|
அமெரிக்க குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சாரா பாலினை சந்தித்த பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, அவரை பார்த்து, அவரது அழகில் மயங்கி அசடு வழிந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. அதேநேரத்தில், அதே சாரா பாலினை சந்தித்த பிரதமர் மன்மோகன்சிங்கின் மிடுக்கான செயல்பாடுகளை கண்டு, பத்திரிகையாளர்கள் பலரும் பாராட்டினர். பெரிய பொருளாதார நிபுணரை சந்திக்கிறோம் என, நினைத்து சாரா பாலின் பதட்டம் அடைந்ததையும் அவர்கள் கண்டனர். பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் என்பதையும், உலகின் முதல் தர பொருளாதார நிபுணர் என்பதையும், மன்மோகன்சிங் தன் செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்தினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா.,சபையின் வருடாந்திரக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் அங்கு சென்றுள்ளனர். பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தானின் புதிய அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோரும் சென்றுள்ளனர். அப்படிச் சென்றுள்ள தலைவர்கள், பன்னாட்டு தலைவர்களுடன் மட்டுமின்றி, அமெரிக்க குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களையும் சந்தித்துப் பேசி வருகின்றனர். அந்த அடிப்படையில், குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரும், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண முன்னாள் அழகு ராணியுமான சாரா பாலினையும் சந்தித்து வருகின்றனர். சாரா பாலின் அழகி, அதிகம் அரசியல் அனுபவம் இல்லாதவர். அவர் விதவிதமாய் டிரஸ் அணிந்து ஆளும் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரம் செய்கிறவர் என்று பெயர் பெற்றவர். கடந்த புதனன்று சாரா பாலினை, பாகிஸ்தான் அதிபர் சர்தாரி சந்தித்துப் பேசினார். அப்போது, "நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். ஒட்டு மொத்த அமெரிக்காவும் உங்கள் மீது ஏன் பைத்தியமாக இருக்கிறது என்பது எனக்கு இப்போதுதான் புரிகிறது"என்று சர்தாரி கூறினார். அப்போது அங்கிருந்த உதவியாளர் ஒருவர், போட்டோ எடுப்பதற்காக இருவரையும் கைகுலுக்கும்படி கேட்ட போது, "நான் மீண்டும் போஸ் கொடுக்க வேண்டுமா?"என புன்சிரிப்புடன் கேட்டார். உடனே சர்தாரி, "உதவியாளர் வலியுறுத்தினால், நான் உங்களை தழுவிக் கொள்வேன்"என, அசடு வழியும் வகையில் பேசினார். அவரின் இந்தப் பேச்சை கேட்ட சாரா பாலின், எதுவும் கூறாமல், புன்னகையை மட்டுமே பதிலாக தந்தார். அதிபர் சர்தாரியின் சந்திப்புக்குப் முன்னதாக, பிரதமர் மன்மோகன்சிங்கை சாரா பாலின் சந்தித்தார். அப்போது, மன்மோகனின் முகம் இறுக்கமாக காணப்பட்டது. அதேநேரத்தில், அரசியலில் மற்றும் சர்வதேச விவகாரங்களில் சிறிதும் அனுபவம் இல்லாத நாம், மிகப்பெரிய பொருளாதார நிபுணரை, மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரை சந்திக்கிறோம் என்பதால், சாரா பாலினும் ஒரு தர்ம சங்கடமான நிலைமைக்கு ஆளானார். சர்தாரியைப் போல அசடு வழியாமல், பிரதமர் மன்மோகன்சிங் அவரை லேசாக கையைப் பிடித்து குலுக்கியது, சாராவை மட்டுமின்றி, அங்கிருந்த நிருபர்களையும் வியப்படைய வைத்தது. சர்தாரியை சந்திக்கும் போது, சாதாரணமாக இருந்த சாரா பாலின், பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்கும் போது, சற்று பதட்டத்துடன் காணப்பட்டார். பிராந்திய பிரச்னைகள், எரிசக்தி பாதுகாப்பு உட்பட பல பிரச்னைகள் குறித்து, சாரா பாலினுக்கு பிரதமர் மன்மோகன்சிங் விளக்கினார். |
No comments:
Post a Comment