Sunday, August 24, 2008

'உலக அதிசயங்களைப் பட்டியலிட முடியுமா?'

உலக அதிசயங்கள்
'உலக அதிசயங்களைப் பட்டியலிட முடியுமா?'

இப்படி ஒரு கேள்விக்கணை உங்களைத் தாக்கியதுண்டா?

ஒருவேளை, சரியான விடை தெரியவில்லை என்றால் வருத்தப்பட வேண்டாம்.

உங்களுக்கு மட்டுமல்ல; இன்று நம்மில் பெரும்பாலோர் இந்த கேள்விக்கான விடையைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. காரணம் - உலக அதிசயங்கள் என்பவை, 'இவை'தான் என்று அறுதியிட்டு உறுதியாகக் கூறிவிட முடியாத நிலை.

இந்தியாவின் மிக முக்கிய வரலாற்றுச் சின்னமான தாஜ்மகால், அண்டைநாடான சீனாவில் உள்ள சீனத்துப் பெருஞ்சுவர்... இப்படிச் சிலவற்றையும் உலக அதிசயங்கள் எனக் குறிப்பிடுகின்றனர். இதுபோக..., தற்போது உலகின் மிக உயரமான கட்டிடமான 'பெட்ரோனாஸ்' இரட்டை கோபுரம் முதல், அரபு தேசத்து சுயஸ் கால்வாய்வரை... இன்னும் சிலவற்றையும்கூட உலக அதிசயமாகக் குறிப்பிடுகிறார்கள். இதை 'தவறு' என்று முற்றிலுமாக ஒதுக்கித் தள்ளிவிடமுடியவில்லை.

என்றாலும், பெரும்பாலோரால் உலக அதிசயங்களாக ஏற்றுக்கொள்ளப்படுபவை,  நீண்ட ஆராய்ச்சிக்குப்பின் வரலாற்று ஆசிரியர்களால் பட்டியலிடப்பட்டுக் கூறப்படுபவைதான். வரலாற்று ஆசிரியர்களிடையேயும் பல்வேறு கருத்துகள். உலக வரலாற்றின் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த வெவ்வேறு நபர்கள் அந்தந்தக் காலத்தைப் பொறுத்து உலக அதிசயங்களின் பட்டியலைத் தந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இதில், ஒன்று மற்றொன்றுடன் மாறுபட்டு - ஒருசில விடுபட்டோ..., வேறுசில புதிதாகச் சேர்க்கப்பட்டோ பட்டியலாகியுள்ளன.

வரலாற்று நிகழ்வுகளை அடையாளங்காட்ட அளவுகோலாக இன்றைக்குப் பயன்படுத்தப்படும் - ஏசு கிறிஸ்துவின் பிறப்புக்கு முன்பிருந்தே, உலக அதிசயங்கள் பற்றி மக்கள் பேச, கருத்துச் சொல்லத் தொடங்கிவிட்டார்கள் எனத்தெரிகிறது.

ஏசு பிறப்பதற்கு 2500 ஆண்டுகளுக்கு முன்பே உலக அதிசயம் உருவாகியுள்ளது. இன்னும் சொல்லப்போனால் அந்தக் காலம்தொட்டு, இன்றுவரை உள்ள எல்லா வரலாற்று ஆசிரியர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உலக அதிசயமும் உண்டு. கருத்து மாறுபாடின்றி அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அந்த அதிசயம் - எகிப்து நாட்டில் இன்றும் தலைநிமிர்ந்து நிற்கும் அந்த உன்னதப் பிரமிடு.

உலகின் மிகமிக மூத்த அதிசயம் - இந்தப் பிரமிடுதான். இது உருவானதாகச் சொல்லப்படும் கி.மு. 2590-ம் ஆண்டிலிருந்து, இன்றுவரை - அதாவது கிட்டத்தட்ட 4580 ஆண்டுகள் வயது கொண்டது இந்த அதிசயம். உருவான காலத்தை வைத்தும், மற்ற விஷயங்களிலும் இதற்கு இளையதான பல அதிசயங்களைத் தாண்டி இது இன்றும் தொடர்ந்து வருகிறது. காணக் கிடைக்காமல், மண்ணோடு மண்ணாகிப் போன இதன் இளைய அதிசயங்களுக்கு மாற்றாகத்தான் வேறு சிலவற்றை..., தன் கண்ணால் கண்டவற்றை பிற்காலத்து வரலாற்று ஆசிரியர்கள் தங்கள் பட்டியலில் சேர்த்தனர். இப்படி அந்தந்தக் காலத்தில் இடைவெளியை இட்டு நிரப்ப பலரும் முயன்றதில் உலக அதிசயங்களின் பட்டியலில் குழப்பங்களும் கருத்து வேறுபாடும் உருவானது.

பிரமிடு உருவான காலம் முதல் இன்றுவரை - ஏதேனும் ஒரு கால கட்டத்தில், உலக அதிசயமாகப் போற்றப்பட்ட பலவற்றைப் பற்றியும், முடிந்தவரை தகவல்கள் திரட்டப்பட்டு இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.


1.பண்டைய அதிசயங்கள்.

2. மறக்கப்பட்ட, இடைக்கால அதிசயங்கள்.


மேற்கண்ட இவ்விரண்டும் மனிதனால், அவனது அறிவு, கற்பனை, கலை நயம், படைப்பாற்றல் போன்றவற்றால் உருவாகி மற்றவர்களை வியக்க வைத்தவை.

இவற்றையும் தாண்டி மனித ஆற்றலுக்குப் போட்டியாக, இயற்கையாகவே உருவாகி மனிதனைப் புல்லரிக்கச் செய்த அதிசயங்களும் உண்டு.
 

தொகுப்பு:சந்திரன்


  
 
 
  
http://www.ambalam.com/essay/wonder/introduction.html

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails