சிரஞ்சீவிக்கு சிக்கல் |
நடிகர் சிரஞ்சீவியின் கட்சி பெயரை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான சிரஞ்சீவி, கடந்த 26-ந் தேதி அன்று `பிரஜா ராஜ்யம்' என்ற புதிய கட்சியை தொடங்கினார். திருப்பதியில், 10 லட்சம் ரசிகர்கள் மத்தியில் கட்சியின் பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்திய அவர், அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷனில் தனது கட்சியின் பெயரை பதிவு செய்ய கடந்த 26-ந் தேதி அவர் மனு தாக்கல் செய்து இருக்கிறார். இதற்கிடையில் சிரஞ்சீவியின் கட்சி பெயரை "பிரஜா ராஜ்யம்'' என்று பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. இதே பெயரில் கட்சி தொடங்க, தேர்தல் கமிஷனிடம் ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் 4 மாதங்களுக்கு முன்பே மனு தாக்கல் செய்து இருக்கிறார். அவரது மனுவை தேர்தல் கமிஷன் பரிசீலித்து, அவருக்கு பதில் கடிதமும் எழுதி இருக்கிறது.
எனவே சிரஞ்சீவியின் கட்சியின் பெயரையும் "பிரஜா ராஜ்யம்'' என்று வைத்துக்கொள்ள தேர்தல் கமிஷன் அனுமதி கொடுக்க முடியாது. என்றாலும் இதுபற்றி பரிசீலித்து அவருக்கு இன்னும் ஒரு வாரத்தில் கடிதம் அனுப்ப தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், கட்சியின் உயர்மட்ட செயற்குழு, பல்வேறு முக்கிய பிரச்சினைகளில் கட்சியின் கொள்கை ஆகியவை குறித்து சிறந்த வல்லுனர்கள் குழுவுடன், சிரஞ்சீவி ஆலோசனை நடத்தி வருகிறார். மாநிலம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து, மக்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டவும் முடிவு செய்துள்ளார்.
இது குறித்து கட்சி அலுவலகத்தில் நேற்று பேட்டியளித்த சிரஞ்சீவி, "முதல் கட்டமாக மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை நேரில் பார்த்து ஆய்வு செய்ய ஆர்வமாக இருக்கிறேன். இதற்காக மாநிலம் முழுவதும் பயணம் மேற்கொள்ளும் வகையில் என்னுடைய சுற்றுப்பயண விவரம் தயாராகி வருகிறது'' என்றார்.
இது தவிர, தனக்கு எந்த அரசியல் தலைவரும் எதிரி கிடையாது என்று கூறும் சிரஞ்சீவி, `அனைத்து கட்சி தலைவர்களும் என்னுடைய நண்பர்களே. தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவை விரைவில் சந்தித்து பேச இருக்கிறேன்' என்று தெரிவித்தார். |
No comments:
Post a Comment