Wednesday, August 6, 2008

'சிமி' மீதான தடை நீடிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

'சிமி' மீதான தடை நீடிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
இஸ்லாமிய தீவிரவாத மாணவர் இயக்கம் என்ற குற்றம் சாட்டப்பட்ட 'சிமி' அமைப்பின் மீதான தடையை நீக்கி டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதித்துள்ள உச்நீதிமன்றம், அந்த இயக்கத்தின் மீதான தடை நீடிப்பதாக அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் நடந்த பல்வேறு தீவிரவாத செயல்களில் 'இஸ்லாமிய மாணவர் அமைப்பு' என்ற 'சிமி' அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு 'சிமி'க்கு 2 ஆண்டு தடை விதித்தது. பின்னர் 2 ஆண்டுக்கு ஒருமுறை தடை நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி 7ம் தேதி இத்தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி வரும் 2010ம் ஆண்டு வரை 'சிமி'க்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் சிமி அமைப்பு வழக்குத் தொடர்ந்தது. தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று அந்த அமைப்பு மனுவில் கூறியிருந்தது.

இதுகுறித்து விசாரித்த நீதிபதி கீதா மித்தல் தலைமையிலான சிறப்பு நடுவர் மன்றம், 'சிமி'க்கு எதிரான ஆதாரங்களை சமர்ப் பிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், "பழைய ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே ஒரு இயக்கத்தின் மீதான தடையை நீட்டிக்க முடியாது' என்று கூறி சிமி மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது.

இதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், 'சிமி' மீதான தடையை நீக்கி டெல்லி உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு தடை விதித்ததோடு, அந்த இயக்கத்தின் மீதான தடை நீடிப்பதாகவும் அறிவித்தது.

அத்துடன் தடையை ஏன் நீட்டிக்கக்கூடாது என்பது குறித்து 3 வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு கூறி 'சிமி'இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.


(மூலம் - வெப்துனியா)

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails