Thursday, August 28, 2008

புலிகள் விமானம் குண்டு மழை

புலிகள் விமானம் குண்டு மழை
.
.
 கொழும்பு,  ஆக.27: இலங்கையில் திரிகோணமலை துறைமுகம் பகுதியில் உள்ள இலங்கை கடற்படை தளம் மீது  விடுதலைப் புலிகளின் விமானம் குண்டு மழை பொழிந்து தாக்குதல் நடத்தி உள்ளது.
.
இந்த தாக்குதலில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 18 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் விடுதலைப் புலிகளின் மீது அந்நாட்டு ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. புலிகளின் கட்டுப்பாட்டிலில் உள்ள பகுதிகளை கைப்பற்றும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

ராணுவத்தின் இந்த தொடர் தாக்குதல்களில் ஏராளமான விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திரிகோணமலையில் உள்ள துறைமுகம் பகுதியில் அமைந்துள்ள இலங்கை கடற்படை தளம் மீது நேற்றிரவு 9 மணிக்கு விடுதலைப் புலிகளின் போர் விமானம் குண்டு மழை பொழிந்து அதிரடி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதல்களில் 18 பேர் காயமடைந்ததாகவும், மேலும் நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
விடுதலைப்புலிகளின் போர் விமானம் துறைமுகத்தின் மீது 2 குண்டுகளை வீசி தாக்கியதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

துறைமுகத்தின் மீது குண்டுகள் வீசப்பட்ட சத்தம் பயங்கரமாக கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை கடற்படையினர் வானை நோக்கி சரமாரியாக பீரங்கியால் தாக்கியது.

புலிகள் நடத்திய இந்த அதிரடி தாக்குதலைத் தொடர்ந்து அந்த பகுதியில் தொலைத் தொடர்பு சேவை மற்றும் மின் விநியோகம் பாதிக்கப் பட்டதாகவும், மேலும் அப்பகுதியில்  பதட்டம் நீடிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகளின் போர் விமானம் திரிகோணமலை துறைமுகத்தில் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை போர் விமானங்கள் வன்னிப் பகுதிக்கு தாக்குதல் நடத்த விரைந்திருப்பதாக வவுனியாவில் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடற்படையினரை யாழ்ப் பாணத்திற்கு அழைத்துச் செல்ல பயன்படுத்தப்படும் ஜெட்லைனர் என்ற கப்பலை குறி வைத்து விடுதலைப் புலிகள் விமானம் மூலம் தாக்கியதாக திரிகோணிமலை கடற்படை வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனிடையே, நேற்று நள்ளிரவு 12.15 மணிக்கு விடுதலைப் புலிகளின் போர் விமானம் மீண்டும் திரிகோணமலை துறைமுகம் மீது குண்டுகளை பொழிந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால் இந்த 2வது தாக்குதல் குறித்து இலங்கை ராணுவத் தரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப் படவில்லை

 

 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails