சீனாவில் கோலாகலம்: ஒலிம்பிக் போட்டி நாளை தொடக்கம்
பெய்ஜிங், ஆக. 7-
உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. 2004-ம் ஆண்டுக்கான போட்டி கிரீஸ் தலைநகர் ஏதன்சில் நடந்தது.
2008-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி சீனா தலைநகர் பெய்ஜிங்கில் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி நாளை (8-ந்தேதி) முதல் 24-ந்தேதி வரை நடக்கிறது.
ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா பெய்ஜிங் நகரில் நாளை கோலாகலமாக நடக்கிறது. 2008 ஆகஸ்ட் 8-ந்தேதி (08.08.08) சீன நேரப்படி இரவு 8.08 மணிக்கு (இந்திய நேரம் மாலை 5.38) தொடக்க விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன.
200-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கின்றன. அனைத்து நாட்டு வீரர், வீராங்கனைகள் தொடக்க விழாவில் அணிவகுத்து வருவார்கள். கண்கவர் கலை நிகழ்ச்சி, வானவேடிக்கைகள் நடைபெறும். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், பிரான்சு அதிபர் நிகோலஸ், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ருட் உள்பட 101 நாட்டு தலைவர்கள் தொடக்க விழாவில் பங்கேற்கிறார்கள்.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும் தொடக்க விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். கனடா, ஜெர்மனி தலைவர்கள் இதில் பங்கேற்கவில்லை.
திபெத்தியர்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளின் அச்சுறுத்தல் இருப்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
17 நாட்கள் நடைபெறும் இந்தப்போட்டியை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர்.
தொடக்க விழா நடைபெறும் பெய்ஜிங் தேசிய ஸ்டேடியம். 91 ஆயிரம் பேர் அமரலாம். தடகளம், கால்பந்து போட்டிகள் மற்றும் நிறைவிழா இங்குதான் நடக்கிறது. இந்த ஸ்டேடியம் பறவை கூடு என்று அழைக்கப்படுகிறது.
No comments:
Post a Comment