Tuesday, August 12, 2008

ஒட்டுமொத்த இந்தியாவின் பாராட்டு-பரிசு மழையில் அபினவ்!

ஒட்டுமொத்த இந்தியாவின் பாராட்டு-பரிசு மழையில் அபினவ்!
பீஜிங் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான 10 மீட்டர் ஏர்-ரைஃபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில், இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் பெற்று தந்துள்ள அபினவ் பிந்த்ரா, நாடு முழுவதும் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்ததோடு, பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுதலையும் அபினவ் பிந்த்ராவுக்குத் தெரிவித்துள்ளனர்.

"பிந்த்ராவின் இந்த ஒப்பற்ற சாதனை, இந்திய விளையாட்டு வீரர்களுக்கு முன்னுதாரணமாய் திகழ்கிறது. ஒலிம்பிக்கில் இந்தியா மேலும் பதக்கங்கள் வெல்ல தூண்டுகோலாய் அமைந்துள்ளது," என்றார், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.

"இந்திய விளையாட்டுத்துறை சரித்திரத்தில் இது ஒரு பொன்னாள். கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்திவரும் இந்தியாவில், ஏனைய விளையாட்டுகளிலும் இந்திய இளைஞர் ஆர்வம் கொள்வதற்கு தூண்டுகோலாய் அமைகிறது," என்று கூறினார், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் சுரேஷ் கல்மாடி.

"நாட்டுக்கும் தனக்கும் பெருமை சேர்த்துவிட்டான், அபினவ்," என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் அபினவ் பிந்த்ராவின் தாயார், பாப்லி.

அபினவுக்கு இந்தியத் தலைவர்கள் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துவரும் நிலையில், நாட்டின் ஊடகங்கள் அனைத்திலும் இன்றைய தினத்தில் முழுமையாக அனுபவே ஆக்கிரமித்தார்.

குவியும் பரிசுகள்!

* நாட்டுக்குப் பெருமை சேர்த்துள்ள அபினவ் பிந்த்ராவுக்கு, மத்திய பிரதேச அரசு சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

* பிந்த்ராவின் சொந்த மாநிலமான பஞ்சாப் மாநில அரசு, ரூ.1 கோடி பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

* வாழ்நாள் முழுவதும் ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்வதற்கான தங்க அட்டையை பரிசாக அறிவித்துள்ளார், ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ்.

* இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரூ.25 லட்சம் பரிசை அறிவித்துள்ளது.

* ஹரியானா மாநில அரசு ரூ.25 லட்சம்; மகாராஷ்டிர அரசு ரூ.10 லட்சம்; சண்டிகர் ரூ.5 லட்சம் அறிவித்துள்ளன.
(மூலம் - வெப்துனியா)

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails