் விடுதலைப்புலிகளின் ஆயுதப்படையின் முக்கிய தளபதி என்று கூறப்படுகிறது.

அவன் இண்டு வாரத்திற்கு முன்பு போலி பாஸ்போர்ட் மூலம் விமானத்தில் சென்னை வந்ததாகவும், மற்றொருவன் அகதி போல ராமேஸ்வரம் வழியாக சென்னைக்கு வந்ததாகவும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.

மேலும், இலங்கையில் சண்டை நடைபெற்று வருவதால் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும், ஆயுதங்களை ரகசியமாக வாங்கி கடத்துவதற்காகவே தாங்கள் சென்னை வந்ததாகவும் அவர்கள் போலீசில் தெரிவித்தாக கூறப்படுகிறது.

வெடிப்பொருட்களை மூட்டைகளாக சேகரித்து ராமேஸ்வரம், நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் காய்கறி லாரிகள் மூலம் கொண்டு சென்று அங்கிருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஆயுதங்களையும், பிற பொருட்களையும் சேகரிப்பதற்காகவே 20க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் சென்னையில் தங்கியிருப்பதாக திடுக்கிடும் தகவலையும் பிடிபட்ட விடுதலைப்புலிகள் போலீசில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

பிடிபட்ட இரண்டு விடுதலைப்புலிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, அண்மையில் ஆயுதங்கள் வாங்குவதற்காக வந்து கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தம்பி அண்ணாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் இருந்த எண்களை சோதித்து பார்த்ததையடுத்து, கேளம்பாக்கத்தில் உள்ள ஏஜெண்டான செல்வம் என்கிற செல்வகுமாரும் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.  போலீஸ் சோதனையின் போது தப்பியோடிய விடுதலைப் புலியையும், மேலும் சென்னையில் பல பகுதிகளில் தங்கியிருப்பதாக கூறப்படும் புலிகளையும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக போலீசில் தரப்பில் கூறப்படுகிறது.

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails