Thursday, August 28, 2008

பீஜிங் ஒலிம்பிக் 2008 : முழு கண்ணோட்டம்!

lankasri.comபீஜிங்கில் நடந்த 29வது ஒலிம்பிக் அத்தியாயம் நிறைவடைந்தாலும் அதில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனைகளும், அதற்கு சொந்தமான வீரர்களின் பெயர்களையும் உலக மக்கள் என்றும் நினைவில் வைத்திருப்பர் என்பது மட்டும் திண்ணம்.

உலகம் முழுவதும் இருந்து 202 நாடுகளைச் சேர்ந்த 10,700 வீரர்கள் பங்கேற்ற இந்த சர்வதேச விளையாட்டு திருவிழாவில் 87 நாடுகள் பதக்கங்களை வென்றுள்ளன.

பதக்கப்பட்டியலில் இடம்பெற்றுள்ள பஹ்ரைன் (ஒரு தங்கம்) தஜிகிஸ்தான் (ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்), சூடான் (ஒரு வெள்ளி), ஆப்கானிஸ்தான், டோகோ (தலா ஒரு வெண்கலம்) உள்ளிட்ட 5 நாடுகளுக்கு இதுவே முதல் ஒலிம்பிக் பதக்கம் என்பது பீஜிங் ஒலிம்பிக் வரலாற்றுப் புத்தக்கத்தில் சிறப்பு பக்கங்களாக என்றும் திகழும் என்பதில் ஐயமில்லை.

உலக சாதனையிலும் பீஜிங் சாதனை: ஒலிம்பிக் விளையாட்டுகளில் உலக சாதனைகள் நிகழ்த்தப்படுவது வாடிக்கை என்றாலும், இதிலும் பீஜிங் ஒலிம்பிக் போட்டி முன்னிலை வகிக்கிறது. கடந்த 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 33 உலக சாதனைகள் நிகழ்த்தப்பட்டது. ஆனால் பீஜிங் ஒலிம்பிக் அதனை விடக் கூடுதலாக 10 சாதனைகள் (மொத்தம் 43) நிகழ்த்தப்பட்டுள்ளன. (இதில் அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் மட்டும் 7 உலக சாதனைகளைப் படைத்துள்ளார்).

ஆசியாவின் ஆதிக்கம் ஓங்குகிறது: பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் ஆசியாவின் ஆதிக்கம் மேலோங்கியுள்ளது கண்கூடாகத் தெரிகிறது. மொத்தமுள்ள 302 தங்கங்களில், 90 தங்கப் பதக்கங்களை ஆசிய நாடுகள் கைப்பற்றியுள்ளன.

இதேபோல் 56 வெள்ளி, 86 வெண்கலம் என மொத்தம் 232 பதக்கங்கள் (அதாவது மொத்த பதக்க எண்ணிக்கையில் சுமார் 25%) ஆசிய நாடுகளின் வசம் உள்ளது. ஆசிய நாடுகள் பதக்கப் பட்டியலில் சீனா 100 பதக்கங்களுடன் முதலிடத்திலும், தென்கொரியா 31 பதக்கங்களுடன் 2வது இடத்திலும் உள்ளன.

lankasri.comஇந்திய தங்கமகன் பிந்த்ரா: ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை பின்னடைவை சந்தித்த இந்தியாவுக்கு சரித்திரப் பெருமை கிடைத்தது பீஜிங் நகரில் தான். ஆடவர் 10 மீட்டர் ஏர்-ரைஃபிள் போட்டியில் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்றது, இந்திய சரித்திரத்தில் முதல் தனிநபர் தங்கமாக அமைந்தது.

இந்தப் பதக்கம் தந்த கூடுதல் உத்வேகத்தால் அடுத்தடுத்த நாட்களில் நடந்த பல்வேறு போட்டிகளில் இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறினர். இதன் காரணமாக இந்தியாவுக்கு மேலும் 2 வெண்கலப் பதக்கங்கள் (விஜேந்தர், சுஷில்குமார்) கிடைத்தது.

lankasri.comமின்னல் வேக நாடு ஜமைக்கா: பீஜிங் ஒலிம்பிக் தொடரில் 100, 200 மீட்டர் ஓட்டத்தில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவு தங்கப் பதக்கங்களை தட்டிச் சென்றதன் மூலம் உலகின் அதிவேக நாடு என்ற பட்டத்தை ஜமைக்கா பெற்றுள்ளது.

ஆடவர் 100, 200 மீட்டர் ஓட்டத்தில் புதிய உலக சாதனையுடன் தங்கம் வென்றதன் மூலம் கடந்த 1984இல் அமெரிக்க வீரர் கார்ல் லூயிஸ் படைத்த சாதனையை, ஜமைக்கா வீரர் யுசைன் போல்ட் சமன் செய்துள்ளார். 100 மீட்டர் ஓட்டத்தில் 9.69 நொடிகளிலும், 200 மீடடர் ஓட்டத்தில் 19.30 நொடிகளிலும் ஓடி இவர் புதிய உலக சாதனை படைத்தது இந்த ஒலிம்பிக் போட்டியின் மிகப் பெரிய பெருமையாகும். இவர் 4x100 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் பங்கேற்று 3வது தங்கத்தை தட்டிச் சென்றதன் மூலம் பீஜிங் ஒலிம்பிக் தடகளத்தில் தனது ஆதிக்கத்தை உலகிற்கு உணர்த்தினார். இதிலும் ஜமைக்கா அணி (37.10 நொடிகள்) உலக சாதனை படைத்தது.

lankasri.comத்ரீ-ரோசஸ்: ஜமைக்கா தடகள வீராங்கனைகளும் தங்கள் பிரிவுகளில் பதக்கங்களை அள்ளிச் சென்றனர். 100 மீட்டர் ஓட்டத்தில் வீராங்கனை ஷெல்லி-ப்ரேஸர் தங்கமும், கெர்ரோன் ஸ்டீவர்ட், ஷிரோன் சிம்ப்ஸன் இருவரும் தலா ஒரு வெள்ளிப் பதக்கமும் வென்றனர்.

ஒலிம்பிக் தொடரில் ஒரே நாட்டைச் சேர்ந்த மூவர் ஒரு போட்டியில் அனைத்து பதக்கங்களையும் தட்டிச் செல்வது இதுவே முதல் முறை என்பதும் ஜமைக்காவுக்கு பெருமையளிக்கும் விஷயமாக அமைந்துள்ளது.

lankasri.comசாதித்தது சீனா: திபெத்திற்கு சுயாட்சி கோரி புத்த பிட்சுகள் சீனாவுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பீஜிங் ஒலிம்பிக் போட்டியை சீனா சிறப்பாக நடத்தி முடிக்குமா என உலகமே சந்தேகித்த நிலையில், தனது திறமையான திட்டமிடல் மற்றும் நிர்ணயித்த காலக்கெடுவுக்குள் பணிகளை நிறைவு செய்தல் போன்ற திறமைகளால் சீன திட்டமிட்டதை விட சிறப்பாகவே போட்டிகளை நடத்தி முடித்து பாராட்டுகளை பெற்றுள்ளது.

2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் 32 தங்கப் பதக்கங்களை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது சீனா. பீஜிங் ஒலிம்பிக்கில் நிச்சயம் முதலிடத்தைப் பிடிப்போம் என சூளுரைத்தத சீனா 51 தங்கப் பதக்கங்களை வென்று அதனை சாதித்தும் காட்டி தனது ஆதிக்கத்தை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளது.

lankasri.comஅமெரிக்காவுக்கு 2வது இடம்: பீஜிங் ஒலிம்பிக்கில் அமெரிக்க வீரர் பெல்ப்ஸ் மட்டும் 8 தங்கங்களை வென்றிருந்தாலும், மொத்தம் 36 தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம் பதக்கப்பட்டியலில் அமெரிக்காவுக்கு 2வது இடமே கிடைத்துள்ளது.

ஆடவர் மற்றும் மகளிர் 4 x 100 தொடர் ஓட்டத்தில் உலக சாம்பியனாக வலம் வந்த அமெரிக்காவுக்கு, பீஜிங் ஒலிம்பிக்கில் மரண அடி விழுந்துள்ளது. பேட்டன் மாற்றும் போது ஏற்பட்ட குழப்பத்தால் அமெரிக்க ஆடவர், மகளிர் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறத் தவறியது மொத்த அமெரிக்காவையும் நிலைகுலைய வைத்தது என்றால் மிகையில்லை.

எனினும் மொத்த பதக்கங்களின் (110 பதக்கம்) அடிப்படையில் பார்த்தால் பீஜிங் ஒலிம்பிக் அமெரிக்காவுக்கு சிறப்பானதாகவே அமைந்துள்ளது. கடந்த 1904இல் செயின்ட் லூயிஸ் நகரிலும் (இதில் 242 பதக்கம்), கடந்த 1984இல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் (இதில் 174 பதக்கம்) நடந்த போட்டிகளுக்கு பின்னர் பீஜிங் ஒலிம்பிக்கில் அமெரிக்கா அதிக பதக்கங்களை வென்றுள்ளது.

செயின்ட் லூயிஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் ரஷ்யா பங்கேற்று இருந்தால் அமெரிக்கா இத்தனை பதக்கங்களை வென்றிருக்க முடியாது என சில விளையாட்டு ஆர்வலர்கள் கருத்து தெரிவித்ததையும் நினைவில் கொள்ளவேண்டும்.

சர்க்கரை கிண்ணத்திற்கு சுவைக்கவில்லை பீஜிங்: சர்க்கரை உற்பத்தியில் முதலிடம் வகிப்பதால் உலகின் 'சர்க்கரைக் கிண்ணம்' என செல்லப் பெயர் பெற்றுள்ள கியூபா, குத்துச் சண்டையிலும் சிறந்து விளங்கியது. ஆனால் பீஜிங் ஒலிம்பிக்கில் இந்தப் பெருமையை அதனால் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

கடந்த 1968க்கு பின்னர் நடந்த ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிகளில் தொடர்ந்து தங்கப் பதக்கம் வென்று தனது ஆதிக்கத்தை தொடர்ந்த கியூபாவின் வெற்றி நடைக்கு பீஜிங்கில் இடறல் ஏற்பட்டுள்ளது.

பான்டம் வெயிட் பிரிவு இறுதிக்கு முன்னேறிய யான்கீல் லியான் மற்றும் வெல்டர்வெயிட் பிரிவு இறுதியில் சண்டையிட்ட கர்லோஸ் பான்டியாக்ஸ் இருவரும் தோல்வியடைந்ததால் கியூபாவின் குத்துச்சண்டை தங்கக் கனவு சுக்குநூறாக உடைந்தது என்று தான் கூறவேண்டும். எனினும் 120 கிலோ மல்யுத்தம், 110 மீட்டர் தடை ஓட்டத்தில் தலா ஒரு தங்கத்தை கியூபா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

lankasri.comமின்னிய நட்சத்திரங்கள்: பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் அமெரிக்காவின் பெல்ப்ஸ் (8 தங்கம்), ஜமைக்காவின் யுசைன் போல்ட் (3 தங்கம்) ஆகியோர் தவிர வேறு சில பிரபலங்களும் தங்களின் ஆதிக்கத்தை உலகிற்கு உணர்த்தியுள்ளனர்.

சைக்கிள் வீரன்: இங்கிலாந்து வீரர் கிரிஸ் ஹோய் பீஜிங் ஒலிம்பிக் தொடரில் நடந்த சைக்கிள் பந்தயங்களில் 3 பதக்கங்களை வென்று பீஜிங்கில் அதிக பதக்கம் வென்றவர்கள் பட்டியலில் 2ம் இடம் பிடித்துள்ளார். 100 ஆண்டுக்கு பின்னர் ஒரே ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்ற முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

பெண் சுறா: ஆஸ்திரேலியா வீராங்கனை ஸ்டீபனி ரைஸ் மகளிருக்கான நீச்சல் போட்டியில் 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். இதில் 2 உலக சாதனைத் தங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

lankasri.comபோல்வால்ட் ராணி: ஒலிம்பிக் போட்டிகளில் நிச்சயம் பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் இடம் பிடித்த போல்வால்ட் ராணி இசின்பயீவா, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்.

ஒலிம்பிக் துவங்குவதற்கு முன்பே 5 மீட்டர் உயரத்தை தாண்டி புதிய உலக சாதனை படைத்த பயீவா, போல்வால்ட் இறுதியில் 5.05 மீட்டர் தாண்டி தனது முந்தைய உலக சாதனையை மீண்டும் முறியடித்தார்.

lankasri.comடேபிள் டென்னிஸ் நாயகன்: டேபிள் டென்னிஸில் தொடர்ந்து சாதித்து வரும் சீனா, பீஜிங்கிலும் மின்னத் தவறவில்லை. இறுதிப் போட்டியில் சீனா வீரர் மா-லின், சகநாட்டு வீரரும், உலக சாம்பியனுமான வாங்-ஹோவை வீழ்த்தி தங்கம் வென்றார். இதன் மூலம் சீன டேபிள் டென்னிஸ் நட்சத்திரங்கள் வரிசையில் மா-லின் புதிய வரவாக இடம் பிடித்துள்ளார்.

lankasri.comஜிம்னாஸ்டிக் ராஜா: சீன வீரர் சோ-கை, ஆடவர் பிரிவு ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்றதன் மூலம், ஜிம்னாஸ்டிக் உலகின் புதிய ராஜா என்பதை பீஜிங் ஒலிம்பிக்கில் உலகிற்கு உணர்த்தியுள்ளார்.

டைவிங் இளவரசி: பல குட்டிக்கரணங்கள் அடித்து நீச்சல் குளத்தில் சாகஸம் நிகழ்த்தும் டைவிங் பிரிவு போட்டியில், சீன வீராங்கனை ஜிங்ஜிங்-குவோ பீஜிங்கில் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் 2 தங்கம், சிட்னி ஒலிம்பிக்கில் 2 வெள்ளிப் பதக்கங்களை ஏற்கனவே வென்றிருந்த ஜிங்ஜிங், பீஜிங்கில் 2 தங்கம் வென்றதன் மூலம், மொத்தம் 6 பதக்கங்களை வென்ற முதல் டைவிங் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

நீண்ட தூர ஓட்டத்தின் ராஜா: பீஜிங் ஒலிம்பிக்கில் ஆடவர் பிரிவின் 5,000 மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எத்தியோப்பிய வீரர் கினினிஸா பிக்கீலே தங்கப் பதக்கங்களை தட்டிச் சென்றார். கடந்த 1980க்கு பின்னர் 2 பிரிவிலும் தங்கம் வென்ற வீரர் என்ற பெருமையை இவர் பீஜிங் ஒலிம்பிக்கில் பெற்றுள்ளார்.

நீண்ட தூர ஓட்டத்தின் ராணி: இதேபோல் மகளிர் 5,000 மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எத்தியோப்பிய வீராங்கனை திருனேஷ் டிபாபா தங்கப்பதக்கங்களை தட்டிச் சென்றதன் மூலம் நீண்ட தூர ஓட்டத்தின் ராணி என்ற பட்டத்தை பெற்றுள்ளார்.

lankasri.comஜொலிக்கத் தவறிய லியு-ஜியாங்: ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியை 2001ல் சீனா பெற்று விட்டாலும், ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் தொடரில் 110 மீட்டர் தடை ஓட்டத்தில் சீனா வீரர் லியு-ஜியாங் தங்கப் பதக்கம் வென்ற பின்னரே சீன மக்களிடையே ஒரு உத்வேகம் ஏற்பட்டது.

இந்த உத்வேகத்தை சரியாகக் கூற வேண்டுமென்றால், பீஜிங் ஒலிம்பிக் தடை ஓட்டத்தில் லியு-ஜியாங் மீண்டும் தங்கம் வென்றால் சீனாவுக்கு அதை விடப் பெரிய சந்தோஷம் எதுவும் இருக்காது என்று கூறலாம். அதேவேளை லியு-ஜியாங் முதலிடத்தை தவற விட்டால் அன்றைய தினம் சீனர்களுக்கு கருப்பு தினமாக அமையும் என்று சர்வதேச பத்திரிகைகள் கருத்து தெரிவித்திருந்தன.

ஆனால் இந்த இரண்டு விஷயங்களுமே நடக்காததால், மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சீனாவின் தங்க மகன் லியு-ஜியாங் ஜொலிக்கத் தவறினார். 110 மீட்டர் தடை ஓட்டத்திற்கான தகுதிச் சுற்றில் பங்கேற்ற போது காலில் காயமடைந்ததால் களத்திலேயே நிலைகுலைந்த லியு-ஜியாங், ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது சீனர்கள் பலர் கண்ணீர் வடித்தனர். அவர்களில் ஜியாங்கின் பயிற்சியாளரும் ஒருவர் என்பது சோகத்தின் உச்சத்தை உணர்த்துவதாக அமைந்தது.

lankasri.comவீராங்கனைகள் எண்ணிக்கை அதிகரிப்பு: மகளிர் 200 மீட்டர் ஓட்டத்தில் பஹ்ரைன் வீராங்கனை ரோகாயா அல்-கஸரா உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை (முகம், கை விரல், கால் பாதம் தவிர) மறைத்த உடையுடன் ஓடியது போட்டியை பார்த்தவர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

பெண்களுக்கு அதிக சுதந்திரம் இல்லாத பஹ்ரைன் உள்ளிட்ட அரபு நாடுகளைச் சேர்ந்த வீராங்கனை பீஜிங் போட்டியில் பங்கேற்றுள்ளது ஒலிம்பிக் போட்டிகளில் வீராங்கனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை உணர்த்துவதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி குறிப்பிட்டுள்ளது.

இதனை நாமும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். காரணம்... கடந்த ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் பஹ்ரைனில் இருந்து 2 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றனர். பீஜிங்கில் அது 4 ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல் பீஜிங் ஒலிம்பிக்கில் பங்கேற்ற மொத்த போட்டியாளர்களில் 42% பேர் பெண்கள். இதன் மூலம் அதிக பெண்கள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டி என்ற பெருமையையும் பீஜிங் பெற்றுள்ளது. கடந்த 1996 அட்லாண்டா ஒலிம்பிக்கில் மொத்த போட்டியாளர்களில் 34.2% பெண்கள் பங்கேற்றதே இதுவரை அதிக அளவாக இருந்தது.

சில தவறுகள்: பீஜிங் ஒலிம்பிக்கில் பல சிறப்பான விஷயங்கள் நடந்திருந்தாலும், ஒரு சில தவறுகள் நிகழ்ந்துள்ளதை மறுக்க முடியாது.

உலகமே மிகுந்த ஆச்சரியத்துடன் கண்டுகளித்த ஒலிம்பிக் துவக்க விழா நிகழ்ச்சியில், சிறுமி லின் மியாகே சிறப்பாக பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் அடுத்த சில நாளில் உண்மை வெளியானது. துவக்க நிகழ்ச்சியில் சிறுமி உதடுகளை மட்டுமே அசைத்தார்; பாடலைப் பாடியவர் வேறு ஒருவர் என்ற உண்மை தான் அது. இது ஒலிம்பிக் ரசிகர்கள் மனதில் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்ற ஹீ-கெக்ஸின் 16 வயது நிரம்பாதவர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இவர் ஜிம்னாஸ்டிக் பிரிவில் 2 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

பீஜிங் ஒலிம்பிக் ஊக்க மருந்து பயன்பாடற்ற ஒலிம்பிக் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தாலும், உக்ரைன் வீரர் ரஸோரோனோவ் (பளு தூக்குதல்) மற்றும் வீராங்கனை லுட்மிலா ப்ளோன்ஸ்கா (ஹெப்டத்லான்), கிரீஸ் வீராங்கனை ஹல்கியா (தடை ஓட்டம்), வடகொரியாவின் கிம் ஜோங்-சு (துப்பாக்கி சுடுதல்), ஸ்பெயினின் இஸபெல் மோரினோ (சைக்கிள் போட்டி), வியட்நாம் வீராங்கனை தி-கன் துவோங் (ஜிம்னாஸ்டிக்) ஆகியோர் ஊக்க மருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கள நடுவருக்கு உதை: ஆடவர் டேக்வான்டோ போட்டிகளின் போது கள நடுவரை முகத்தில் உதைத்த குற்றத்திற்காக கியூபா வீரர் ஏஞ்சல் வலோடியாவுக்கு ஆயுட்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெண்கல பதக்கத்திற்கான போட்டியில், ஏஞ்சல் வாலோடியா மடோஸ், கஜகஸ்தானின் அர்மன் சில்மனொவை எதிர்த்து மோதினார். இப்போட்டியில் வாலோடியா முன்னிலையில் இருந்தாலும், கஜகஸ்தான் வீரர் வெற்றி பெற்றதாக அறிவித்து நடுவர் போட்டியை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த வாலோடியா நடுவரை காலால் எட்டி உதைத்தார். இதையடுத்து வாலோடியாவுக்கும், அவரது பயிற்சியாளருக்கும் வாழ்நாள் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

நெஞ்சைத் தொட்டது: ஒலிம்பிக் போட்டி நடந்த சமயத்தில் ரஷ்யாவுக்கும், அதன் அண்டை நாடான ஜார்ஜியாவுக்கும் உக்கிர போர் மூண்டது. மகளிர் பிரிவு 10 மீட்டர் ஏர்-பிஸ்டல் போட்டியில் தங்கம் வென்ற ஜார்ஜிய வீராங்கனை நினோ, வெள்ளிப் பதக்கம் வென்ற நடாலியா படெரினாவை கட்டித் தழுவி தனது நட்புணர்வை வெளிப்படுத்தியது ரசிகர்களின் நெஞ்சைத் தொட்டது.

ஒரு சில குறைகள் இருந்தாலும், பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை சீனா மிகச் சிறப்பாக நடத்தியது என்பதை நாம் ஒப்புக்கொண்டாக வேண்டும். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. நிறைவு விழாவில் பேசிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவர் ஜாக் ரோஜே, அடுத்த ஒலிம்பிக்கை நடத்தும் இங்கிலாந்துக்கு விடுத்த கோரிக்கை என்னவெனில், பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளின் தரத்திற்கு சற்றும் குறைவில்லாத வகையில் 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியை இங்கிலாந்து நடத்தி தர வேண்டும் என்பதே.

"Webdunia"

 

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1219858630&archive=&start_from=&ucat=4&

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails