ஏழரைச் செய்திகள்!
| -லக்கிலுக், கார்ட்டூன்ஸ்: முத்து அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்தியாவை அரசியல் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன. எப்போதும் என்னவும் நடக்கலாம் என்பதால் அதை தாங்கிக் கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை எல்லாம் வல்ல மகரநெடுங்குழைகாதன் தமிழர்களுக்கு அளிக்க வேண்டுமாய் பிரார்த்திக்கிறேன். 'எது நடக்கப்போகிறதோ அது நல்லதுக்கு அல்ல' என்ற அடிப்படையில் நாளைய செய்திகளை இன்றே ஏழரைச் செய்திகளாய் உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். சிறுபான்மையினரின் காவலர் நரேந்திரமோடி! -கருணாநிதி புகழாரம்! 'சிறுபான்மை மக்களை காக்கக்கூடிய காவலராக, காயிதே மில்லத்தின் மறு உருவமாக நரேந்திர மோடியை காணுகிறேன' என்றார் தமிழக முதல்வர் கருணாநிதி. நேற்று மாலை அண்ணா அறிவாலயத்தில் மரியாதை நிமித்தமாக நரேந்திரமோடியை சந்தித்த தமிழக முதல்வர், அதன்பிறகு பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் பேட்டியளித்தார். அப்போது, ''வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் அந்நிய சக்திகளின் ஊடுருவலை முறியடித்து பாரதத்தை காக்கும் கட்சியோடு தி.மு.க. கூட்டணி வைக்குமா என்பதை கழகத்தின் பொதுக்குழுவும், செயற்குழும் கூடி முடிவு செய்யும்'' என்றும் தெரிவித்தார். பேட்டியின் போது அமைச்சர் ஆற்காடு வீராசாமி, அமைச்சர் மு.க.ஸ்டாலின், பேராயர் எஸ்றா சற்குணம், பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன், திருநாவுக்கரசர் ஆகியோரும் உடனிருந்தனர். காஞ்சி சங்கரமடத்திலிருந்து பிரத்யேகமாக பூஜை செய்து அனுப்பப்பட்டிருந்த காமாட்சியம்மன் கோயில் பிரசாதம் கருணாநிதிக்கு வழங்கப்பட்டது. 30-வது அணி! ஜெ. அதிரடி! போயஸ் கார்டனில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நேற்று மாலை சி.பி.எம். பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், சி.பி.ஐ. பொலிட் பீரோ உறுப்பினர் டி. ராஜா ஆகியோர் சந்தித்ததை அடுத்து தேசிய அளவிலான அரசியலில் சுனாமி அடிக்கத் தொடங்கியிருக்கிறது. இச்சந்திப்பைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு ஜெ. பேட்டியளித்தார். விவரம் பின்வருமாறு: ''கடந்த ஆண்டு சந்திரபாபு நாயுடு, முலாயம்சிங் போன்ற மண் குதிரைகளை நம்பி ஆற்றில் இறங்கி மூன்றாவது அணி அமைத்து மூளியாகிப் போனேன். இந்த முறை அவ்வாறு இல்லாமல், அ.தி.மு.க-வில் இருந்து ஒருவரை பிரதமராக ஏற்றுக் கொள்ளக்கூடிய கூட்டணியை அமைக்க முடிவு செய்திருக்கிறேன். இடையில் கண்ட கபோதிகளும் ஆளாளுக்கு ஒவ்வொரு அணி உருவாக்கிவிட்டதால் எங்களது அணி 30-வது அணியாகிவிட்டது. 30வது அணியாக இருந்தாலும் நாங்கள்தான் முதல் அணி (செங்கோட்டையன், ஓ.பி.எஸ். போன்றோர் விசிலடித்து கைத்தட்டுகிறார்கள்)" என்றார். ''தற்போது புத்ததேவ் பட்டாச்சார்யா வலம் வந்து கொண்டிருக்கும் லெக்சஸ் சொகுசு கார் அம்மா வாங்கிக் கொடுத்தது அல்ல'' என்று செங்கோட்டையன் பத்திரிகையாளர்களிடம் கிசுகிசுத்தார். மாமனிதர் கருணாநிதி! - சோ தலையங்கம் 'கருணாநிதி ஒரு மாமனிதர். அவர் நாட்டுக்கு வழிகாட்டுவார்' என்று சமீபத்தில் 1976-லேயே நான் எழுதியிருக்கிறேன் என்று சோ தனது துக்ளக் தலையங்கத்தில் எழுதியிருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் எழுதியிருப்பதாவது: ''இன்றைய நிலையில் தேசிய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாமனிதர் கருணாநிதி விளங்குகிறார். இவர் இம்மாதிரி நாட்டுக்கே வழிகாட்டுவார் என்று சமீபத்தில் 1976-ல் மிசா சட்டம் பத்திரிகைகளின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தபோதே நான் எழுதியிருக்கிறேன். 1976 செப்டம்பர் 23 துக்ளக் இதழில் வெளிவந்த கேள்வி-பதில்: கேள்வி: எதிர்காலத்தில் கருணாநிதி என்ன ஆவார்? நரசிம்மன் ராகவன், சென்னை-61 சோ பதில்: எதிர்காலத்தில் அவர் என்னவாக வேண்டுமானாலும் ஆகலாம். எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்து கருணாநிதி ஜெயில் கைதியாகவும் ஆகலாம். இல்லையென்றால் ஏதோ ஒரு அதிசயம் நடந்து அவர் நாட்டுக்கே வழிகாட்டவும் காட்டலாம். என்ன ஆனாலும் அது அவரது குடும்பத்துக்கு நல்லது. நாட்டுக்கு நல்லதா என்பதை உங்கள் யூகத்துக்கே விட்டு விடுகிறேன். 76-ல் நான் எழுதியது 2008-க்கும் பொருந்துகிறது அல்லவா? கருணாநிதி, சுப்ரமணியசாமி, இல.கணேசன் போன்றவர்கள் கூட்டணி அமைத்து தமிழகத்தில் நாற்பது சீட்டுகளையும் வென்று மத்தியில் நரேந்திரமோடியை ஆட்சிக்கு வரவைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இது நடந்தால் நாட்டுக்கு நல்லது. கனவால் அமைந்த கூட்டணி! நமது சிறப்பு நிருபர் பரபரப்புத் தகவல்! அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு தி.மு.க., -பா.ஜ.க. கூட்டணி அமைவது உறுதியாகிவிட்ட நிலையில், இந்த கூட்டணியை அமைத்தவர் அமரர் அண்ணா என்ற புதுத்தகவல் வெளியாகியிருக்கிறது. அத்வானியை சந்திக்க நேற்று மாலை தமிழக முதல்வர் கருணாநிதி சென்றபோது இத்தகவலை துரைமுருகன் தெரிவித்தார். கருணாநிதி கனவில் தோன்றிய பேரறிஞர் அண்ணா 'சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையமுடியும் தம்பி. என் நண்பர் வாஜ்பாய் வீற்றிருக்கும் பா.ஜ.க. எனும் சுவரில் ஆட்சி என்னும் சித்திரத்தை வரை' என்று சொன்னாராம். அதே இரவில் வாஜ்பாய் கனவிலும் தோன்றிய அண்ணா 'என் தம்பியை அரவணைத்து ஆட்சியமைத்து நாட்டை மோடி மூலமாக காப்பாற்றுங்கள்' என்றும் சொன்னாராம். இத்தகவலை கேள்விப்பட்டதிலிருந்து தமிழகமெங்கும் இருக்கும் தி.மு.க. உடன்பிறப்புகள் உடல் சிலிர்த்துப் போயிருக்கிறார்கள். தே.மு.தி.க-வால் புரட்சி ஏற்படும்! - விஜயகாந்த் சூசகத் தகவல்! விஜயகாந்தின் மதுரை பண்ணைவீட்டில் இருந்த மாட்டுக் கொட்டகையை வாய்க்கால் அமைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் இடித்துவிட்டது. அதைக் கண்டித்து மதுரை மாட்டுத் தாவணியில் நடந்த பொதுக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசியதாவது: 'நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த கட்சி காங்கிரஸ் கட்சி. நல்லவர் மூப்பனார் அந்த கட்சியில் இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக கருணாநிதி காங்கிரஸ் கட்சியையும், காங்கிரஸ் தலைவர் சோனியாவையும் அவமானப்படுத்துகிறார். என் தந்தை பாரம்பரிய காங்கிரஸ்காரர் என்பதால் இன்று என் வீட்டில் இருந்த மாட்டுக் கொட்டகையை ஆள்வைத்து மு.க.ஸ்டாலின் இடித்திருக்கிறார். இதற்கெல்லாம் கருணாநிதி பதில் சொல்லவேண்டிய காலம் வரும். என்னைப் பார்த்து முலாயம்சிங் யாதவ் பயப்படுகிறார், சந்திரபாபு நாயுடு பயப்படுகிறார். ஜார்ஜ் புஷ் பயப்படுகிறார். பிடல் காஸ்ட்ரோ கூட பயப்படுகிறார்'' இவ்வாறாக விஜயகாந்த் பேசினார். பிச்சையெடுத்தாவது தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியை வெற்றிபெற வைப்பேன்! -சு.சாமி சபதம்! 'ஒவ்வொரு வாக்காளரின் காலில் விழுந்தும் பிச்சையெடுத்தாவது தி.மு.க-பா.ஜ.க. கூட்டணியை வெற்றிபெற வைப்பேன். இதற்காக கலைஞர் எனக்கு செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். மத்திய சென்னையில் சந்திரலேகாவை நிற்கவைத்து வெற்றி பெறவைக்க வேண்டும்' என்று சுப்ரமணிய சாமி கூறினார். மேலும் மன்மோகன்சிங் பத்தாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு பஞ்சுமிட்டாய் தயாரிப்பதில் ஊழல் செய்திருப்பதாகவும், சோனியாவின் உறவினர்கள் இத்தாலியில் கள்ளமார்க்கெட்டில் காராச்சேவு விற்பதாகவும் தெரிவித்தார். |
source: www.vikatan.com
No comments:
Post a Comment