பாகிஸ்தானில்
ஆப்கானிஸ்தான் தலைமைத் தூதர், துப்பாக்கி முனையில் கடத்தல்
கார் டிரைவர் சுட்டுக் கொலை
இஸ்லாமாபாத், செப்.23-
பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் தலைமை தூதரை துப்பாக்கி முனையில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். அவரது கார் டிரைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
டிரைவர் சுட்டுக் கொலை
பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தலைமைத் தூதர் அப்துல் காலிக் பராகி. இவர், நேற்று வடமேற்கு நகரான பெஷாவர் அருகேயுள்ள உள்ள ஹயாபாத்தில் இருக்கும் தனது வீட்டில் இருந்து ஒரு தனியார் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, ஓரிடத்தில் மறைந்திருந்த அடையாளம் தெரியாத 3 பேர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டவாறு பாராகியின் காரை வழிமறித்தனர். பின்னர், காரை ஓட்டி வந்த டிரைவரை அவர்கள் சுட்டுக் கொன்றனர்.
தூதர் கடத்தல்
அதன் பிறகு, அந்தக் காரில் 3 பேரும் திபுதிபுவென ஏறினார்கள். மின்னல் வேகத்தில் துப்பாக்கி முனையில் அங்கிருந்து பராகியை கடத்திச் சென்றனர்.
பெஷாவர்-இஸ்லாமாபாத் நகரங்களுக்கு இடையே அடிக்கடி பயணம் செய்யும் பராகி வழக்கமாக தனது பாதுகாப்பு வீரர்களுடன் செல்வது வழக்கம்.
ஆனால், நேற்று அவர் காரில் பயணம் செய்தபோது பாதுகாப்புக்கு வீரர்கள் யாரையும் உடன் அழைத்து செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தெரிந்து கொண்டு தீவிரவாதிகள் அவரை கடத்திச் சென்று விட்டனர்.
யாரும் பொறுப்பேற்கவில்லை
ஆப்கானிஸ்தான் தலைமைத் தூதர் கடத்தப்பட்டதை இஸ்லாமாபாத்தில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரக பொறுப்பு அதிகாரி மஞ்சூன் குலாப் உறுதி செய்தார். இதே போல் பாகிஸ்தான் உள்துறை மந்திரியும், பராகி கடத்தப்பட்டதை உறுதி செய்தார்.
அப்துல் காலித் பராகியை கடத்தியது யார் என்று தெரியவில்லை. அவரது கடத்தலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தான் தூதர் கடத்தப் பட்டதைத் தொடர்ந்து பெஷாவர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதே பகுதியில்தான் கடந்த பிப்ரவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதர் தாரிக் அசிஸ்சுதின், தலீபான் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டது நினைவிருக்கலாம்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=440284&disdate=9/23/2008
No comments:
Post a Comment